பேரன் பிறந்திருக்கும் சேதியை முகநூலில் அறிவித்திருந்ததற்கு 1200 பேர் விருப்பக் குறி இட்டிருக்கிறார்கள். அது இந்த சமூகத்தைப் பற்றிய என் புரிதலுக்கு உதவியது. இந்த 1200 பேரில் பெரும்பாலானவர்கள் என் எழுத்தைப் படிக்காதவர்கள் என்றோ, அல்லது, படித்தும் அதிலிருந்து எதையுமே புரிந்து கொள்ளாதவர்கள் என்றோதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஒரு உயிர் இந்த பூமியில் தங்குவதற்காக வந்திருப்பது ஒரு கொண்டாட்டத்துக்கான விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனின் அடையாளம் குடும்பஸ்தன் என்பதா? என் உயிர் மூச்சே எழுத்துதான் இல்லையா? என்னுடைய ஒரே அடையாளம் எழுத்தாளன் என்பது மட்டும்தான் இல்லையா? குடும்பம் என்ற அமைப்பு என் எழுத்துக்கு எத்தனை இடையூறாக இருக்கிறது என்பது பற்றி நான் 3000 பக்கங்கள் எழுதியிருப்பேன் இல்லையா?
எழுத்துக்கு நிகரான என்னுடைய இன்னொரு அடையாளம், பயணம். நீ பயணம் செய், இந்த உலகைச் சுற்றி வா என்று என் நண்பர் ஒருவர் மாதம் 15000 ரூபாய் கொடுத்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு. மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சி வரை அந்தப் பண உதவி தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பணம் அத்தனையும் ஸோரோ, பப்பு என்ற இரண்டு நாய்களுக்குத்தான் செலவாயிற்று. காரணம், ஸோரோ க்ரேட் டேன் வகை. நடிகர் விக்ரமும், அமிதாப் பச்சனும்தான் அந்த வகை நாயை வளர்க்கிறார்கள். நாய்கள் பற்றி நன்கு அறிந்த என் நண்பர் தியடோர் பாஸ்கரன், க்ரேட் டேனா வளர்க்கிறீர்கள், உங்கள் சொத்தையே அழித்து விடும் என்று எச்சரிக்கை தந்தார். குடும்பத்திலும் சொன்னேன். யாரும் கேட்கவில்லை. என்னால் எந்த நாட்டுக்கும் செல்ல முடியாமல் போனது. வந்த பணம் அத்தனையும் ஸோரோவுக்கே போனது.
ஸோரோவுக்கும் எனக்குமான பந்தம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத்து. ஸோரோதான் இப்போது டெட்டி என்ற பூனையாக வந்திருக்கிறது என்று கூட நான் நம்புகிறேன். ஆனால், இம்மாதிரி உறவுகளையெல்லாம் தாண்டியது என் எழுத்தும் பயணமும். நாய்களுக்காக சமூகத்திடம் கையேந்த நேர்ந்தது என் வாழ்வின் அவலங்களில் ஒன்று. இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பட்டமும் கிடைத்த்து.
கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, ஸோரோவும் மேலே கிளம்பின பிறகு, நான் என் கனவுப் பயணத்தை மேற்கொண்டேன். அப்போது என் வயது 65 ஆகியிருந்தது. பொலிவியாவில் உயரத்தின் காரணமாக மூச்சு விட முடியாமல் அடித்துப் பிடித்துக் கொண்டு சீலே வர வேண்டியதாயிற்று. ஆக, காலம் பூராவும் காத்திருந்து உடல் பலஹீனமான பிறகு போய் என்ன பயன்? இதற்கெல்லாம் காரணம், குடும்பம்.
சென்ற மாதம் ப்ரியா கல்யாணராமன் தீராநதி அட்டையில் வெளியிட என் குடும்பப் புகைப்படம் வேண்டும் என்று கேட்டார்.
என் ஆரம்ப காலத்தில் அவந்திகாதான் என் புத்தகங்கள் அனைத்தும் பிரசுரம் ஆவதற்கான காரியங்களைச் செய்தவள். எல்லா பதிப்பகங்களுமே என் புத்தகங்களை வெளியிட மறுத்து விட்ட நிலையில் அவந்திகாதான் தன் நகைகளை ஒன்று ஒன்றாக விற்று புத்தகங்களைக் கொண்டு வந்தாள். அதற்காக இன்னொரு குழந்தை கூட பெற்றுக் கொள்ளவில்லை. “வேண்டாம்ப்பா, நீ ஏற்கனவே பட்ட கஷ்டம் போதும், இனி குழந்தை வேண்டாம்” என்று அவள் சொன்ன வார்த்தை இன்னமும் என் செவிகளில் ஒலிக்கிறது.
யார் யாரையோ படிக்க வைத்த என் கடனையெல்லாம் அடைத்தாள். தன் நகைகளை விற்று. நான் ஒரு அசைவப் பிரியன் என்பதால் சமைத்து உண்ணக் கூடிய எல்லா ஜீவராசிகளையும் வாங்கி சமைத்துக் கொடுத்தாள். மூல வியாதியால் அவதிப்பட்ட போது சேரிக்குச் சென்று கருப்புப் பன்றியின் வாரை வாங்கி வந்து சமைப்பாள். நத்தையை சமைப்பாள். எனக்கு நண்டு பிடிக்கும் என்பதால் சென்ற ஆண்டு கூட – கொரோனா ஊரடங்கின் போது – தன் நண்பர் மூலம் போரூர் ஏரியிலிருந்து நண்டு வாங்கி வரச் செய்து – அந்த உயிர் நண்டிடம் கை கூப்பி மன்னிப்புக் கேட்டு அதைக் கொன்று எனக்காக சமைத்தாள். இனி உயிருள்ள எதையும் எனக்காகக் கொல்லாதே அம்மா என்று சொல்லி விட்டேன். உயிரற்ற மீன்களை மட்டுமே உண்பேன் என்று முடிவெடுத்த தருணம் அது.
அவந்திகா இப்படி ஒரு தெய்வப் பிறவியாக இருந்தும் குடும்பம் என்ற அமைப்பு என் எழுத்துக்கு இடையூறாகத்தான் இருக்கிறது என்பதை கவனிக்கிறேன். வீட்டில் பத்து பூனைகள். ”நீ ஊருக்கு ஊருக்குப் போய் விடுகிறாய், தனியாக இருந்தால் பைத்தியம் பிடித்து விடுகிறது.” அதன் பொருட்டு பூனைகள். அதனாலேயே வேலை மிகுதி. பூனைகளாலேயே பணிப்பெண்கள் வர மறுக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் வண்டி வண்டியாக இருவரும் பாத்திரம் தேய்த்தோம். எழுதுவதற்காகக் கிடைக்கும் நேரத்தில் பெரும்பகுதி குடும்பத்துக்கான எடுபிடி வேலைகளில் போய் மாலை நான்கு மணிக்கு எழுத அமர்ந்தால் கொட்டாவி கொட்டாவியாக வரும். என்னால் ஒரு நாளில் இருபது பக்கம் எழுத முடியும். ஆனால் இரண்டு பக்கம் எழுதுவதற்குக் கூட நேரம் இருக்காது. நான் பாத்திரம் தேய்ப்பது அவந்திகாவுக்கு வருத்தம் தருவதால் பல சமயங்களில் நள்ளிரவில் அவள் பாத்திரம் தேய்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.
என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு எது குடும்பம்? வளன் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து என் வாசகன். இப்போது பாதிரியாராக இருக்கிறான். அமெரிக்காவில் பாதிரியாருக்கான ஊதியம் தமிழ்நாட்டில் துப்புரவுப் பணியாளருக்கான ஊதியம் போல் இருக்கிறது. அது ஒரு வேலை அல்ல, தொண்டு என்பதால் அப்படி வைத்திருக்கிறார்கள் போல. வளனுக்கு வந்த முதல் ஊதியத்தில் எனக்கு 75000 ரூபாயை அனுப்பினான். தன் பாதிரி அங்கியில் யேசுவின் பெயரோடு, பெற்றோரின் பெயரோடு என் பெயரையும் பொறித்திருக்கிறான். அவனும் என் குடும்பம்தானே? இதுபோல் எனக்கு ஐம்பது பேர் இருக்கிறார்கள். அந்த ஐம்பது பேரும் என் குடும்பம்தான். ஆனால் உலகத்தின் கண்களுக்குத் தெரியும் குடும்பம் எனக்கு க்ரேட் டேன் நாயைப் பரிசளிக்கிறது. குழந்தை கூட வேண்டாம் என்று சொன்ன பத்தினி, பத்து பூனைகளைத் தருகிறாள்.
எழுபது வயதில் பூனைகளுக்காகப் பிச்சை எடுக்க வேண்டியிருக்கிறது. இது எனக்குத் தேவையா? வேண்டாம், எல்லா பூனைகளையும் தெருவில் விட்டு விடுகிறேன் என்கிறாள் அவந்திகா. அது என்னால் முடியாது. புலம்பிக் கொண்டே ஆயினும் அவைகளை வளர்க்கத்தான் வளர்ப்பேன். அப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைத் தெருவில் விட முடியாது. என் மன அமைப்பு அப்படிப்பட்டது அல்ல.
பூனை உணவுக்கு மாதம் 60000 ரூ. ஆகிறது. நான்கு நண்பர்கள் உதவி செய்கிறார்கள். ஒருவர் 10000. இன்னொருவர் 10000. இன்னொருவர் 5000. இன்னொருவர் 5000. மீதி 30000 என் செலவு. மூவரிடமும் ஒரு வார்த்தை மெஸேஜ் அனுப்பினால் போதும், அடுத்த நாள் பூனை உணவு வந்து விடும். இன்னொரு நண்பர் பல வேலைகளுக்கு மத்தியில் இருப்பவர். அவரும் நானுமாகத்தான் கடைக்குப் போவோம். முதல் தேதியே டார்ச்சர் பண்ணக் கூடாது என்று ஐந்தாம் தேதி வாக்கில் பூனை உணவு வேண்டும் என்று மெஸேஜ் கொடுப்பேன். நாளை மாலை நாலு மணிக்கு வருகிறேன் என்பார். மறுநாள் நாலு மணி வந்து போகும். நண்பரிடமிருந்து ஒரு தகவலும் இருக்காது. இரண்டு நாள் பொறுத்துப் பார்த்து விட்டு, பூனை உணவு வாங்கப் போக வேண்டுமே என்று மெஸேஜ் தட்டுவேன். அன்றைய தினம் திங்கள் என்று வைத்துக் கொள்வோம். புதன் கிழமை எந்த நேரம் உங்களுக்கு உகந்தது என்று மெஸேஜ் தருவார். கேட்பதே பிச்சை, இதில் எந்த நேரம் உகந்த நேரம் என்ற லக்ஷுரி வேறா என்று நினைத்துக் கொண்டு, உங்களுக்கு எது உகந்த நேரமோ அதுவே எனக்கும் உகந்த நேரம் என்று மெஸேஜ் போடுவேன். புதன்கிழமை மாலை நாலு மணிக்கு நான் உங்கள் வீட்டில் இருப்பேன். புதன் கிழமை வரும், நண்பரிடமிருந்து தகவல் இருக்காது. பிறகு அடுத்த திங்கள் கிழமை மெஸேஜ் போடுவேன். மேற்கண்ட அதே உரையாடல் நடக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் எல்லாமே வரும் போகும். என்னிடமிருந்து நண்பருக்கும் நண்பரிடமிருந்து எனக்கும் மெஸேஜுகள் பறந்த வண்ணமாக இருக்கும்.
இப்படியே சென்ற மாதம் 28ஆம் தேதி வந்துவிட்ட போது, நானே கிளம்பி அவர் அலுவலகத்துக்குப் போய் விட்டேன். என் வீட்டிலிருந்து 13 கி.மீ. தூரம். பத்தாயிரம் கிடைத்தது.
இனி அப்படி நேரில் போக வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இதோ இன்றும் 28 தான். இருபத்தெட்டு நாட்களாக மெஸேஜுகள் அங்கேயும் இங்கேயும் பறந்து கொண்டிருக்கின்றன.
இப்போது நீங்கள் அந்த நண்பர் பற்றிக் கெட்டதாகத்தானே நினைக்கிறீர்கள். இல்லை. அவருக்கு சென்ற ஆண்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ஆறு மாத காலம் பேச முடியாமல் போன போது மற்றொரு நண்பர் மூலம் மாதாமாதம் எனக்கு 10000 ரூ. அனுப்பியவர் அவர்தான். அதனால்தான் பொறுமையாக நானும் மெஸேஜாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நேற்று நள்ளிரவு ஒரு மெஸேஜ் அனுப்பினேன். நாளை (இன்று) போகலாமா? இப்போது பதில் வந்திருக்கிறது. இன்னும் ஒரே ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் சாரு. வியாழக்கிழமை போகிறோம். தவறவே தவறாது.
நடுத்தர வர்க்கம் என்றால் பாவம் என்று தொல்லை செய்யாமல் விட்டு விடுவேன். நண்பர் கோடீஸ்வரர். இன்னொரு முக்கியக் காரணம், பேச முடியாமல் போன போது கூட மற்றொருவர் மூலம் பணம் அனுப்பியவர்.
ஆனால் 70 வயதில் இதெல்லாம் எனக்குத் தேவையா? இதற்கெல்லாம் குடும்பம்தானே காரணம்? அவந்திகாவுக்கு வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. அதற்கான விலை இது. என் தோழி ஒருவர் நாற்பது பூனையும், இருபது நாயும் வளர்க்கிறார். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறதாம். நல்லது என்றேன். வேறு என்ன சொல்ல முடியும், சொல்லுங்கள். ஆனால் அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு என் மதிப்புக்குரிய மார்க்சீய நண்பர் ஒருவர் தன் மகன் நாலு வயதில் அருமையாக ஆங்கிலம் பேசுவது பற்றிப் புளகாங்கிதமாக எழுதியிருந்தார். ஆங்கிலேயர் அல்ல, தமிழர்தான். நான் அதை விமர்சித்து எழுதினேன். சின்ன குழந்தையை சபிக்கிறான் என்று என்னைத்தான் எல்லோரும் கரித்துக் கொட்டினார்கள். ஒரு மார்க்சீயவாதிக்கோ அல்லது ஒரு எழுத்தாளனுக்கோ ஊரெல்லாம் தன் சொந்தம் இல்லையா?
1884இல் ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ் எழுதிய Origin of the Family, Private Property, and the State என்ற முக்கியமான புத்தகத்தில் எங்கெல்ஸ் முன் வைப்பது இந்தக் கருத்தாக்கத்தைத்தான். ஆதி சமூகத்தில் குடும்பம் இல்லை. பிறகு வந்த குடும்பம்தான் தனிச் சொத்தை முன்னிலைப்படுத்தியது. இன்று வரை ஒவ்வொரு மனிதனும் தன் ஆண் வாரிசை தன்னுடைய நீட்சியாகவே பார்க்கிறான். இந்த சமூகத்தில் நிலை கொண்டிருக்கும் பெரும் அநீதிகளுக்குக் காரணம், இந்த வாரிசுப் பற்றுதான்.
என்னிடம் இந்த வாரிசுப் பற்று இல்லை. அதனால்தான் மற்றவர்கள் கேலி செய்தாலும் பரவாயில்லை என்று என் மனதில் பட்ட ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஒரு துறவியின் மனநிலையைக் கொண்டவன். எனக்கென்று குடும்பமோ பிள்ளைகளோ இல்லை. என் நண்பர் ஒருவர் தன் பையன் முதல் மதிப்பெண் பெற்ற விஷயத்தை எழுதிய போதுகூட அதன் காரணமாகவே விமர்சித்தேன். அப்போது குறை மதிப்பெண் பெற்ற பிள்ளைகள் தற்கொலை செய்து செத்துக் கொண்டிருந்த காலம். (இருபது ஆண்டுகளில் நிலைமை மாறி விட்ட்து, இன்று மாணவர்களால் ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய சூழல் வந்து விட்டது!) அதனால்தான் விமர்சனம் செய்தேன். நம் குழந்தை முதல் மதிப்பெண் வாங்கியதற்காக நாம் எப்படி மகிழ முடியும்? மதிப்பெண் வாங்காத குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?
அப்படி எழுதியதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டு, நான் என் நண்பரின் பிள்ளையை சபித்து விட்டேன் என்றே இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா குழந்தையும் என் குழந்தை என்று நினைக்கும் நானா ஒரு குழந்தையை சபிக்க முடியும்? என்ன உலகம் இது?
பேரன் பிறந்த செய்திக்கு 1200 விருப்பக் குறி என்றால், என் எழுத்து உங்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லையா? அதற்கெல்லாம் இருபது அல்லது முப்பது விருப்பக் குறிகள்தானே வருகின்றன? ஆகவேதான், என் வாசகர்கள் மற்றும் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என் எழுத்தின் ஆதாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.
கடைசியில் ப்ரியா கல்யாணராமன் தீராநதி இதழ் அச்சுக்குப் போகும் தறுவாயில் போன் போட்டு, தலைவரே, உங்கள் புகைப்படம் இப்படி வருவதில் எனக்கு ஒப்புதல் இல்லை, நீங்கள் பாட்ஷா மாதிரி, அதனால் உங்கள் ஸோரோவுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்கள் என்றார். அனுப்பி வைத்தேன். அதை அச்சில் பார்ப்பதற்குள் அவரும் போய்ச் சேர்ந்து விட்டார். எங்கே மற்ற பத்திரிகையாளர்களில் ப்ரியா கல்யாணராமன் வித்தியாசப்படுகிறார் என்றால் இங்கேதான். அவருக்கே தோன்றியிருக்கிறது, நம் சாரு இப்படியான சட்டகத்துக்குள் அடங்க மாட்டாரே என்று. மற்றவர்களாக இருந்தால் அனுப்புகின்ற புகைப்பட்த்தைப் போட்டிருப்பார்கள்.
மீண்டும் சொல்கிறேன், என் எழுத்து மட்டுமே என் அடையாளம்.