தெ அவ்ட்ஸைடர்
”Moth to a Flame பாடல் மூன்று தினங்களாக repeat mode இல் இருக்கிறது, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் அன்னபூரணி. அந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பற்றியும் என்னைப் பற்றிய ஆவணப் படம் (the outsider) பற்றியும் எழுதியிருந்தேன். இனிமேல் ஆவணப் படம் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று கூறி விட்டார் இயக்குனர். அவர் சொன்ன காரணம் சரியாக இருந்த்தால் நானும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். மேற்கண்ட பாடலைப் படமாக்குவதற்கு கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும். நம் படமோ நோ பட்ஜெட்டில் தயாராகிறது. நேற்று தட்சணாமூர்த்தி 800 ரூ. அனுப்பி டீ காப்பி செலவுக்கு ஆகும், வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உண்மைதான். மற்றபடி ஒன்றும் பெரிதாக ஆவணப்படத்துக்கு பொருளாதார ஆதரவு இல்லை. ஆனால் ”ஔரங்ஸேப் நாவலின் ஸ்பெஷல் எடிஷன் தயாராகிறது, பத்தாயிரம் ரூபாய் விலை” என்றால் 100 பேர் பணம் அனுப்புவார்கள். ஆவணப்படத்துக்கு அப்படி பத்து லட்சம் கிடைக்கும். இன்னும் நான் முடிவு செய்யவில்லை.
Indoor இல் எடுக்கப்படும் காட்சிகள் சிறப்பாக இருக்கும். மேலே குறிப்பிட்ட பாடல் முழுவதும் உள்ளே எடுக்கப்பட்டது. ஆவணப்படமோ முழுக்கவும் வெளியேதான். கையில் காசே இல்லாமல் எடுக்கிறோம். காரைக்காலில் ஒரு டார்மிட்டரியில்தான் தங்கினோம். என் வாழ்க்கையில் நான் டார்மிட்டரியில் தங்கியது அதுவே முதல் முறை. இருந்தாலும் ஆவணப்படத்தின் நோ பட்ஜெட் நிலை காரணமாகப் பொறுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர்கள் நானும் வாசகர்களும்தானே? அதனால்தான். நல்லவேளையாக மறுநாள் வளன் வந்து என்னைக் காப்பாற்றி வேறு இடத்துக்கு இட்டுக் கொண்டு போய் விட்டான்.
நான் நினைக்கும்படி படம் எடுக்க வேண்டுமானால் கோடிகளில் செலவு ஆகும். ஆனால் ஒன்று தெரிந்தது. நான் மட்டும் கேமரா கற்றிருந்தால் உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளனாகியிருப்பேன். நான் எடுத்த புகைப்படம்தான் அகாலம் புத்தகத்தின் அட்டையாக இருக்கிறது. லெபனானில் நான் எடுத்த புகைப்படத்தை மிஷ்கினுக்கு அனுப்பினேன். மிகச் சிறந்த இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் என்று மெஸேஜ் பண்ணினார். (அந்தப் படம் கிடைத்தால் பிறகு பதிவிடுகிறேன்.)
ஆவணப்படத்தைப் பற்றி எதுவும் எழுதுவதாக இல்லை. ஆனால் செல்லப்பாவுக்கு செய்யாததை, க.நா.சு.வுக்கு செய்யாததை, புதுமைப்பித்தனுக்கு செய்யாததை, இன்னும் மிகப் பெரிய எழுத்துக் கலைஞர்கள் பலருக்கும் செய்யாததை நினைத்து ஒரு பிராயச்சித்தமாகத்தான் என்னைப் பற்றிய ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதன் மதிப்பு இன்னும் 30 ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். ஸீரோ டிகிரி நாவல் வந்த போது எல்லோரும் சீ சீ என்று முகம் சுளித்தார்கள். கையால் தொடுவதையே பாவம் என்று கருதினார்கள். ஆனால் இன்று ஸீரோ டிகிரி ஒரு cult novel ஆக மாறி விட்ட்து. தமிழ் நாவல் சரித்திரத்திலேயே இம்மாதிரி கல்ட் நாவலாக மாறிய படைப்புகள் ஒன்றிரண்டுதான் உள்ளன. புயலிலே ஒரு தோணி என்ற பெயர் சட்டென்று ஞாபகம் வருகிறது. தமிழ் சமூகத்தில் இலக்கியப் படைப்புகள் ‘கல்ட்’ ஸ்டேடஸ் பெறுவது இல்லை. எப்போதாவதுதான் அப்படி நடக்கும். அதேபோல் இந்த ஆவணப்படமும் காலத்தில் நிலைத்து நிற்கும்.
சில ஆவணப் படங்களில் எழுத்தாளரின் நண்பர்கள் எழுத்தாளர் பற்றிப் பேசுவார்கள். எனக்கு அப்படி எடுத்தால் மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பிரபு கங்காதரன், பாரதிராஜா, நடிகர் பார்த்திபன், இயக்குனர் வஸந்த், ராம்ஜி, காயத்ரி, செல்வேந்திரன், சுனில் கிருஷ்ணன், தினமலர் ரமேஷ், நல்லி செட்டியார் போன்ற பல நண்பர்களும் என்னைப் பற்றி நல்ல வார்த்தைகள் பேசுவார்கள். செய்யலாமா என்று இயக்குனரிடம் கேட்டேன். அது அஞ்சலிப் படம் அல்லவா, இப்போது வேண்டாம் என்றார் இயக்குனர்.
நாகூர் தர்ஹாவுக்குச் செல்லும் வழியில் மெயின் ரோட்டில் குறுக்குச் சாலைகள் சந்திக்கும் இடத்தை நாங்கள் கொத்தாச்சாவடி (கொத்தவால் சாவடி) என்று சொல்லுவோம். அந்த முக்கில் ஒரு டீக்கடை. அந்தக் கடையின் முன்னாள் உரிமையாளர் குட்லி. 60 வருஷத்துக் கதை. குட்லி என் மாமா சண்முகத்தின் குடி நண்பர். ஒருநாள் சண்முகம் மாமா உடம்பில் வெட்டுக் காயங்களோடு பேய் மாதிரி வந்தார்கள். மறுநாள் தெரிந்தது, உடம்பில் விழுந்தது 32 வெட்டு என்று. மாமா பிழைத்ததும் ஒருநாள் வழக்கம்போல் கள்ளுக்கடைக்கு கோழி பொறட்டலை (பொறட்டுணது என்பார்கள்) ஒரு எவர்சில்வர் தூக்கில் எடுத்துக் கொண்டு போனேன். அம்மாவின் அண்ணன் பாசம். அப்போது மாமாவோடு குடித்துக் கொண்டிருந்தார் குட்லி.
இப்போதைய டீக்கடை ஓனரின் தந்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு குட்லியிடமிருந்து அந்தக் கடையை வாங்கினாராம். என் காலத்தோடு குட்லியின் நினைவு அழிந்து விடும். சண்முகம் மாமாவும் அப்படியே. ஆனால் தெ அவ்ட்ஸைடர் ஆவணப்படம் காலம் உள்ளளவும் நிற்கும். ஏனென்றால், அதில் நான் ஒரு தொக்குதான். உண்மையில் அந்தப் படம் ஒரு காலத்தின் கதை. சீலேயில் வாழ்ந்து பாடிய ஒரு காவிய நாயகனைத் தன்னில் கொண்ட கதை.
உங்களால் இயன்றால் இந்தச் செயல்பாட்டில் கலந்து கொள்ளுங்கள். இரண்டு நண்பர்கள் சீலே வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மொத்தமாக இதோடு ஐந்து பேர் ஆகிறது. நான், இயக்குனர் (சீலேயில் அவர்தான் ஒளிப்பதிவாளர் வேலையையும் செய்ய வேண்டும், இங்கே புரொடக்ஷன் மேனேஜர் வேலையையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.) அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பர், மற்றும் இப்போது பேர் கொடுத்துள்ள இரண்டு நண்பர்கள். ஆனால் இது தாய்லாந்தைப் போல் ஜாலி பயணம் அல்ல. செல்வதற்கான பயண நேரமே 48 மணி நேரம். அங்கே போனால் தண்ணீர் கிடைக்காது. தண்ணீருக்குப் பதிலாக கோக், ஒயின், பியர், பழரசம் மட்டுமே குடிக்க முடியும். பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கூட தண்ணீர் கிடைக்காது. குழாய்த் தண்ணீரை தப்பித் தவறியும் குடித்து விடக் கூடாது. சீலே நம் நாடு மாதிரி பரம ஏழை நாடு. குழாயில் கெட்ட தண்ணீர்தான் வரும். ரொம்வும் அலைந்து திரிந்தால் சோடா கிடைக்கும். அதுவும் ரொம்ப நாள் ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்ததால் ஐஸ் கட்டி மாதிரி இருக்கும். தாகத்துக்குக் குடிக்க முடியாது. ஆறு ஏழு மணி நேரம் கழித்துத்தான் குடிக்க முடியும். பதினைந்து நாளில் என் கால் சராயை பெல்ட் போட்டால்தான் போட முடியும் என்று ஆகி விட்டது. ஆனால் சாந்த்தியாகோவில் ஒரு அற்புதமான மெட்றாஸ் ஓட்டல் உள்ளது. சென்னையை விட நல்ல தமிழ் சாப்பாடு அங்கே கிடைக்கிறது. ஹோட்டல் ராஜ். ஆனால் ராஹ் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜ் என்றால் தெரியாது.
சீலே ஒரு சொர்க்கம். சொர்க்கம் என்றால் அது சீலே. மனிதர்களும் திரேதா யுகத்துப் பிரஜைகள் போல் பழகுவார்கள். வடக்கே முப்பது கி.மீ. போனால் எவரெஸ்ட் சிகரம் போல் பனிமலை. தெற்கே அம்பது கி.மீ. போனால் கடல். நடுவே சாந்த்தியாகோ. இப்படி ஒரு நகரம் இந்த பூமியிலேயே கிடையாது என்பார்கள் சாந்த்தியாகோ நக்ரவாசிகள். டாக்ஸி டிரைவர் கூட இப்படி டம்பம் அடித்துக் கொள்வதைப் பார்க்கலாம். ஆனால் அவர் கையில் ஹோஸே தொனோஸோ (Jose Donoso) நாவலைப் பார்க்கும்போதுதான் உங்களுக்கு இந்தியாவே திரும்பாமல் அங்கேயே இருந்து விடலாமா என்று தோன்றும். இப்படி ஒரு காட்சியை பாரிஸில் கூட காண முடியாது.
என்னோடு சீலே செல்லும் அனுபவத்துக்கு ஒரு கோடி கொடுக்கலாம். எந்த இடத்தைத் தொட்டாலும் ஒரு கதை உண்டு. ஒரு கிராமத்து ரெஸ்டாரண்டில் ஒரு இளம் பெண் க்ராஸியாஸ் அ லா வீதா என்ற ஸ்பானிஷ் பாடலைப் பாடி கிதார் வாசித்துக் கொண்டிருந்தாள். (க்ராஸியாஸ் – நன்றி; லா வீதா – வாழ்க்கை) பாடி முடித்ததும் இது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டேன். கையை விரித்தாள். வியலத்தா பார்ரா (Viloleta Parra) என்றேன். க்ராஸியாஸ் அ லா வீதா பார்ராவின் மிகப் புகழ் பெற்ற பாடல். பிறகு வியலத்தா பார்ராவின் கதையை அவளிடம் சொல்ல ஆரம்பித்தேன். வியலத்தாவின் கதை புராணிகத் தன்மை கொண்டது. அந்தப் பாடகிக்கு என் ஆங்கிலம் புரியவில்லை. அவள் வெறுமனே ஆரம்ப நிலைப் பள்ளிப் படிப்பையே முடித்திருந்தாள் என்பது பிறகு தெரிந்தது. வியலத்தா பார்ராவின் கதையை நான் சொல்ல ஆரம்பித்ததும் அவள் கித்தாரோடு என் அருகே வந்து அமர்ந்தாள். என் பயண வழிகாட்டி ரொபர்த்தோ பெரும் ஆர்வத்துடன் நான் சொல்லும் கதையை ஸ்பானிஷில் மொழிபெயர்க்க ஆரம்பித்தான். வியலத்தா பார்ராவும் உன்னைப் போல் ஒரு பேரழகிதான் என்றான் இடையில். டேய் நாயே, நான் அப்படிச் சொல்லவில்லையே என்று அவனை அடித்தேன். பிறகு வியலத்தா, நிக்கானோர் பார்ராவின் உறவுக்காரப் பெண் என்றேன். அவளுக்கு நிக்கானோரைத் தெரியவில்லை. பிறகு அவளை எங்கள் காரிலேயே அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். நானும் இந்த இந்தியனும் சேர்ந்து உன்னை பலாத்காரம் செய்து விடுவோம் என்று உனக்கு அச்சமாக இல்லையா என்று கேட்டான் ரொபர்த்தோ.
இல்லை, நீ பலாத்காரம் செய்தால் இந்த இந்தியன் காப்பாற்றுவார். அவர் செய்தால் நீ காப்பாற்றுவாய். ஒருத்தர் என்றால்தான் பயம் என்றாள் சிரித்துக் கொண்டே.
இப்படி ஒரு இருநூறு கதை உண்டு. ஔரங்ஸேபை முடிக்க வேண்டும். பிறிதொரு நாள் நான் உங்களுக்கு வியலத்தா பார்ராவின் கதையைச் சொல்கிறேன்.
சென்ற முறை சீலே சென்ற போதே இன்னொரு முறை இந்த தேசத்துக்கு வருவேன் என்று நினைத்துக் கொண்டேன். இப்போது அந்த தேசம் இன்னொரு முறை என்னை எடுத்துக் கொள்கிறது. இறை சக்திக்கு நன்றி. இந்த முறை அத்தகாமா (Atacama) பாலைவனத்துக்கும் செல்ல வேண்டும். நூறு ஆண்டுகளாக மழையே பெய்யாத பாலைவனம். சீலேயில் தெற்கு நோக்கிச் சென்றால் அண்டார்க்டிகா தென் துருவப் பனிப்பாலைக்குப் போய்ச் சேரலாம். எப்படி ஒரு தேசம் பாருங்கள். வடக்கே நூறு ஆண்டுகளாக மழை இல்லாத பாலைவனம். தெற்கே அண்டார்க்டிகா துருவப் பிரதேசம். இது அத்தனையும் 4000 கி.மீ. தூரத்தில். ஆனால் சீலேவின் கிழக்குக்கும் மேற்குக்குமான தூரம் 170 கி.மீ. இப்படி ஒரு பூகோள அதிசயம் சீலே.