ஸ்மாஷன் தாரா மீண்டும்…

நண்பர் ஒருவர் போன் செய்து ஸ்மாஷன் தாரா ஏன் இத்தனை தாமதம், புத்தக விழாவிலேயே வந்திருக்கலாமே என்றார். இப்போது வராததும் நல்லதுதான். அங்கே மிஸ் யூ சுனாமி அடித்துக் கொண்டிருப்பதால் அடுத்த மாதம் வருவதே உசிதம்.

சுனாமி என்பது சின்ன வார்த்தை. ஹமீதைப் பார்க்க உயிர்மை போயிருந்தேன். ஒரு குடும்பம் வந்தது. 30 வயது இளைஞர். அம்மா. மனைவி. குழந்தை. மிஸ் யூவை வாங்கி ஹமீதிடம் கையெழுத்து வாங்கினார். போட்டோ எடுத்துக் கொண்டார். எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடந்தது. அப்போது அம்மா சொன்னார், சார், எனக்கு நாலு குழந்தைங்க. முதல் மூணும் உங்க மிஸ் யூவை வாங்கியாச்சு. இவன் உங்க கையால வாங்கணும்னு பெங்களூர்லேர்ந்து வந்திருக்கான். இப்போ எங்க வீட்லயே நாலு மிஸ் யூ.

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரே புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள், ஒரே குடும்பத்தில்.

அடுத்த மாதம் ஸ்மாஷன் தாரா வந்து விடும். புத்தகங்களின் விலை பற்றி நேற்று ரஞ்சித் என்ற வாசகர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு எதிர்வினையாக வந்த ஒரு கடிதத்தை இங்கே வெளியிடுகிறேன்.

மஹாகணம் பொருந்திய ஸ்ரீமான் ரஞ்சித்,
இப்பவும் தாங்கள் எழுதிய கடித்ததைப் படித்தோம். ஸ்மாஷன் தாரா புஸ்தகத்தைத் தள்ளுபடி விலையில் புஸ்தகம் ஒன்று ஒரு ரூபாய் எட்டணா என்ற கணக்கில் விற்கச் சொல்லலாம் என்று  உத்தேஸம். வாஸக மற்றும் கலா ரஸிக சீமான்கள் மற்றும் சீமாட்டிகளை  ஆனந்தம் பண்ணுவித்துப் பார்ப்பதுதாம் எமது உத்தேஸமாக இருக்கவேணும் என்று பகவான் எம்மை ரக்ஷித்து அனுப்பியிருப்பதாலும், அதையே எமது ஸித்தமாகக் கொண்டிருப்பதை ப்ரியத்துடன் அனுசரித்த பப்ளிகேஷன் ஸ்ரீமந்தர்கள், புஸ்தகம் ஒன்று நாலணா என்ற வீதத்தில் வாஸகர்களின் அவர்தம் இல்லத்திற்கே சென்று விநியோகப்பதாகவும் ஸங்கல்பம் செய்துகொண்டிருக்கின்றனர். உங்களது சாஹித்ய அபிருச்சியை மெச்சிய ஸ்ரீமந்தர் ராம்ஜி ஸார்வாள், தங்களுக்கு மட்டுமல்ல தாங்களின் பந்துமித்ர சகோதரர் மற்றும் ஸ்நேகிதாளுக்கும் இனாமாக ஒரு ஆயிரத்து ஐந்நூறு பிரதிகளை வழங்குமாறும் அடியேனைப் பணித்திருக்கிறார். தங்களது விலாஸத்தை எமக்கு எழுதுமாறு பிரியத்துடன் வேண்டிக்கொள்கிறேன்.

இங்ஙனம்

வெங்கடேஸ குருக்கள்,

வெங்கடேஸ அக்ரஹாரம், மைலாப்பூர்.

(1-3-22, மதராஸ்)