சொற்கடிகை – 19

இயக்குனர் வஸந்த்தை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவரைப் போலவே நானும் பாபாவின் பக்தன். அவர் வீடும் என் வீடும் அருகருகே இருந்ததால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இன்று ஸீரோ டிகிரி அரங்கில் சந்தித்தோம். அவருடைய விசேஷம் என்னவென்றால், அவரிடம் சினிமாவின் வெளிச்சமே தெரியாது. அப்படிப் பழகும் ஒரு சிலர் ஏ.ஆர். ரஹ்மான், பாரதிராஜா, லெனின். என் பள்ளிப் பருவத் தோழனைப் போல் பழகியவர் பாலு மகேந்திரா. வஸந்த்தும் பாலுவைப் போன்றவர்தான். இன்று அவர் என்னிடம் போய் வருகிறேன் என்று வீட்டுக்குக் கிளம்பியவர் பத்து நிமிடத்தில் தன் செல்லக் குட்டியோடு திரும்பி வந்தார். பிராணிகளுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்துவது. வனப்புலி கூட என்னைக் கண்டால் ஆட்டுக்குட்டியைப் போல் ஓடி வரும் என்றுதான் நினைக்கிறேன். இது என் வாழ்வின் வரம். வஸந்த்தின் செல்லத்துடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம். புகைப்படம் எடுத்தது வஸந்த். புகைப்படத்தில் தன் கலையைக் கொண்டு வந்து விட்டார். நன்றி வஸந்த். நாளை உங்கள் படத்தைப் பார்த்து விடுவேன்.