the outsider – 5

லத்தீன் அமெரிக்க சினிமா என்ற தலைப்பில் 1980 வாக்கில் நான் ஒரு புத்தகம் எழுதினேன்.  அதில் உள்ள படங்கள் இந்தியாவில் சினிமாவைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களிலேயே கூட பேசப்பட்டதில்லை.  பார்க்கப்பட்டதும் இல்லை.  அந்த சினிமாவையெல்லாம் பார்த்திருக்கக் கூடிய இன்னொருவர் கமல். (அப்படிப்பட்டவர் விக்ரமாக மாறியது தமிழ்நாட்டின் விபரீத விசித்திரங்களில் ஒன்று!!!) மற்றபடி இந்தியாவில் க்ளாபர் ரோச்சாவின் (Glauber Rocha) பெயரைக் கூட யாரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.  நான் எழுதியது 1980இல். 

க்ளாபர் ரோச்சாவின் சினிமா ஆவணப் படத்தையும் புனைவையும் இணைக்கும் தன்மை கொண்டது.  படத்தின் நடுவிலேயே இயக்குனர் ரோச்சா புகுந்து பேச ஆரம்பித்து விடுவார்.

தெ அவ்ட்ஸைடர் ஆவணப் படத்தின் இயக்குனர் இன்று என்னோடு பேசினார். அவர் பேசியதன் சுருக்கம்:

”இந்தப் படம் வெளிவந்ததும் சிலர் பாராட்டுவார்கள்.  பலர் திட்டுவார்கள்.  இரண்டைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.  நானே தனிப்பட்ட முறையில் ஒரு படம் எடுத்து, அதை எல்லோரும் கழுவி ஊற்றினால் கவலையே பட மாட்டேன்.  ஆனால் இது உங்களைப் பற்றிய படம்.  நீங்களே யார் யாரிடமோ பணம் கேட்டு வாங்கி எடுக்கும் படம்.  அதுவும், ஒரு லட்சம் ரெண்டு லட்சம் அல்ல.  முப்பது நாற்பது லட்சம்.   இப்படி எடுத்து விட்டு, உங்களுக்கே படம் பிடிக்காமல் போனால் நான் வருத்தப்படுவேன்.  இதுவரை என் வாழ்நாளில் நான் எதற்காகவுமே வருத்தப்பட்டதில்லை.  அப்படியிருக்கும்போது இந்த உலகிலேயே நான் அதிகமாக மதிக்கும் சாருவுக்குப் பிடிக்காமல் அவரைப் பற்றிப் படம் எடுத்து நான் வருத்தம் அடைவதில் விருப்பம் இல்லை.  அதனால் இயக்குனரை மாற்றி விடுங்களேன், ப்ளீஸ்.”

“மெத்த சரி, இயக்குனர் பெயர் சாரு நிவேதிதா என்று போட்டு விடுவோம்.  ஆனால் அது இண்டலெக்சுவல் திருட்டு.  அதனால்தான் தயங்குகிறேன்.”

“இல்லை.  நான் சொல்ல வந்ததே வேறு.  உங்களுக்கே படம் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பதே என் கவலை.”

”சரி, அப்படியானால் இயக்குனரை மாற்றுவோம்.  என் கதையை, என் வாழ்வை, எனக்குப் பிடித்த முறையில் இயக்குவதற்குத் தகுதியானவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மட்டுமே உண்டு.  ஒருவர், மணி ரத்னம்.  இன்னொருவர், மிஷ்கின்.  இந்த இருவர்தான் இப்போதைக்குத் தமிழ் சினிமாவில் auteur என்ற சொல்லுக்குத் தகுதியானவர்கள்.  ஆனால் இருவருக்குமே கோடிகளில் சம்பளம் கொடுக்க வேண்டும்.  அப்படியே கொடுத்தாலும், அவர்களுக்கு என்னைத் தெரியாது.  இருவருமே என்னைப் படித்திருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.  அதிலும் மிஷ்கின் ஒரு பேட்டியில் பகிரங்கமாகவே ‘நான் சாருவைப் படித்ததே இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்.  அதனால், நீங்களே இயக்குவதுதான் இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே வழி.  இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், இதுவரை கிடைத்த 12 மணி நேர ரஷ்ஷைப் போட்டுப் பார்த்த சினிமா லெஜண்ட் நன்றாக வந்திருப்பதாகவே சொன்னார்.  அது மட்டும் அல்லாமல், உலக சினிமாவை ஓரளவு அறிந்து வைத்திருக்கும் எனக்கும் இது ஒரு உலகத் தரமான படம் என்றே தோன்றுகிறது.  அதனால் தயக்கமின்றி நீங்களே இயக்குங்கள்.  கூடவே என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா நூலையும் படித்து விடுங்கள்.  அதன் இரண்டாம் பாகத்தை நான் சில ஆண்டுகளுக்கு முன் பேசா மொழி பத்திரிகையில் தொடராக எழுதினேன்.  அதில் குறிப்பாக, க்ளாபர் ரோச்சாவை நீங்கள் பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக, ரோச்சாவின் The Age of the Earth படத்தைப் பார்த்தே ஆக வேண்டும்.  அது ஒரு முன் நிபந்தனை.  நீங்கள் மட்டும் அல்ல; நம் குழுவில் உள்ள அனைவருமே அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.  அதேபோல், ஜான் லுக் கொதார் (Jean-Luc Godard) இயக்கிய கிங் லியர்.  இந்த இருவரையும் நான் பின்பற்றலாகாது.  ஆனால் இவர்களைப் பார்த்தாக வேண்டும்.  இவர்களைக் கடந்தாக வேண்டும். ஏனென்றால், க்ளாபர் ரோச்சா தன்னுடைய மூன்றாம் சினிமா என்ற கோட்பாட்டின் மூலம் அமெரிக்காவின் ஹாலிவுட்டையும், அதே சமயம் ஐரோப்பிய கலை சினிமாவையும் சேர்த்தே நிராகரிக்கிறார்.  ’ஐரோப்பிய சினிமாவில் (உதாரணம்: பெர்க்மன்) மக்களுக்கான இடம் இல்லை, அது எல்லாமே ரொம்பவும் அந்தரங்கமான சினிமாவாக இருக்கிறது’ என்கிறார் ரோச்சா.  நானோ ஐரோப்பிய சினிமாவும் ரோச்சாவின் மூன்றாம் சினிமாவும் கலந்து உருவானவன்.  நான் தனிப்பட்ட முறையில் ஒரு இண்ட்ரோவர்ட், recluse என்றெல்லாம் இருந்தாலும் தெ அவ்ட்ஸைடரில் மனிதர்கள் இருப்பார்கள்.  இடங்கள் இருக்கும்.  பெர்க்மனின் சுயசரிதமான 81/2 போல இருக்காது.  ஏனென்றால், இயக்குனர் நான் அல்ல.  நீங்கள்.   

இதுவரை ஷூட் பண்ணியதையே எடிட் பண்ணி படமாகப் போட்டாலும் படம் மிகச் சிறப்பாகவே இருக்கும்.  இதை நான் மட்டும் சொல்லவில்லை.  லெஜண்டே சொல்கிறார். தைரியமாக படத்தை மேற்கொண்டு இயக்குங்கள்…”

”ஆம், நாமே ஒரு திரை மொழியை உருவாக்குவோம். நீங்கள் மீட்சியில் கர்னாடக முரசு கதையை எழுதிய போது நான் – லீனியர் எழுத்து பற்றியோ மெட்டாஃபிக்‌ஷன் பற்றியோ உங்களுக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். மதுரையில் ரெண்டாம் ஆட்டம் நாடகம் போட்டு அடி வாங்கிய போதும் அது அகஸ்தோ போவாலின் (Augusto Boal) ஃபோரம் தியேட்டர் என்று உங்களுக்குத் தெரியாது என்று எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சில வேலைகளை இங்கே செய்ய, அவர்கள் அங்கே செய்தார்கள். ஒருவருக்கொருவர் தெரியாமல். அதேபோல் இப்போது ஒரு ஆவணப் படம் செய்வோம்.”

***

இன்று நண்பர் ஒருவர் ஒரு கணிசமான தொகையைப் படத்துக்காக அனுப்பியிருந்தார்.  பெயர் தெரியவில்லை.  தெரிந்தால் தயாரிப்பாளர் பட்டியலில் போடலாம்.  அவருக்குத் தன் அடையாளத்தை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால் அவர் விருப்பத்தை மதிக்கிறேன். மிகவும் நன்றி.

பணம் தேவைப்படுகிறது.  நேற்று வளசரவாக்கம் சென்று வர மட்டும் ஆட்டோ செலவுக்கு 700 ரூ. ஆயிற்று.  வளசரவாக்கத்திலிருந்து திரும்பி வர ஆட்டோவுக்கு 500 ரூ. கேட்டார்கள் ஆட்டோ தோழர்கள்.  பிறகு நீண்ட நேரம் காத்திருந்து, என்னை ப்யூர் சினிமா வரை பைக்கில் அழைத்து வந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு ஆட்டோ பிடித்துத் தந்தார்கள் தமிழ் ஸ்டுடியோஸ் மாணவர்கள்.  350 ரூ.  இது லோ பட்ஜெட் படம் அல்ல.  நோ பட்ஜெட் படம்.  அதற்கே இப்படித் தண்ணீர் மாதிரி செலவாகிறது.  ஆகவே, வாகனம் இருப்பவர்கள் வாகனமாவது கொடுத்து உதவலாம்.  நேற்று மதியம் உணவுக்கான செலவு 1000 ரூ.  இத்தனைக்கும் ரஷ் பார்க்க வந்த நண்பர்கள் அனைவரும் தத்தம் செலவில்தான் வந்தார்கள்.  நான் யாருக்கும் தண்ணீர் கூட வாங்கித் தரவில்லை.  அதெல்லாம் தமிழ் ஸ்டுடியோஸ் அருண்.  கல்லூரி முடித்த கையோடு ஸாஃப்ட்வேர் வேலையை விட்டு விட்டு சினிமா, இலக்கியம் என்று வந்தார் அருண்.  அவருடைய ஆரம்ப காலத்திலிருந்து அவரோடு இருப்பவர்களில் நானும் ஒருவன்.  அவருடைய உதவி இல்லாவிட்டால் இன்னும் சில லட்சங்கள் பிய்த்துக் கொண்டு போகும். அவருக்கும் அவரது மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் குழு பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

இதை வாசிக்கும் நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் படத்தை செழுமைப்படுத்த உதவும்.  இந்திய சினிமாவின் லெஜண்ட் என்று கருதப்படும் என் நண்பர் இரண்டு நாட்களும் அமர்ந்து பதினாறு மணி நேரம் ரஷ் பார்த்திருக்கிறார்.  இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.  என் எழுத்தோடு 40 ஆண்டுக் காலத் தொடர்பு.  என்னோடு இருபது ஆண்டுகள். 

சமீபத்தில் என் பேருரைகளை நம்முடைய தளத்தில் எல்லோரும் கேட்கக் கொடுத்தேன். கோபி கிருஷ்ணன், நகுலன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., புதுமைப்பித்தன், ந. சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் பற்றி மூன்றரையிலிருந்து நான்கு மணி நேரம் வரை உரையாற்றியிருக்கிறேன். அதிலும் கோபி, புதுமைப்பித்தன் இரண்டும் எட்டு மணி நேரம். காலை ஆறு மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை பேசுவேன். இடையில் தண்ணீர் கூடக் குடிக்க முடியாது. பக்கத்தில்தான் இருக்கும். ஆனால் குடித்தால் என் லயம் கெட்டுப் போகும். அதனால் மூன்றரை மணி நேரம் பேசிவிட்டு, விவாத நேரமான அரை மணியில்தான் தண்ணீர் அருந்துவேன். மொத்தம் 32 மணி நேரத்துக்கான பேச்சு. தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம். என் தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால் இப்போது இந்த ஆவணப் படத்துக்காகப் பணம் தேவைப்படுகிறது. வாகனம் தேவைப்படுகிறது. நாகூரும் தஞ்சாவூரும் செல்வதற்கு பெட்ரோலுக்கு 3000 ரூ. கொடுத்தேன். ஆனால் திரும்பி வருவதற்குக் கொடுக்கவில்லை. அது மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்கள் உதவி தேவை.

16 மணி நேர ரஷ்ஷைப் பார்த்து விட்டு இந்திய சினிமாவின் லெஜண்ட் சொன்னார், ”இந்தப் படத்தை இண்டர்நேஷனல் ஆடியன்ஸுக்குப் போட்டுக் காண்பியுங்கள்.”

இதை விட வேறு என்ன வேண்டும்?