குடும்பம் என்பது ஒரு கொடூரமான அடக்குமுறை ஸ்தாபனம். அன்பு என்பதே அற்றுப் போன வறட்டுப் பாலைநிலத்துக்கு ஒப்பானது குடும்பம். என் நண்பர் ஒருவர் 65 வயதில் வாழ்வே அலுப்பாக இருக்கிறது, சாக விரும்புகிறேன் என்கிறார். இது பற்றி நான் எத்தனை பக்கம் எழுதியிருப்பேன்? உங்கள் மனதில் அதெல்லாம் உறைக்கவில்லையா? முதலில் அவர் தன் பெண்ணுக்காக வாழ்ந்தார். பெண்ணின் படிப்புக்காக உழைத்தார். பிறகு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது பேத்திக்காக தன் எல்லா நேரத்தையும் செலவிடுகிறார். 65 ஆண்டு வாழ்வில் அவர் தனக்காக ஒரு நிமிடம் கூட வாழவில்லை. மனைவியிடமிருந்து போன் வந்தால் வில்லிலிருந்து அம்பு புறப்படுவது போல் கிளம்பி ஓடுகிறார். நானும் அப்படித்தான். எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டால், நெஞ்சு பதைபதைக்க ஓடி வருகிறேன் வீட்டுக்கு. ஐயோ, ஏன் இப்படி ஓடுகிறோம், வாகனத்தில் மாட்டி விட்டால் என்ன ஆவது? மயிரே போச்சு. எட்டரைக்கு வீட்டில் இருந்தாக வேண்டும். சட்டம் ஒன்றும் கிடையாது. ஆனால் இஷ்டத்துக்குப் போக முடியாது. ஒருநாள் பார்க்குக்கு கண்ணன் வந்திருந்தார். மாதம் ஒருமுறையோ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோதான் வருவார். காலை உணவுக்கு ஒரு நல்ல மேற்கத்திய உணவு விடுதிக்குப் போகலாம் என்றேன். அங்கே போய்ச் சேரவே எட்டரை ஆகி விட்டது. வெளியே வரும்போது ஒன்பதே முக்கால். வீட்டுக்கு வந்து சேரும்போது பத்து. பதற்றத்தில் ஒன்பதிலிருந்து பத்து வரை என் நெஞ்சு வெடித்திருக்கும். அவந்திகா போனை எடுக்கவில்லை. எடுக்கவும் முடியாது. வீட்டைப் பெருக்கித் துடைத்துக் கொண்டிருப்பாள். வாய்ஸ் மெஸேஜ் எல்லாம் கொடுத்தேன். ஏண்டா இந்த உணவுக்கு ஆசைப்பட்டோம் என்று ஆகி விட்டது.
பெரும் குற்ற உணர்ச்சியுடன், ஒரு ரெஸ்டாரண்ட்டில் மாட்டிக்கிட்டேம்ம்மா என்றேன்.
கடுமையான தொனியில், ”இங்கே பாருப்பா, நீ எங்க வேணா போ, எங்க வேணா வா, ஏங்கிட்ட ஏன் சொல்றே? நான் என்ன உன்னைக் கேட்டனா?” என்று சொன்னாள். ஆனால் அதற்கு முதல் நாள்தான் நான் பெருங்குடி வரை செல்கிறேன் என்று சொன்னதற்கு போகக் கூடாது என்று அனுமதி மறுத்தாள். இத்தாலியிலிருந்து ப்ராதா நிறுவனத்திலிருந்து வந்திருந்த ஒருவரைச் சந்திக்க வேண்டுமாக இருந்தது. அவருடைய அன்னையும் என் தீவிர வாசகர், ஆனால் படுத்த படுக்கையில் இருக்கிறார் என்பதால் நானே வருகிறேன் என்றேன். இருவருமே இத்தாலியைச் சேர்ந்தவர்கள். இப்படி நான் எங்கே போனாலும் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் செய்வது போலத்தான் கடும் முயற்சி செய்துதான் கிளம்ப வேண்டும். காரணம், அன்பு. காரணம், குடும்பம். நான் எப்போதும் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே கிளம்பினால் தகராறு. கடைசி வரை பெருங்குடிக்கு அனுமதியே கிடைக்கவில்லை. இதை நான் ஒரு வாரம் கழித்துச் சொன்ன போது அப்படி நான் சொல்லவே இல்லை என்று சொல்லி விட்டாள். இப்படிப்பட்ட சூழலில்தான் நீ எங்க வேணா போ, எங்க வேணா போ.
ஒருமுறை கோவை புத்தக விழா சென்றிருந்தேன். காலை ஐந்து மணி வரை நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு மதியம் இரண்டு மணிக்கு எழுந்தேன். அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்பு அவந்திகாவிடமிருந்து. நெஞ்சு வலி வந்து விட்டது எனக்கு. அவந்திகாவுக்கு ஃபோன் போட்டேன். டோண்ட் கால் மீ மெஸேஜ் வந்தது. நண்பரை அழைத்தேன். அவரிடம் என்னைப் பற்றி ஒரு மணி நேரம் புகார் கூறியிருக்கிறாள். நான் ஐந்து வயதில் பக்கத்து இருக்கையிலிருந்த பெண்ணை கிஸ் அடித்ததிலிருந்து ஆரம்பித்து நேற்றைய கதை வரை. ஒரு மணி நேரம்.
அடுத்த வாரம். வீட்டில். மீன் சந்தைக்கு அவளே நேரில் போய் எனக்குப் பிடித்த வவ்வாலை வாங்கி வந்து சமைத்தாள். என் வாழ்வின் ஆதாரமே நீதான் சாரு. நீதான் என் கடவுள். நீதான் என் உயிர்.
அப்புறம் ஏம்மா கோயம்பத்தூர்ல இருக்கும் போது அப்படி டார்ச்சர் பண்ணினே?
நீ என் போனை எடுக்கலேன்னா நான் பைத்தியம் ஆய்ட்றேண்டா செல்லம்.
அவள் வயது 62. என் வயது 69.
இதுதான் குடும்பம். இதுதான் அன்பு. இதுதான் குடும்ப வன்முறை.
குடும்பத்தில் ஆதிக்கம் (Power) என்பது எப்படி ஒருவரை ஒருவர் கழுத்தை நெரிக்கிறது என்பதை R.D. Laing தன்னுடைய The Politics of the Family என்ற நூலில் குடும்ப அமைப்பு எத்தகைய வன்முறையைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறார்.
”Our own cities are our own animal factories; families, schools, churches, are the slaughterhouses of our children; colleges and other places are the kitchens. As adults in marriages and business we eat the product.”
இன்னும் மேற்கொண்டு சொல்கிறார். குடும்பம் என்பது சிலந்தி வலை. ஒரு சிறைச்சாலை. ஒரு கோட்டை. Sanity, Madness and the Family என்ற நூலில் லெய்ங் குடும்ப அமைப்பு மனப்பிறழ்வை உண்டு பண்ணுகிறது என்கிறார். இதை நீங்கள் குடும்பம் குறித்த லா.ச.ரா.வின் அத்தனை கதைகளிலும் காணலாம். ஜனனி, பாற்கடல் என்ற இரண்டு கதைகளும் உடனே ஞாபகம் வருகின்றன.
இந்த இரண்டாவது குறிப்பை நான் எழுதக் காரணம், முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற நாவலின் மொழிபெயர்ப்புப் பிரதியை தென்றல் என்னிடம் கொடுத்ததும் அந்த மொழிபெயர்ப்பை செப்பனிடுவதற்காக ஒன்பது மாத காலம் நான் உழைத்த உழைப்பு இருக்கிறதே, அது பற்றி எவ்வளவு எழுதியிருப்பேன், அதற்கெல்லாம் இருபது விருப்பக் குறிதான் கிடைத்தது. அது யாரோ எழுதிய ஒரு நாவல். வேறொருவர் மொழிபெயர்த்தது. நான் அதை வெறுமனே செப்பனிட மட்டுமே செய்கிறேன். அதற்காக நான் தினந்தோறும் எட்டு மணி நேரம் என்று ஒன்பது மாதம் உழைத்தேன். கடைசி நிலையில் நானும் காயத்ரியுமாக ஸூம் மூலம் தினம் இரண்டு மணி நேரம் சரி பார்ப்போம். அப்போதெல்லாம் நான் பசியினால் மயக்கம் வந்து விழுந்த தருணங்கள் உண்டு. காலையில் உணவகத்தில் ரெண்டு இட்லி சாப்பிட்டதோடு மாலை மூன்றரை வரை எதுவுமே தின்னாமல் மொழிபெயர்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும்? வேறொருவர் எழுதிய அந்த நாவலால் எனக்கு என்ன பயன்? அந்த நாவலின் உள்ளடக்கமே காரணம்.
அதற்கெல்லாம் ஒரு விருப்பக் குறி கிடையாது. பேரன் பிறந்ததற்கு 1200 விருப்பக் குறியா, என்னய்யா உலகம் இது?