கொல்லும் இச்சை பற்றி உங்கள் கருத்து என்ன சாரு? பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் எதாவதொரு சந்தர்ப்பத்தில் கொல்லும் இச்சையை அடைகிறார்கள் என்பது உண்மையா? நிறையப்பேர் சிறு உயிர்களை அல்லது தாவரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம் அந்த இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது. எழுத்தாளன் தான் வாழாத பல வாழ்க்கைகளைத் தன் எழுத்தினூடாக வாழ்ந்து பார்க்க முயலுகிறான் என்பது உண்மையானால் இந்தக் கொல்லும் இச்சையையும் அவன் தன் எழுத்தினூடாகக் கடந்து விட முடியுமா?
ஜனனி கிருஷ்ணா
பதில்: Killing instinct பற்றிக் கேட்கிறீர்கள். ஒரு புத்தகமாக எழுத வேண்டிய கேள்வி. இருந்தாலும் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். ஒரு உயிரைக் கொலை செய்கின்ற அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது பற்றிப் பார்த்து விட்டு கொல்லும் இச்சைக்குத் தாவுவோம். ஆதியில் ரோம மன்னனுக்கு அவனது குழந்தைகளையும் அடிமைகளையும் கொல்லும் அதிகாரம் இருந்தது. தன்னால் உருவாகின்றவர்களை அழிப்பதற்கும் தனக்கு உரிமை உள்ளதாக அவன் நினைத்தான். இன்றைய தாய் தகப்பனுக்கும் கூட இதைப் பொருத்திப் பார்க்கலாம். கொலை என்று போக மாட்டார்கள். ஆனால் பிள்ளையின் வாழ்வு பற்றி முடிவுகளை எடுக்கும் உரிமை பிள்ளைக்கு இல்லை, அவனை உருவாக்கிய எனக்கே இருக்கிறது என்றே ஒவ்வொரு தகப்பனும் தாயும் நினைக்கிறார்கள். இதுவும் கொல்லும் அதிகாரத்துக்கு இணையானதுதான். இங்கேதான் என் வாழ்வைத் தீர்மானிப்பதற்கு நீ யார் என்ற கேள்வி எழுகிறது.
இந்த அதிகாரத்தை உயிரியல் அதிகாரம் (Bio-power) என்று அழைக்கிறார் மிஷல் ஃபூக்கோ. இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு நீங்கள் செவ்வாய் கிரகம் வரை பயணிப்பதற்கான பயணச் சீட்டை நான் வழங்கி விட்டேன். எப்படி என்று வழி சொல்கிறேன்.
கொலை என்பது ஒரு உயிரை அழிப்பது. அப்படியானால் உயிரை உருவாக்குவது செக்ஸ். ஆக, மரணமும் ஜனனமும் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கிறது. ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) எழுதிய கண்ணின் கதை என்ற சிறிய நாவலைப் படித்துப் பாருங்கள். அதில் இந்த இரண்டையும் பற்றித்தான் ஆய்வு செய்திருப்பார். நம் முன்னோர்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள். அதனால்தான் கோவில்களில் பாலியல் சிற்பங்களை உருவாக்கி வைத்தார்கள்.
கோவில் என்பது என்ன? மரணத்தின் இல்லம். ஒருவர் இறந்து விட்டால் இறைவன் அடி சேர்ந்து விட்டார் என்கிறோம். உயிர் திரும்பவும் ஜனனம் எடுக்கிறது என்கிறது ஆன்மீகம். அது காம இச்சையின் மூலம் நடைபெறுகிறது.
ஆக, உயிரைக் கொண்டாடும் வாழ்வியல் தத்துவமாக காமமும், உயிரின் அழிவைச் செயல்படுத்தும் மரணமும் வாழ்வின் இரண்டு அச்சுகளாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டின் இணைவில் ஒருவித லயம் இருக்கிறது. அந்த லயம் கெட்டால்தான் கொல்லும் இச்சை என்ற நோய்மையில் வீழ்கிறோம். ஜனனி, உங்கள் கேள்விக்கான பதிலையே நான் “பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்” என்ற சிறுகதையாக எழுதியிருக்கிறேன். அதில் வரும் ஒரு ராணுவ அதிகாரி (பெயர் மறந்து விட்டேன்) மூட்டைப்பூச்சிகளைக் கொன்று கொண்டே இருப்பான். அது நசுங்கும் போது கேட்கும் சப்தம் அவனைக் கிளுகிளுக்க வைக்கிறது.
இதனால்தான் சிலர் – லயக்கேடு உண்டானவர்கள் – சரீர சேர்க்கையின் போது எதிராளியைக் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறார்கள். Sado-Masochist கிளப்புகளில் நுழைந்து காசு கொடுத்தால் நம்மை சவுக்கால் அடித்து ஆர்கஸம் வரவழைப்பார்கள்.
கொல்லும் இச்சை என்று மட்டும் அல்ல, எல்லா விதமான இச்சைகளையும் கலையாக்குபவனே கலைஞன். அந்த வகையில் ஒருவருக்குக் கடவுளை நேரில் பார்க்க வேண்டும், ஸ்பரிஸித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தெருவில் செல்லும் பரதேசி ஒருவர் ”நீ ஆசைப்படும் கடவுளை நினைத்துப் பாடு” என்று சொல்லி விட்டுப் போனார். இவரும் பாடினார். நாற்பது ஆண்டுகள் மனமுருகிப் பாடினார். கடவுளும் வந்தார். ஏ மானிடர்களே, நான் ஒன்றும் உருவெளித் தோற்றத்தில் பார்க்கவில்லை, நேரில் கண்டேன் என்கிறார் பார்த்தவர், பாடியவர். தியாகராஜர் என்று பெயர்.
நானும் எனது எல்லா இச்சைகளையும் எழுத்தாக்கிக் கொண்டிருக்கிறேன். அதில் ஜனனமும் உண்டு, மரணமும் உண்டு.