நேற்று சீனி ஒரு விஷயம் சொன்னார். ஸ்விக்கியில் இன்ஸ்டாமார்ட் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் போய் மேரினேட்டட் என்ற பகுதிக்குள் போய் மாமிசம் என்ற உட்பிரிவுக்குள் சென்றால் நீங்கள் விரும்பிய அசைவ உணவு மேரினேட் பண்ணியதையே கொண்டு வந்து தருகிறார்கள். நேற்று நான் அப்படி ஒரு ’தாய்’ ஸ்டைலில் செய்த ப்ரான் வரவழைத்து அவர்கள் சொன்னபடியே வாணலியில் வைத்து கொதிக்க வைத்து சாப்பிட்டேன். அற்புதமாக இருந்தது.
நான் தாய் உணவுக்கு அடிமை. ஆஹா, கை மேல் இருக்கிறதே தாய் உணவு என்று இன்றே இக்கணமே வரவழைத்து விட வேண்டும் என்று எண்ணி, முதலில் ப்ரான் ஃப்ரையிலிருந்து தொடங்கலாம் என்று அன்னபூரணியிடம் சொன்னேன். அன்னபூரணியும் உடனடியாக ஆர்டர் கொடுத்தார். மேரினேட்டட் என்றால் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும் என்று தெரிந்திருந்ததால் பதினோரு மணிக்கே ஆர்டர் கொடுத்தாகி விட்டது.
ஒரு மணிக்கு வரும். ஆனால் ஆர்டர் கொடுக்கும் போது இறால் வறுவல் இல்லை. செமி க்ரேவிதான் இருந்தது. கோவா ஸ்டைல். சரி என்றேன். இன்று எப்படியும் இறால் சாப்பிட்டே தீருவது.
பன்னிரண்டரைக்கு ஒரு தெரியாத எண்ணிலிருந்து ஃபோன். தெரியாத எண்ணிலிருந்து நேரடியாக அழைப்பு வந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். ஏன், வாட்ஸப்பில் தான் இன்னார் என்று தகவல் சொன்னால் என்ன? இருந்தாலும் ஸ்விக்கி ஆளாக இருப்பார் என்று எண்ணி எடுத்தேன். ஆங், சொல்ல மறந்து விட்டேன். ஸ்விக்கியில் ப்ரான் ஐட்டம் இல்லை என்று லிஷியஸ் கடையிலேயே ஆர்டர் கொடுத்து விட்டார் அன்னபூரணி.
லிஷியஸ் ஆள்தான் அழைத்தது. என் வீடு எங்கே இருக்கிறது, என்ன அடையாளம் என்று கேட்டுக் கொண்டார். இங்கே உள்ள டோர் டெலிவரி ஆட்கள் எல்லோருமே சுத்தமாக மூளையே இல்லாதவர்கள் போல்தான் நடந்து கொள்வார்கள். அடையாளத்தோடு விலாசம் கொடுத்தாலும் நாலு தடவை ஃபோன் செய்து கேட்டு விடுவார்கள். அடையாளம் சொன்னேன்.
ஒரு மணிக்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் பணிப்பெண் நின்று விட்டார். வருகின்ற அத்தனை பேரும் வேலை செய்யத் தெரியாமல் திணறுவதைப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்களாகவே நின்று விடுகிறார்கள். இத்தனைக்கும் மற்ற வீடுகளில் கொடுப்பதை விட இரண்டு மடங்கு சம்பளம் இங்கே. வேலை செய்யத் தெரிவதில்லை என்றால் எப்படி? இட்லித் தட்டில் மாவுத் துணுக்குகள் சிமெண்ட் போல் ஒட்டிக் கொண்டிருக்கும். மறுநாள் அதில் எப்படி இட்லி போட முடியும்? ஈரமாக இருக்கும்போதே நன்றாகத் தேய்த்திருக்க வேண்டும். இத்தனைக்கும் நாங்கள் நீரில் ஊறப்போட்டு வைத்திருப்போம். பாத்திரங்களைக் காய விடுவதில்லை.
காஃபி குடிக்க தம்ளரை எடுத்தால் அடியில் கரையாக இருக்கும். தோசைக் கரண்டியில் மாவு ஒட்டிக் காய்ந்து கிடக்கும். இப்படியே எல்லாவற்றிலும். நாம் இதைக் குறிப்பிட்டு விட்டால், நின்று விடுவார்கள்.
என் கை ஈரமாக இருந்ததால் போனை எடுக்க முடியவில்லை. அவந்திகாவை எடுக்கச் சொன்னேன். போக்குவரத்து நெரிசலால் நேரமாகி விட்டது, ஆர்டரைக் கொண்டு வரவா, ரத்து செய்து விடலாமா என்று கேட்டுத்தான் ஃபோன். கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டாள்.
வந்தது. பிரித்தது அவந்திகா.
ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டாள்.
நான் உனக்காகக் காலை ஏழு மணிக்கே எழுந்து கடல்கரைக்குப் போய் வலையில் கிடைக்கும் புத்தம் புதிய மீன் வாங்கி வந்து சமைத்துத் தருகிறேன், நீ என்னடாவென்றால் இந்தக் கருமத்தை வாங்கிச் சாப்பிடுகிறாய், நீ உருப்படவே மாட்டாய். என்றைக்காவது நான் வாங்க மாட்டேன், சமைக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறேனா? கொரோனா காரணமாக நான் போகவில்லை. நீயே வாக்கிங் போகும் போது வழியில் உள்ள அரசாங்கக் கடையில் வாங்கி வரலாமே? சமைத்துத் தருவேனே? இத்யாதி. இத்யாதி.
இந்த இறால் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருந்தது. பத்தாம் தேதி தயாரிக்கப்பட்ட பாக்கெட். பதினேழு வரை சமைக்கலாம்.
பத்தாம் தேதி என்று தெரிந்ததும் உக்கிரம் அதிகமாகி விட்டது.
ஏய்யா, காலையில் வலையில் கிடைத்த மீனைச் சாப்பிடக் கூடிய மெரினா பீச்சில் வாழ்ந்து கொண்டு உனக்கு ஏன் தலையெழுத்து?
அதிலும் இது என்ன குழம்பு? இதில் என்னென்ன போட்டிருக்கும்? கருமம். கண்றாவி.
ஊரே சொல்லுதும்மா, இது சூப்பராயிருக்கும்னு.
ஊர் என்றால் யார்?
முழித்துக் கொண்டேன். சீனி பெயரைச் சொன்னால் கொலை விழும். ராம்ஜி பெயர் மட்டுமே வீட்டில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ராம்ஜி பிராமணர். சைவர். அதனால் அவர் சொல்ல வாய்ப்பில்லை. இந்த குகைக்குள் நுழைய இன்னொரு சாவி உண்டு. அது அன்னபூரணி. அன்னபூரணிக்கு நம் வீட்டில் அப்படி ஒரு மரியாதை. அன்னபூரணி சொன்னது.
ஏன், அவங்க நல்லா சமைப்பாங்கன்னு சொல்லியிருக்கியே? அவங்க ஏன் இந்தக் கருமத்தையெல்லாம் வாங்கணும்?
அது ரொம்ப பிஸியான பொண்ணும்மா. அப்போ வாங்கியிருக்கும்.
வேற யார் சொன்னா? ஏதோ ஊரே சொன்னுதுன்னியே?
ராஜா வெங்கடேஷைத்தான் வீட்டில் தெரியாது. அதனால் அவர் பெயரையும் சொல்லி அந்த கண்டத்திலிருந்து தப்பினேன்.
பாக்கெட்டிலிருந்த குழம்பையெல்லாம் குப்பையில் கொட்டி விட்டு இறாலை மட்டும் தனியே எடுத்து அவளே மேரினேட் பண்ணினாள். வறுத்தாள்.
என் வாழ்நாளில் அப்படி ஒரு இறால் வறுவல் சாப்பிட்டதில்லை.
நான் ஒவ்வொரு முறை சமைக்கும்போதும் இதேதான் சொல்கிறாய்.
இனிமேல் என்ன செய்வது? ஏன் அவந்திகாவே சமைக்க மாட்டார்களா? தாய் எல்லாம் சமைக்க மாட்டாள்.
ஆக, அந்த தாய் இறால் சூப் சாப்பிட இன்னும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அவந்திகா மும்பை போனால் வாங்கி சமைத்து சாப்பிட்டு விடலாம்.