புதிய அனுபவம்

என் வீட்டில் இதுவரை நான் தனியாகவே இருந்ததில்லை. காரணம், முப்பது ஆண்டுகளாக அவந்திகா வெளியூர் சென்றதில்லை. சென்ற மாதம் ஒரு வாரம் அவள் மும்பை சென்ற போது எனக்குக் கிடைக்கும் தனிமை சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி இல்லை. காரணம், என்னை நம்பி வாழும் பத்து பூனைகள். பூனை சேவையிலேயே ஒரு வாரமும் போய் விட்டது. பணிப்பெண்ணும் இல்லாததால் முழு நேரமும் வேலை. ஆனால் இந்த முறை அவந்திகா மும்பை செல்லும் போது இரண்டு பணிப்பெண்கள் இருக்கிறார்கள். ஒருத்தர், சமையல். இன்னொருத்தர், மற்ற வீட்டு வேலை. நாளை 18ஆம் தேதி மும்பை செல்கிறாள். ஒன்றரை மாதம் கழித்தே வருவாள். உன்னை விட்டு எப்படி ஒன்றரை மாதம் இருக்கப் போகிறேன் என்று புலம்பிக் கொண்டே இருக்கிறாள். எனக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. மனிதர்களின் தொடர்பு இருக்காது போல்தான் தெரிகிறது. அது நேற்றே தெரிந்தது. ஒரு இடத்துக்கு காலை ஆறரை மணிக்குப் போனேன். ஆள் வரவில்லை. எப்போது வருவார் என்றும் தெரியவில்லை. வினித்துக்கு போன் போட்டேன். அவர் வீடு கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது. வயிற்றுப் போக்கும் ஜுரமும் என்றார். உடனடியாக வைத்து விட்டேன். டார்ச்சருக்கு போன் போட்டேன். டார்ச்சர்தானே. டார்ச்சர் போனை எடுக்கவில்லை. டார்ச்சரோடு பேசி பல காலம் இருக்கும். முந்தாநாள் போன் செய்தேன். மாலை ஏழு. மீட்டிங்கில் இருக்கிறேன் என்று மெஸேஜ் கிடைத்தது. நேற்று இப்படி. மணி அடித்துக் கொண்டே இருந்தது. எனக்குப் புரிந்து விட்டது. மீட்டிங்கில் சைலண்ட் மோடில் போட்டதை இன்னும் ரிலீஸ் பண்ணவில்லை. மீண்டும் மீண்டும் நாலைந்து முறை விட்டு விட்டு போன் செய்தேன். ம்ஹும். பலனில்லை. ராகவனோடு பேசி, பார்த்து ஒரு மாதம் ஆகிறது. போன் அடித்தேன். வழக்கம் போல் ஸ்விச் ஆஃப். பிறகு வளனுக்கு அடித்தேன். அவன் பிரார்த்தனையில் இருந்தான். இதற்குத்தான் பாதிரியார்களோடு பழகக் கூடாது என்பது. ஏழேகால் ஆயிற்று.

ஆறரை மணிக்கே பகல் பன்னிரண்டு போல் காய்ந்தது வெய்யில். ஏழே காலுக்கு உச்சம். திரும்பி விடலாம் என்று ஆட்டோவைக் கேட்டால் ஒருத்தர் கூட வரவில்லை. கால் மணி நேரம் முயற்சி செய்தேன். பலனில்லை. வூபர், வோலா, தெரு ஆட்டோ எதுவுமே வரத் தயார் இல்லை. அப்போது இரண்டு பேர் என்னைப் பார்த்து அதிசயித்தார்கள். என்னைப் படித்தது இல்லை. ஆனால் நான் தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று தெரிந்திருந்தது. கடவுளைப் பார்த்தது போல் பிரமித்தார்கள். அவர்கள் போட்டதும் வோலா ஆட்டோ உடனே கிடைத்தது. வீடு வந்து சேர்ந்தேன். சிறுவாணி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களாம். கடவுள் இப்படித்தான் திடீர் திடீரென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

இனிமேல் டார்ச்சர் கோவிந்தனையும் லிஸ்டிலிருந்து எடுத்து விடுவோம் என்று முடிவு செய்து செயல்படுத்தி விட்டேன். சீனியோடும் பகல் பன்னிரண்டு வரை பேசுவதில்லை. டார்ச்சரோடும் அப்படியே. பகலில் டார்ச்சரால் பேச இயலாது. மேலும், பேசித்தான் என்ன செய்ய? வேலையைப் பார்ப்போம். நான் இன்னும் நாலு நாவல்களை முடிக்க வேண்டும். ஒரு மனிதப் பிராணியின் அண்மை கூட இல்லாமல் அந்தக் காரியத்தைச் செய்து விடலாம். முகம் தெரியாத வாசகர்கள் போதும்.

ரஷ்ஷைப் பார்த்த போது அதில் தெரிந்த ஒரு குறை என் காஸ்ட்யூம். படு மட்டமாக இருந்தது. எப்போதும் வண்ணமயமாக ஆடை அணியும் நான் இந்த இரண்டு ஷெட்யூல்களிலும் ரொம்பவும் சொதப்பலாக ஆடை அணிந்திருந்தேன். ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஹெச் அண்ட் எம்மில் ஆறு ஏழு சட்டைகள் எடுக்க வேண்டும். அந்த செலவை யாரேனும் ஏற்கலாம். இந்தப் படம் ஒருவிதமான க்ரௌட் ஃபண்டிங்கில்தான் எடுக்கப்பட முடியும். அதனால் இத்தனை வெளிப்படையாக எழுதி விட்டேன். யாரேனும் எங்கள் குழுவுக்குத் தேநீர் வாங்கிக் கொடுப்பதாக இருந்தாலும் ஓகேதான். விளைவு முழுவதும் படத்தில் தெரியும். பாருங்கள்.

***