ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்களின் சமீப கால நடவடிக்கைகள் மோடியை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிரதம மந்திரி நாற்காலியிலேயே உட்கார வைக்கும் என்று தோன்றுகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் மோடிக்கு எதிரான அரசியல் பிரச்சாரம் நடந்தது. குறிப்பாக கிறித்தவ அமைப்புகளில். அது ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே பயன்பட்டது. அது மோடிக்கு ஆதரவான வாக்குகளாக மாறியது. அரசியலில் ஆர்வம் இல்லாத ஹிந்துக்களைக் கூட மோடிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கவே அது போன்ற மோடி எதிர்ப்புச் செயல்பாடுகள் பயன்பட்டன. இப்போது உதய்பூரின் தையல்காரர் படுகொலையும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே பயன்பட்டது. அது மோடிக்கான வாக்குகளாகவே மாறும்.
இப்போது நான் சரஸ்வதியின் வீணையோடு இன்னொரு கையில் ஓல்ட் மாங்க் ரம்மைக் கொடுத்து ஒரு படத்தைப் போட்டு ரெண்டு பக்கத்தில் ஒரு கதையை எழுதினால் நாளையே நியூயார்க் டைம்ஸ் முகப்பில் இடம் பெற்று விடுவேன். கார்டியன் பத்திரிகை என்னைப் பற்றிக் கட்டுரை எழுதும். என்னைக் கைது செய்யச் சொல்லி தில்லி பாஜக தலைவர்கள் ட்விட்டரில் எழுதுவார்கள். உடனே நான் கதையையும் படத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டு விடலாம்.
ஆனால் இது போன்ற செயல்பாடுகள் திரும்பத் திரும்ப மோடியின் அரசியலுக்கு மட்டுமே உதவும். மேலும், மற்ற மதங்களில் இல்லாத “கருத்துச் சுதந்திரத்தை” ஹிந்து மதத்தில் மட்டும் ஏன் எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்கள்? உலக அளவில் ஹிந்து மதம் ஒரு சிறுபான்மை மதம்தானே?
நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். எந்த மதத்தோடும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவன். ஆனாலும் செக்யூலரிஸம் என்ற வார்த்தையை வெறுக்கிறேன். மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை அது. ஹிந்து மதத்தை அவமதிப்பது என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் செக்யூலரிஸம் என்று அழைக்கப்படுகிறது. எந்த மதத்திலுமே சகிப்புத்தன்மை இல்லாத இன்றைய சூழலில் ஒரு மதத்தை மட்டும் குறி வைத்துத் தாக்குவது செக்யூலரிஸம் இல்லை.