ஒண்ணு ரெண்டு மூணு… இருபத்து மூணு

ஒண்ணு ரெண்டு மூணு என்ற பதிவின் தொடர்ச்சி இது.  இன்னும் ஒரு மாத காலத்துக்கு என் வாழ்வில் எப்போதும் இருந்து வரும் ஒழுங்கு இருக்காது.  உதாரணம் சொல்ல வேண்டுமானால், எப்போதும் போன் வந்தால் எடுத்து விடுவேன்.  எடுக்க முடியாவிட்டாலும் ஒரு மணி நேரத்தில் திரும்ப அழைத்து விடுவேன்.   அம்மாதிரி தினப்படி ஒழுங்கு ஒரு மாதம் இருக்காது. 

ஔரங்ஸேப் நாவலை பதிப்பகத்திடம் கொடுக்க வேண்டும்.  இப்போதைய வேகத்தில் செய்தால் பதிப்பகத்திடம் கொடுக்க ஒன்றரை ஆண்டு ஆகும் என்பது எனக்கு நேற்று புரிந்து விட்டது.  பதற்றமாகி விட்டது.  பதிப்பகத்திடம் கொடுப்பதற்கு முன்னால் என் நண்பர் ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்த நான்கு புத்தகங்களை முடித்தாக வேண்டும்.  என் வேகத்துக்கு அதற்கு பத்து தினங்கள் போதும்.  ஆனால் கடந்த பத்து தினங்களில் ஒரே ஒரு புத்தகத்தின் பத்து பக்கமே படித்திருக்கிறேன்.  இதற்கிடையில் டார்ச்சர் கோவிந்தன் வேறு போனில் அழைத்து ஜெயமோகன் ஒரே நாளில் பத்து புத்தகம் படிப்பார், தெரியுமா என்று கலவரப்படுத்தி விட்டார். 

எங்கே பார்த்தாலும் ஒரே கண்ணி வெடி மயமாக இருக்கிறது, என்ன செய்ய?  அவர் பாட்டுக்கு பத்து புத்தகமோ நூறு புத்தகமோ படிக்கிறார்.  அதைக் கொண்டு வந்து என் மண்டையில் போட்டு தடியால் அடிக்கிறார்கள்.  ஓ மை காட்!

அதனால் இன்னும் ஒரு மாதத்தில் எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு இதை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.  ஏன் ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பு எனக்கு அவசியமாகிறது என்றால், நேற்று அவருடைய ஜின்களின் ஆசான் நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் அலீ அலீ என்று வருவதைப் பார்த்தேன்.  அவரை அழைத்துக் கேட்டேன்.  அறபியில் அதுதான் சரியான உச்சரிப்பு.  ஆங்கிலத்தில் Ali என்று எழுதுவதால் நாமும் அலி என்று எழுத ஆரம்பித்து விட்டோம்.  அலீதான் சரி.  நான் ஒரு perfectionist என்பதால் இப்படியெல்லாம் நுணுக்கமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. 

சரி, அலி இல்லை, அலீ.  நீங்கள் என்ன செய்வீர்கள்?  Find and replace போட்டு ஒரே நொடியில் எல்லா அலியையும் அலீ ஆக்கி விடுவீர்கள்.  நான் ஒவ்வொரு இடமாக மாற்றினேன்.  ஏனென்றால், அப்படி ஒரேயடியாக மாற்றும் போது சொற்சேர்க்கையில் பிரச்சினை ஆகி விடும்.  அலீயில் அந்த சிக்கல் இல்லையென்றாலும் ஒவ்வொன்றாக மாற்றினால்தான் எனக்குத் திருப்தி. 

எனவே ஒரு மாத காலம் நான் அப்படி இப்படி இருந்தால் கண்டு கொள்ளாதீர்கள். 

இதற்கிடையில் ஒண்ணு ரெண்டு மூணு என்ன ஆயிற்று என்று கேட்டேன்.  ஸ்மாஷன் தாரா கவிதைத் தொகுதி.  இருபத்து மூணு ஆகியிருக்கிறதாம்.  தமிழின் ஒரு முன்னணி எழுத்தாளனின் முதல் கவிதைத் தொகுதி இருபத்து மூணு பிரதி முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  எனவே விற்பனையை முடுக்கி எண்ணிக்கையை ஐம்பதாக மாற்றுவோம் என்றுதான் இதை எழுதுகிறேன். அடுத்த வாரத்தில் ஒரு நாள் ஸீரோ டிகிரி பதிப்பகம் செல்வேன்.  யார் யார் ஆர்டர் கொடுத்திருக்கிறார்களோ அவர்களின் அத்தனை புத்தகங்களிலும் கையெழுத்து இடலாம் என்று இருக்கிறேன்.  அநேகமாக புதன்கிழமையாக இருக்கலாம்.  விரைவில் உறுதிப்படுத்துகிறேன்.   ஸ்மாஷன் தாரா தவிரவும் உங்களுக்கு என் புத்தகங்கள் எதிலெல்லாம் கையெழுத்து வேண்டுமோ அதிலெல்லாம் கையெழுத்திடுவேன்.  அதற்கென்றே பார்க்கர் பேனா லிமிடட் எடிஷன் ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறேன்.  அது பற்றிய பிற விவரங்களை பா. ராகவன் அறிவார்.  அதை வாங்குவதற்கு அவர்தான் காரணம். 

சமீபத்தில் கூட ஷா ருக் கான் balmain டீ ஷர்ட் வாங்கியவுடன் நானும் வாங்கலாம் என்று முண்டினேன்.  ஆனால் சிவகார்த்திகேயனும் வாங்கியிருப்பதாக நியூஸ் வந்ததால் விட்டு விட்டேன்.  வாங்கியிருந்தால் சிலர் எனக்கு விஷம் வைத்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். 

அடுத்த வாரம் கையெழுத்துப் போடுவதற்காக ஸீரோ டிகிரி பயணம்.  

(ரமீஸ் பிலாலியின் நூல்கள் முக்கியமானவை.  திருச்சியில் இருக்கிறார்.  ஆங்கிலம், உர்தூ, அறபி அறிந்த தமிழ்ப் பேராசிரியர்.  அவரை அவசியம் வாசியுங்கள்…)