சொற்கடிகை : 18

வழக்கம் போல் போன் பண்ணினார் டார்ச்சர் கோவிந்தன்.  ”நேற்று இன்னார் வந்தார்.  அவர் சொன்னதைக் கேட்டு மனசு பேஜார் ஆகி விட்டது.” 

டார்ச்சர் ஆரம்பம் என்ற விசனத்துடன் “என்ன சொன்னார்?” என்றேன்.

அன்று யுவன் பேசியதுதான் பெஸ்ட் என்றார்.

ஆமாம், அதில் மனசு பேஜார் ஆக என்ன இருக்கிறது?  எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?

எந்த இடமாக இருந்தாலும் அங்கே நீங்கள்தான் சாரு பெஸ்டாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மனசு பேஜார் ஆகி விடுகிறது. 

ஆ, இது என்ன வம்பாகப் போயிற்று?  அந்த விழாவில் எஸ்.ரா. இருந்திருந்தால் எஸ்.ரா.தான் பெஸ்டாக இருந்திருப்பார்.  யுவன், எஸ்.ரா., தமிழருவி மணியன் மூவரும் பேசியிருந்தால் தமிழருவிதான் பெஸ்டாக இருந்திருப்பார்.  ஏனென்றால், எனக்குத் தெரிந்து தமிழருவி மணியனின் பேச்சில் தமிழ் அருவி போல் கொட்டும்.  ஒருமுறை அவர் புதுமைப்பித்தன் பற்றி இரண்டு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றியதைக் கேட்டு மிரண்டு போயிருக்கிறேன்.  அவரை விடவும் பெஸ்டும் இருக்கலாம்.  எனக்கு அந்த விஷயத்தில் அத்தனை ஞானம் இல்லை.  மட்டுமல்லாமல் யுவன் ஒரு சிறந்த உரையாடல்காரரும் கூட.  தமிழ் இலக்கியவாதிகளிடையே மிகச் சிறப்பான, ஈடு இணையே இல்லாத உரையாடல்காரரான தேவதச்சனின் நண்பர் யுவன்.  பல ஆண்டுகள் பல மணி நேரங்கள் தேவதச்சனிடம் உரையாடியவர்.  ஒரு ஆழமான தத்துவ நூலைப் படிக்கும் அளவுக்கு நிகரான அனுபவத்தைத் தரக் கூடியது தேவதச்சனுடனான உரையாடல்.  சொற்பொழிவு ஆற்ற மாட்டார்.  பேச்சினூடே உங்களையும் உள்ளிழுத்துக் கொள்வார்.  இரவு பகல் பூராவும் அவருடன் உரையாடி இருக்கிறேன்.  ஓரிரு முறைதான் இருக்கும்.  ஆனால் தென்மாவட்டத்துக்காரர்கள் அதை வருடக்கணக்கில் செய்திருக்கிறார்கள்.  ஆனால் அப்படிப்பட்ட தேவதச்சன் மேடையில் பேச மாட்டார்.  பேசியதாக நான் கேள்விப்பட்டதில்லை.  அதனால் இப்படியெல்லாம் நினைத்து மனதை பேஜார் பண்ணிக் கொள்ளாதீர்கள். 

சரி, எப்படியோ, கேள்வி பதில் பகுதியில் நீங்கள் பெஸ்டாக இருக்க வேண்டும்.  பார்த்து கவனமாக பதில் எழுதுங்கள். 

நான் என்றுமே கவனமாக இருந்ததில்லையே கோவிந்தன். 

அதெல்லாம் எனக்குத் தெரியாது.  கவனமாக இருங்கள். 

சரி, கேள்வி பதில் பகுதியைப் படித்துப் பார்த்தீரா?

படித்து விடுகிறேன் சாரு.  நிச்சயம் படிக்கிறேன்.