3. கொல்லும் இச்சை பற்றிய பதிலின் தொடர்ச்சி…

ஜனன மரணம் பற்றிய பதிலில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டு விட்டது.  லா பெத்தி மோர்த் (La petite morte) என்று சொல்வார் ஜார்ஜ் பத்தாய்.  சிறிய மரணம்.  கலவியின் உச்ச இன்பம் மரணத்துக்கு ஒப்பானது என்கிறார். கலவியில் ஈடுபடுவோர் தம்மை முழுதாக மறக்கிறார்கள் அல்லவா, அதனால்தான் அது சிறிய மரணம். 

ஆக, இதையும் சேர்த்துக் கொண்டால், கொல்லும் இச்சை என்பதை நாம் கலையாகவும், சிருஷ்டியாகவும் உருமாற்றம் செய்து விடலாம்.   

4. நாகூரில், போக்குவரத்து குறைந்த, உள்ளடங்கிய தெரு ஒன்றில், இணையம் ஏ.ஸி. உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட விசாலமான சுத்துக்கட்டு ஓட்டு வீடு ஒன்றில், தாங்கள் விரும்பினால் அங்கு நிரந்தரமாக குடி பெயரலாம் என்ற வாய்ப்பு அமையும் எனில், அதைத் தேர்ந்தெடுப்பீர்களா? ஆம் எனில், முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?  மறுப்பீர்கள் எனில்,

மிக முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?

யோகேஸ்வரன் ராமநாதன்.

பதில்: என் தாய் வழி மாமாவின் பெயர் சுப்பையா.  அம்மாவின் குடும்பத்தில் எல்லா ஆண்களும் ரவுடிகளாக இருக்க சுப்பையா மாமா மட்டும் கரூரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் போய் விட்டார்.  தான் வளர்ந்த நாகூர்ப் பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லை.  நாகூர் அவருக்கு ஒரு கொடுங்கனவு.  அவரது ஐம்பதாவது வயதில் வந்தவர் எங்கள் தெருமுனையில் இருந்த கொசத்தெரு என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து விட்டு, தன்னுடைய சிறிய வயதிலும் அந்தத் தகரம் அதே ஸ்திதியில்தான் இருந்தது என்றார்.  ஊரும் அப்படியே இருக்கிறது, காலமே உறைந்து விட்டது போல் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்.  பியானிஸ்ட் படத்தில் வரும் அழிந்த நகரம் ஞாபகம் இருக்கிறதா, அந்த மாதிரி ஒரு ஊர் நாகூர். 

நான் அங்கே இருந்த போது இருந்த புன்னை மரங்களெல்லாம் கூட இப்போது அங்கே இல்லை.  அந்தப் பகுதியில் குடிசைகள் வந்து விட்டன.  ஊரில் இருந்த பத்துப் பதினைந்து குளங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் தூர்ந்து விட்டன.  எங்கு பார்த்தாலும் மூத்திர நாற்றம்.  தர்ஹாவைச் சுற்றிலும் கூட அதே நிலைதான்.  இத்தனை பெரிய யாத்ரீகர் ஊரில் ஒரு சரியான கழிப்பறை கூட இல்லை. 

எனக்குத் தெரிந்த யாருமே நாகூரில் இல்லை.  என்னோடு படித்தவர்களோடு, இளம் வயது நண்பர்களோடு பேச என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை.  ரஜினி எப்படி தன் கண்டக்டர் கால நண்பர்களோடு பேசிப் பழகிக் கொண்டிருக்கிறார் என்று எனக்குப் புரிவதே இல்லை.  அவர் மனதளவில் இன்னமும் கண்டக்டராகவே இருக்கிறாரோ என்னவோ?  நான் அப்படி காமன்மேனாக இல்லையே?  எனக்குக் காமன்மேன்களின் உலகத்தில் பேசவோ பழகவோ ஒன்றுமே இல்லை.  நான் இளம் வயதிலேயே பணம் என்ற விஷயத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே வந்தவன்.  லௌகீக வாழ்விலிருந்தும் அந்நியப்படுத்திக் கொண்டவன்.  நான் யாரோடு என்ன பேச முடியும்? 

இலக்கியம் அறிந்தவர்களோடு கூட பேச முடியாத நிலையில்தான் 40 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தேன்.  மதுவுடன் கூடிய இரவு விவாதங்களில் நான் ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.  ஏனென்றால், அங்கே கூடியிருக்கும் ஐந்து பத்து நண்பர்களும் என் எழுத்தை குப்பை என்று நினைப்பவர்கள்.  இப்படிப்பட்ட நண்பர்களோடுதான் உறவில் இருந்தேன்.  கடந்த பதினைந்து  ஆண்டுகளாக அவர்களை என் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி விட்டேன்.  அதற்குக் காரணமாக இருந்தது என் வாசகர் வட்டம். 

வாசகர் வட்டத்தைப் பற்றி பல நண்பர்கள் இழிவாகப் பேசிக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.  என் காது படவே பேசுகிறார்கள்.  என்னிடமே பேசுகிறார்கள்.  வாசகர் வட்டம்தான் என்னை பதினைந்து ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 

என் எழுத்தை குப்பை என்று நினைப்பவர்களோடு இலக்கியம் பேசுவதும் குடிப்பதும் எத்தனை அவமானகரமானது தெரியுமா? ஒவ்வொரு சந்திப்பும் அடிதடியில் முடியும்.  ஒரு அடிதடியில் என் முன் பல் ஒன்று நிரந்தரமாகப் போய் விட்டது.   அந்த நரகத்திலிருந்து என்னை மீட்டெடுத்தது வாசகர் வட்ட நண்பர்கள்தான்.   இவர்கள் என் எழுத்தைக் கொண்டாடுபவர்கள். 

நாகூர் என்பது எனக்கு ஒரு நினைவு.  இனிமையான நினைவு என்றும் சொல்ல முடியாது.  பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது ஒருவித மனநிலைக்குப் போவோம் இல்லையா, அவ்வளவுதான்.  காரணம் என்னவென்றால், அது  முடிந்து போனது.  இனிமேல் கிடைக்காது.  என் விஷயத்தில், பழைய புகைப்படங்களைப் பார்க்கும் மனநிலை கூட இல்லை.  தர்ஹா மட்டுமே இப்போது எனக்கு நாகூர்.  அங்கே உள்ள குளுந்த மண்டபம், கொமஞ்சான் சட்டி, எஜமானின் அருள்.  இது போதும்.  இதற்கு வருடம் ஒருமுறை ஒருநாள் போய் வந்தால் போதும்.  அதற்கும் கூட அங்கே உள்ள சாபுமார் எக்கச்சக்கமாகக் காசு கேட்கிறார்கள்.  சீனியோடு போன போது சீனியிடம் 5000 ரூ. கேட்டார்களாம்.  இவர் 500 ரூ. கொடுத்தபோது “உங்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க எஜமானின் பரக்கத் கிடைக்கட்டும்” என்று ஆசீர்வாதம் செய்து அந்த ஐநூறையும் திருப்பிக் கொடுத்து விட்டார் சாபு. 

எஜமானை மானசீகமாகவே வணங்கிக் கொள்கிறேன். 

நான் வசிக்கும் சாந்தோம் வீட்டுக்கு அருகில் சாமர்சட் என்று ஒரு நட்சத்திர விடுதி இருக்கிறது.  அங்கேதான் சில ஆண்டுகள் கமல் வசித்தார்.  சமீபத்தில்தான் அங்கிருந்து குடி பெயர்ந்தார்.  அம்மாதிரி இடங்களில் வசிக்கவே எனக்குப் பிடிக்கிறது.  அங்கேதான் என்னால் இயல்பாக வாழ முடிகிறது.  விடுதியிலேயே இருபத்து நாலு மணி நேரமும் காஃபி ஷாப் இருக்கும்.  ஜிம் இருக்கும்.  நீச்சல் குளம்.  விஸ்தாரமான புல்வெளி.  இதெல்லாம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் சாத்தியம்.  மூன்று நட்சத்திரம் கூட எனக்கு வசதி குறைவுதான். 

சமீபத்தில்தான் தெரிந்தது, சாமர்செட் நட்சத்திர விடுதி இல்லையாம்.  அது ஒரு சர்விஸ் அபார்ட்மெண்ட்.  அப்படிக் கட்டியிருக்கிறார்கள்.  அத்தனை வசதி.  ஒரு நாள் வாடகை ஐயாயிரமோ பத்தாயிரமோ.  நாமே விலைக்கும் வாங்கிக் கொள்ளலாம்.  ஏழெட்டு கோடி இருக்கும்.  வீட்டு வேலை என்று நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.  படுக்கை விரிப்பை மாற்றுவதற்குக் கூட ஆட்கள் உண்டு. 

பொதுவாகவே எனக்கு சின்ன வயதிலிருந்து ஒரு அரிஸ்டோக்ரட் மாதிரி இருப்பதில்தான் மனம் நிம்மதியாகிறது.  அதனால்தான் இங்கே சென்னையில் அமேதிஸ்ட், ப்ரூ ரூம் போன்ற இடங்களில் நண்பர்களை சந்திக்கிறேன்.  சினிமாத் துறையாக இல்லாமல் பிச்சைக்கார எழுத்துத் துறை என்பதால் அமுக்கிக் கொண்டு இருக்கிறேன்.  மற்றபடி நாகூர் போன்ற ஒரு சிற்றூரில் வாழ்வது என் இயல்புக்கு ஒவ்வாதது. 

அருண்மொழி நங்கையின் பனி விலகுவதில்லை நூல் வெளியீட்டு விழாவில் கூட நாஸ்டால்ஜியா ஒரு நோய் என்று குறிப்பிட்டேன்.  அதிலும் எழுத்தாளர்களைத்தான் இந்த நோய் ரொம்பப் பிரியமாய்ப் போய்த் தாக்குகிறது.  தன் ஊரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதுவார்கள்.  போய்ப் பார்த்தால் அது பீக்காடாக இருக்கும்.  வாழ்ந்தால் இஸ்தாம்பூல் மாதிரி ஒரு ஊரில் வாழ வேண்டும்.  உலகிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த ஊர் இஸ்தாம்பூல்.  தில்லியும் – பழைய தில்லி – ஒரு அற்புதமான ஊர்.  புதையல்.  ஆனால் எந்த வட இந்திய ஊரிலும் நம்மால் வசிக்க முடியாது.  இனவாதம் அதிகம். நம் நிறத்தை வைத்து எதற்கெடுத்தாலும் அவமானப்படுத்துவார்கள். 

வாசகர் வட்ட நண்பர்கள் ஒரு வனத்தின் நடுவே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துள்ளார்கள்.  சுற்றி வர அடர்ந்த வனம்.  அரை கிலோமீட்டர் நடந்தால் ஐரோப்பிய உணவும், இட்லி தோசையும் கிடைக்கும்.  அது ஒரு அற்புதமான இடம்.