ஃபேஸ்புக்கில் இருப்பேன். ஆனால் என் தளத்தில் எழுதுவது எதையும் ஃபேஸ்புக்கில் கொண்டு வந்து கொடுக்க மாட்டேன். ஏனென்றால், ஃபேஸ்புக் கும்பல் என்பது தமிழ் மசாலா சினிமாவை ரசித்து விசிலடிக்கும் கும்பலைப் போன்றது. ஆனால் வேடிக்கை பார்ப்பதற்காக ஃபேஸ்புக்கில் இருப்பேன்.
கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிக் கட்டணம் கட்ட பணம் இல்லை. படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடலாம் என்கிறாள் அவந்திகா. வேறு வழியே இல்லை. வங்கிக் கடன் எதுவும் கிடைக்கவில்லை. வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு நெருங்கிய நண்பர் கூட என்னால் மேலாளரிடம் கேட்க முடியாது என்று கை விரித்து விட்டார். இத்தனைக்கும் வங்கி மேலாளர்கள் கட்டாயம் கல்விக் கடன் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டமே போட்டிருந்த்து. ஆனாலும் வங்கிக்காரர்கள் அது பற்றிக் கவலையே படாமல் மறுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நான் அவந்திகாவிடம் கூட சொல்லாமல் வேலையை விட்டேன். வேலையை விட்டதில் பி.எஃப். பணம் ரெண்டு லட்சம் கிடைத்தது. அப்போதுதான் எனக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் ஹார்ட் அட்டாக் வருவதற்கு நூற்றுக்கு நூறு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். கார்த்திக்குக்கு ரெண்டு லட்சம் கட்ட வேண்டும்.
என்னைப் போல் வாழ்நாள் பூராவும் அவன் பிச்சை எடுக்க்க் கூடாது என்று ரெண்டு லட்சத்தை கல்லூரியில் கட்டி விட்டேன். நாம் செத்தால் மயிரே போச்சு என்றே நினைத்தேன். நான் உங்கள் அனைவரிடமும் நான் ஒரு துறவி போல் வாழ்கிறேன் என்றால் நகைக்கிறீர்கள், அருவருப்பாக இருக்கிறது என்கிறீர்கள், நான் ஒரு எதிர்மறையான ஆள் என்கிறீர்கள், சமூகத்துக்கு எதுவும் கொடுக்கவில்லை என்கிறீர்கள். கார்த்திக் என் தாதுவிலிருந்து பிறந்தவன் அல்ல. அவனை நான் முதல் முதலாகப் பார்த்த போது அவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவந்திகாவுக்குமான கல்யாணத்தின் போது அவன் துறுதுறுவென்று விளையாடிக் கொண்டிருந்தான்.
எனக்குப் பொதுவாகக் குழந்தைகளைப் பிடிக்காது கார்த்திக், உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன்.
ஓ, ரொம்ப என்றான்.
அப்படியா, ஏன் என்றேன்.
உங்களைப் பார்த்த பிறகுதான் அம்மா ஹேப்பியா இருக்காங்க, அதனால என்றான்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகளை நீங்கள் உங்கள் உயிரை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். இல்லையா? காரணம் என்ன? உங்கள் விந்துவிலிருந்து பிறந்தது என்ற ஒரே காரணம்தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் மூதாதையரின் உறவுச் சங்கிலியின் அடுத்த கட்டம். அடுத்த வாரிசு. ஆம், உங்கள் மரபின் வாரிசு. உங்கள் இனத்தின் வாரிசு. உங்கள் உடலின் நீட்சி. நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் கருவில் வளர்ந்தது.
உங்கள் கருவில் வளராத, உங்கள் உயிரணுவிலிருந்து உருவாகாத, உங்கள் மூதாதையருக்கும், உங்கள் இனத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தைக்காக உங்கள் உயிரைத் தருவீர்களா?
நான் தந்தேன்.
மருத்துவர் சொன்னது போலவே ஆறு மாதத்தில் எனக்கு ஹார்ட் அட்டாக். ரெண்டு லட்சம் வேண்டும். கையில் ஒரு பைசா இல்லை. அப்போது கடவுள் தன் குழந்தையான எனக்கு, எதிர்மறைச் சிந்தனைகளின் ஒட்டு மொத்த உருவமான எனக்கு ரெண்டு லட்சத்தை அனுப்பினார். அப்போதுதான் எனக்குக் கடவுள் நம்பிக்கையே வந்தது. அப்படி ஒரு அதிசயம் நடந்தது. அதிசயம் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லி வேறு இருந்தாள் அவந்திகா. இது பற்றி நான் விரிவாக முன்பே எழுதியிருக்கிறேன். திரும்ப எழுத விரும்பவில்லை.
பல பெற்றோர் தன் குழந்தைகள் மீது வைத்துள்ள பாசத்தை நான் அறிவேன். குழந்தைகளுக்காக உயிரையே விடுவார்கள். கோபாலகிருஷ்ணனின் கதையைச் சொல்கிறேன். சென்னையின் பிரபலமான கிரிக்கெட் கோச். இவரைப் பற்றி நான் நூறு பக்கமாவது எழுதியிருப்பேன். அம்பது தோழிகளாவது இருக்கும். பல தோழிகளோடு தேக சம்பந்தமும் உண்டு. ஒருநாள் சட்டென்று எல்லா தோழிகளையும் விட்டுவிட்டு ஸ்ரீராமனாக மாறினார். கேட்டால், பெண் வயசுக்கு வந்து விட்டாள் என்றார். ஆனால் தண்ணி உண்டு. கொஞ்ச வருடங்களில் தண்ணியையும் விட்டார். கேட்டால், பெண்ணுக்கு உயிராபத்து அளிக்கும் ஒரு நோய் வந்து, அதற்கான வேண்டுதலில் தண்ணியை தியாகம் செய்து விட்டேன் என்றார். குழந்தைகளுக்காகப் பெற்றோர் எந்த அளவுக்கும் செல்வார்கள். தன்னுடைய உயிரணுவிலிருந்து உதித்த குழந்தைக்காக.
கோபால கிருஷ்ணன் பற்றி பக்கம் பக்கமாக ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன். கற்பனைக் கதாபாத்திரம் அல்ல. இங்கே மைலாப்பூரில்தான் இருக்கிறார். தினந்தோறும் வாக்கிங்கில் பார்க்கிறேன்.
இப்படி ஒரு கோபால கிருஷ்ணன் அல்ல. எனக்குத் தெரிந்து எல்லா பெற்றோருமே கோபாலகிருஷ்ணன்களாகவே இருக்கிறார்கள்.
எல்லா குழந்தைகளையும் என் குழந்தைகளாக நேசிப்பவன் நான் என்று சொன்னால், உங்களால் நம்ப முடியவில்லை. அருவருப்பாக இருக்கிறது என்கிறீர்கள். உங்களைப் பொருத்தவரை நான் முழுக்க முழுக்க எதிர்மறையான ஆள்! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் R.D. Laing எழுதிய குடும்பத்தின் அரசியல் என்ற புத்தகத்தையும் Sanity, Madness and the Family என்ற புத்தகத்தையும்தான். இந்தப் புத்தகங்கள் பற்றி நான் 1980களில் இலக்கிய வெளிவட்டத்திலும், படிகள் பத்திரிகையிலும் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகங்களால்தான் நான் பாதிப்படைந்திருக்கிறேனே தவிர எண்பதுகளில் அஞ்சு வயசுக் குஞ்சோடு கோமணம் கூட கட்டாமல் அலைந்து கொண்டிருந்த அராத்து என்ற பையனிடமிருந்து அல்ல.
அராத்துவினால் நான் influence ஆகிறேனாம். என் கூட இருப்பவர்கள் என் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகிறார்களாம். அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அராத்துதான் என் சிந்தனையால் உருவாகியிருக்கிறார். அவரால் நான் அல்ல. நான் நேற்று எழுதிய அத்தனையும் ஆர்.டி. லெய்ங்கும் மார்க்ஸ் எங்கெல்ஸும் சார்த்தரும் சொன்னவை. நான் அல்ல. ஆனால் அவர்கள் வார்த்தைகளால் சொன்னதை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது உங்களுக்குப் புரியவில்லை. தன் குஞ்சிலிருந்து வந்தவை அல்லது தன் கர்ப்பத்தில் வளர்த்தவை என்பதற்காக நீங்கள் உங்கள் பிள்ளைகளை சீராட்டுகிறீர்கள். நான் யாரோ பெற்ற பிள்ளையை ஊட்டி வளர்த்தேன். இப்போது கூட அவந்திகா சொல்கிறாள், கார்த்திக் உன்னைப் போலவே யோசிக்கிறான், உன்னைப் போலவே நடந்து கொள்கிறான் என்று. இதிலும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நான் என் பிள்ளையை இப்படி ஆக வேண்டும் அப்படி ஆக வேண்டும் என்று வடிவமைக்கவில்லை. (Moulding) ஃப்ரெஞ்ச் படித்தான். தமிழ் இல்லை. ஏண்டா? தமிழுக்கு நாற்பது மதிப்பெண்ணும், ஃப்ரெஞ்சுக்கு 95 மதிப்பெண்ணும் தருகிறார்கள் என்றான். ஏண்டா இத்தனை குறைவான மதிப்பெண் என்று ஒருநாளும் கேட்ட்தில்லை. ஏண்டா உன் கையில் நான் புத்தகத்தையே பார்த்ததில்லையே, எப்போதுமே கிரிக்கெட் மட்டையோடு திரிகிறாயே, எப்படி இந்த 40 பர்ஸெண்ட் எடுக்கிறாய் என்றேன் ஒருநாள். புத்தகத்தை எடுத்தால் தலை சுற்றுகிறது டாடி என்றான். என்னை அப்பா என்று அழகாகத் தமிழில் அழையேண்டா என்று கூட சொன்னதில்லை. காரணம், நான் அவனைப் பார்த்த போது அவனுக்குப் பத்து வயது. அங்கிள் என்று அழைக்காமல் டாடி என்று அழைத்ததே சந்தோஷம்!
ஆனால் அப்படி ஒரு பதில் சொல்லும் அளவுக்கு அவனுக்கு என்னிடம் சுதந்திரம் இருந்தது. கதைப் புத்தகம் கூடவாடா? ஐயோ, அதுதான் ரொம்ப சுத்துது என்றான். இன்று வரை அவன் ஒரு புத்தகம் கூடப் படித்ததில்லை. நான் அவனை என் விருப்பப்படி மோல்ட் பண்ண விரும்பவில்லை. அவனைப் போல் சுதந்திரமாக வளர்ந்த பிள்ளையை இன்று வரை நான் பார்த்ததில்லை. தன் குஞ்சிலிருந்தும் தன் பையிலிருந்தும் வந்ததால் ஆண்களும் பெண்களும் தங்கள் பிள்ளைகளின் மேல் பாச மழையைப் பொழிந்து குழந்தைகளால் சுதந்திரமாக சுவாசிக்கக் கூட முடியாமல் ஆகி விட்டது. அதே சமயம், தங்கள் சந்தோஷம் எல்லாவற்றையும் வேண்டுதலாக்கி இறைவனிடம் கொடுத்து விட்டுத் தங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஏங்குகிறார்கள், வேண்டுகிறார்கள். எல்லாமே அந்தக் குழந்தைகள் தன்னுடைய உடலின் நீட்சி என்பதால். அந்த ஒரே ஒரு காரணம்தான்.
ஆனால் நானோ என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ரெண்டு லட்ச ரூபாயில் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் மகனின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தினேன்.
அவந்திகாவை எப்படித் திருமணம் செய்து கொண்டேன்? குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து நடந்து கொண்டிருந்த்து. உத்தரவு கிடைத்தால்தான் அடுத்த திருமணம் செய்ய முடியும். இல்லாவிட்டால் இரு தாரம் என்று உள்ளே தள்ளி விடுவார்கள். வேலையும் போய் விடும். அவந்திகாவோ இன்றே திருமணம் நடக்க வேண்டும், இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்கிறாள். காரணம், அவளுக்கு நிமிடத்துக்கு நிமிடம் தற்கொலை உணர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதைத் தடுக்க எக்கச்சக்கமான மாத்திரைகளை உட்கொள்கிறாள்.
திருமணம் செய்து கொண்டேன். சிறைக்குச் செல்லத் தயாராக இருந்தேன். வேலையை விடவும் தயாராக இருந்தேன். தாலி கட்டும்போது கூட தமிழ் சினிமா போல் போலீஸ் வந்து என்னைக் கைது செய்யும் என எதிர்பார்த்திருந்தேன். என் அலுவலக அதிகாரிக்குப் புகாரும் போயிற்று. வேலை போயிருக்கும். என்னை அறிந்த ஒரு எழுத்தாளர் தலைமை அதிகாரியாக இருந்தார். புகாரைக் கிழித்துப் போட்டு விட்டார்.
என்னிடமிருந்து ஞானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். நான் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புபவன் அல்ல. என்னுடைய ஞானம் உங்களுக்கு எதிர்மறையாகத் தோன்றினால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
ஜெயகாந்தனுக்கு அன்றைய தமிழக முதல்வர் ஃபோன் செய்து, உங்கள் முகவரி என்ன என்று கேட்டார். உங்கள் முகவரி என்ன என்று திருப்பிக் கேட்டவர் ஜேகே.
வடபழனியில் ஒரு ஓட்டலில் கண்ணதாசன் தன் காமக்கிழத்திகளோடும் மதுவோடும் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது அங்கே வந்த வாலிக்கு ஒரு பெண்ணை சுகிக்க ஆசை. கண்ணதாசனும் அவர்களில் ஒருத்தியைப் பார்த்து நீ இவரோடு போ என்றார். வாலியும் அந்தப் பெண்ணும் ஒரு அறைக்குள் போக, கண்ணதாசனின் அல்லக்கை ஒருவன் போலீஸுக்கு போன் போட்டு, வாலியை சிக்க வைக்கலாமா என்று கேட்கிறான். ஏனென்றால், திரைப்பாடல்களில் கண்ணதாசனுக்கு அப்போது வாலி போட்டி. “அவன் என் விருந்தினன், போடா அந்தாண்டை” என்று சொல்லி அப்படிக் கேட்டவரைக் கன்னத்தில் அறைந்தார் கண்ணதாசன்.
இந்தச் சம்பவத்தை வாலி விகடனில் எழுதியதும் தமிழ்க் கற்பு கெட்டு விட்டது என்று கொஞ்சம் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போதுதான் வாலி, எனக்கு சாருவைப் பிடிக்கும் என்று என்னைத் துணைக்கு அழைத்துக் கொண்டார்.
ஜெயகாந்தனுக்கே வருகிறேன். அண்ணாதுரை இறந்த போது “யாரை அறிஞர் என்று சொல்கிறீர்கள்? மூடர் கூட்டத்தில் மூடர் தலைவனே அறிஞன்” என்று ஆரம்பித்து அண்ணாதுரையைக் கிழி கிழி என்று கிழித்தார். அதுவும் அண்ணாதுரை இறந்த அன்று. சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில் போய் இதெல்லாம் நடிப்பாய்யா என்று கேட்டு, எல்லா ரசிகர்களும் ஜெயகாந்தனை அடிக்க வந்து விட்டார்கள். இதையேதான் பெரியார் கூட்டத்திலும் செய்தார் ஜேகே. அப்போது ஜேகேவைக் காப்பாற்றியவர் பெரியார்.
இப்படியெல்லாம்தான் எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். நான் மட்டும் எப்படி ஆடு போல் வாழ முடியும்? கழுதை போல் எழுத முடியும்?
ஆக, சமூகத்துக்கு எதிரான, சமூகத்தின் ஆட்டு மந்தைத்தனத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட ஜெயகாந்தன் எதிர்மறையான ஆளா? எழுத்தாளனின் வேலையே சமூகத்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டியதுதானே? இதில் எங்கே “எதிர்மறை” வந்த்து? நான் என்ன நீதிபோதனை வகுப்பா நட்த்துகிறேன்?
நேற்று எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு கட்டுரை இரண்டையும் காலையில் நீக்கினேன். இருபது கடிதங்கள் வந்தன. ஒரு பெண் கண்ணீர் விட்டு எழுதியிருந்தார். என்னைப் பதினைந்து ஆண்டுகளாக வாசிப்பவர்.
”Its so touching and I can feel you in every line. எத்தனையோ தடவை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், இந்த லௌகீக வாழ்க்கை உங்கள் எழுத்துக்குத் தடையாக இருக்கிறது என்றும் உங்களுக்குக் குடும்பம் இல்லை என்றும்? என்னுடைய ஆசையெல்லாம் எந்த நிபந்தனையும் இல்லாமல் உங்களுக்கு ஒரு அரண்மனையும் அதில் உங்களுக்கான நூறு சேடிப் பெண்களையும் தர வேண்டும் என்று.”
கட்டுரைகள் இரண்டையும் திரும்பப் போடா விட்டால் நேரில் வந்து போராடுவோம் என்று எழுதியிருக்கிறார்கள். பிறகு என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பத்து பேரிடம் கேட்டேன். அப்படி ஒரு கட்டுரையைத் தங்கள் வாழ்நாளில் வாசித்ததில்லை என்றார்கள். தமிழில் அப்படி எழுத நீங்கள் ஒருவர்தான் இருக்கிறீர்கள் என்றார்கள். கருந்தேள் ராஜேஷ், ஸ்ரீராம், செல்வகுமார் என்று ஒரு சில பெயர்களைச் சொல்ல முடியும். வட்ட்த்தைச் சேராத சில பிரபலமான கவிஞர்களையும் கேட்டேன். அவர்களும் வட்ட நண்பர்கள் சொன்னதையேதான் வலியுறுத்திச் சொன்னார்கள்.
ஜெயமோகனின் கதையோடு முடிக்கிறேன். புதுமைப்பித்தனைப் பார்த்து ஒருவன் கேட்கிறான், ஏன் ஐயா உமக்குக் காசநோய் வந்தது?
ஊரெல்லாம் காறித் துப்பியது, அதனால் வந்தது.
அதனால்தான் ஒருசிலர் என் மீது காறித் துப்புவதையும் கண்டு எந்த உணர்வையும் காண்பிக்காமல் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
ஔரங்ஸேப் முடித்து விட்டேன்.
பிரதியை செப்பனிட்டவர்கள் பிச்சைக்காரன், ஆத்மார்த்தி, கொள்ளு நதீம், ஃபைஸ் காதிரி, ப்ரஸன்ன வெங்கடேசன். முதல் தேதி அன்று நாவல் பிரதி பதிப்பகத்துக்குப் போய் விடும்.
அடுத்த வாரத்திலிருந்து தியாகராஜாவில் அமர்வேன். ஆறு மாத்த்தில் முடிப்பேன். இறைவனின் அனுமதி இருந்தால்.
தியாகராஜாவை முடித்து விட்டு அசோகா.
அசோகாவுக்கு அடுத்து 1857. அதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர். அதைத் தொடர்ந்து…