ஸ்மாஷன் தாராவின் விற்பனை குறித்து…

டியர் சாரு,
அன்பு வணக்கங்கள். உங்களின் இன்றைய பதிவை படித்தேன். அதில் 1000 பிரதிகள் புத்தகம் வாங்க வாசகர்களிடம் கேட்கிறேன் என்றீர்கள். எனக்கு அச்செய்தி ஆச்சிரியமாகவும், வருத்தமாகவும் உள்ளது. ஆச்சரியம் என்ன வென்றால் உங்கள் போல முதிர்ந்த எழுத்தாளர் இப்படி சொல்வது.நான் யோசிக்கிறேன் இதனால் தான் பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரும் பதிப்பகம் வைத்துள்ளார்கள் என்று.

வெளியல் இருந்து பார்க்கும் என்னைப் போன்ற வாசர்களுக்கு, எடுத்துக்காட்டாக எஸ்.ரா, வம்சி புக்ஸ், போன்ற பதிப்பகங்களில் போடப்படும் புத்தகத்தின் விலை அதிகமாக உள்ளதன் காரணம் நம் தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் புத்தகங்கள் வாங்காமல் (அ) ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்கி அதை Rotation செய்கிறார்களோ என்றே தோன்றுகிறது. காரணம், Fb-ல் உள்ள முக்கிய எழுத்தாளர்கள் குழுக்களில் குறைந்தது 10,000 பேராவது இருக்கிறார்கள், அதில் 30% பேர் வாங்கினால் கூட 3000 புத்தகம் நிச்சயமாக விற்கும்.

தற்போது சீர் வாசகர் வட்டம் போட்ட புதுமைப்பித்தனின் புத்தகம் இரண்டாம் பதிப்பில் 10,000 புத்தகம் விற்றதாக செய்தி கேள்விப்பட்டேன். அதுவும் இல்லாமல் உங்களின் அ-காலம் சமீபத்தில் Bynge -ல் வாசித்தேன் அதில் ஒவ்வொரு அத்தியாயம் வாசிக்கும் போதும் அதை வாசித்தவர்கள் 10k, 5K என வருவதை கண்டேன். மகிழ்ந்தேன். ஆனால் புத்தகம் வாங்குவர்கள் இவ்வளவு குறைவாக அதுவும் நம் மாநிலத்தின் முக்கிய புத்தக நிகழ்வில் என்பது மனதை சஞ்சலத்தில் ஆழ்த்தியது. ஒருவேளை நான் புத்தகங்கள் வாங்கி படிப்பதால், எல்லோரும் அப்படி என்று நினைத்துவிட்டேனோ என்றும் நினைக்கிறேன். உங்களின் வலி எனக்கு நன்றாக புரிகிறது.

என் தம்பி கூட அடிக்கடி என்னிடம் சொல்வான்
“அண்ணே! இந்த இலக்கியவாதிகள் (எழுத்தாளர்கள்)எல்லாம் இவ்வளவு அறத்தை பற்றி பேசுகிறார்களே ஏன் அவர்கள் அதை அவர்களின் புத்தக விற்பனைகளில் பின்பற்றுவதில்லை” என்று. எனக்கு விடை கிடைக்கவில்லை, நானும் அதை ஆமோதித்தேன். இப்பொழுது உணர்கிறேன் அதிக பிரதிகள் போட்டால்தான் விலை குறையும் என்று. ஆனால் அதிக பிரதிகள் விற்கப்பட்ட நூல்களின் விலை இன்னும் எங்கோ விண்வெளியைப் பார்த்து ஏங்கும்படியாகத்தான் இருக்கிறது. இதனாலே என்னைப் போன்ற வாசகர்கள் இலவசமாக, அல்லது தள்ளுபடியை நோக்கி ஓட நேருகிறது.

அமேசான், பிலிப்கார்ட்-ல் புத்தகங்கள் குறைந்தது 20-30% தள்ளுபடியில் கிடைப்பதால் பெரும்பாலும் அங்கு வாசகர்கள் செல்கிறார்கள் என்று தோன்றுகிறது சாரு. அதுவும் அதே பதிப்பகத்தின் வலைதளத்தில் வாங்கும் போது விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆகமொத்தத்தில் நான் இதை வாங்க வேண்டும் என்பதால் எங்கு மலிவோ அங்கு தான் போயாகவேண்டியுள்ளது. அதைத்தான் இந்த சமுகசூழல் குழந்தையில் இருந்து எனக்கு கற்பிக்கிறது.

ஸ்மாஷன் தாரா எப்படியும் 1000 பிரதிகள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஏதேதோ மனதில் ஓடிய செய்திகள் உங்களிடம் வைத்துவிட்டேன். உங்கள் பதிலில் தெளிவாவேன் என்ற மகிழ்ச்சியுடன் இக்கடிதத்தை முடிக்கிறேன்.

அன்பும் அக்கறையுடன்,
ரஞ்சித் சின்னுசாமி

டியர் ரஞ்சித்

புத்தகம் விற்கவில்லையே என்ற வலியோ வருத்தமோ எனக்குக் கொஞ்சமும் இல்லை. அது பதிப்பாளரின் பிரச்சினை. அதனால்தான் என் புத்தகங்களை 50 பிரதிகள் போட்டால் போதும் என்று வற்புறுத்துகிறேன். விற்க விற்க அம்பது அம்பதாகப் போடலாம். அம்பது கூட விற்கவில்லையானால் நானே விலைக்கு வாங்கி எனக்கு மாதாமாதம் சந்தா கட்டும் நண்பர்களுக்கு அன்புப் பரிசாகக் கொடுத்து விடுவேன். ஸ்மாஷன் தாரா அப்படி இல்லை. கெட்டி அட்டையில் ஆஃப்செட் என்பதால் ஆயிரம்தான் போட வேண்டும். அதுதான் குறைந்த பட்சம். அதுவும் விற்கவில்லையெனில் அதையும் நானே காசு கொடுத்து வாங்கி என் நண்பர்களுக்கு அன்புப் பரிசாகக் கொடுத்து விடுவேன். என்ன பிரச்சினை என்றால், எனக்கு ஒரு நூறு நண்பர்கள்தான் இருப்பார்கள். மீதியையும் ஏதாவது ஏற்பாடு பண்ணி விற்று விடலாம். இலவசமாகவும் கொடுத்து விடலாம். ஆனால், விற்றது போக மீதி பிரதிகளை பதிப்பாளரிடமிருந்து நானே காசு கொடுத்து வாங்கி விடுவேன். என்னால் பதிப்பாளர் ஒரு பைசா கூட நட்டம் பார்த்து விடக் கூடாது. அதைவிடப் பெரும் பாவம் எனக்கு எதுவும் இல்லை.

புத்தக விலை பற்றி மனுஷ்ய புத்திரன் எழுதியிருந்ததே என் கருத்தும். எல்லாமே இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. தேடிப் படித்துக் கொள்ளலாம்.

ஃபேஸ்புக்கில் புழங்குபவர்களுக்கும் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்பு கக்கூஸில் கிறுக்கினார்கள். இப்போது ஃபேஸ்புக்கில் கிறுக்குகிறார்கள். எல்லோரும் இல்லை. 95 சதவிகிதம்.

இதையெல்லாம் மீறித்தான் மனுஷின் மிஸ் யூ ஒரு நாளில் நூறு பிரதிகள் விற்கின்றன. சீக்கிரம் 20000 ஐத் தொட்டு விடும். இதையெல்லாம் பார்த்து நாம் நம்பிக்கை வைத்து விடக் கூடாது. மிஸ் யூ எல்லாம் அதிசயம். அதிசயம் எப்போதாவதுதான் நடக்க வேண்டும். தினமும் நடந்தால் அது அதிசயம் அல்ல.

சாரு