நான் என்னுடைய இணைய தளத்தில் எழுதுவதை என் நண்பர்கள் யாரும் ஃபேஸ்புக்கில் எடுத்துப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என் நண்பர்களை மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், ஃபேஸ்புக்கில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஒன்றும் தெரியாதவர்கள், படிக்காதவர்கள். மிக மேம்போக்கான அரசியல் அபிப்பிராயங்கள் கொண்டவர்கள். அதை விட முக்கியமாக, ஃபாஸிஸ மனோபாவம் உடையவர்கள். சற்று முன்பு நான் எழுதியிருந்த பதிவுக்கு ஒரு ஃபேஸ்புக் அன்பர் “சாரு, நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள் போல் தெரிகிறது, போய் ஓய்வெடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். இது போன்ற பல ஆபாசக் கடிதங்கள் எனக்கு தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. நீ செத்துப் போ என்று மின்னஞ்சல் வராத ஒரு நாள் கூட எனக்கு இல்லை. நீ செத்துப் போ என்பதற்கும் ‘ஓய்வெடு’ என்பதற்கும் என்ன வித்தியாசம்? எழுத்து என் சுவாசம். என் ஸ்மஷான் தாரா முடிவெடுக்கும் வரை நான் சுவாசித்துக் கொண்டுதான் இருப்பேன். அதை நிறுத்தச் சொல்வதற்கு எந்தப் பதருக்கும் உரிமையில்லை.
ஒருவரை ஓய்வெடுக்கச் சொல்வது சர்வாதிகாரிகளின் வேலை. சோர்வாக இருப்பவன்தான் ஆறு மாதத்தில் ஆயிரம் பக்க நாவலை எழுதி முடிப்பானா? நம் கருத்துக்கு ஒத்து வராதவர்களையெல்லாம் போய் ஓய்வெடுக்கச் சொல்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்று கூட அந்த அன்பருக்குப் புரியவில்லை. கருத்து முரண்படலாம். ஆனால் என்னை ஓய்வெடுக்கச் சொல்ல இவர் என்ன அதிகாரியா? சர்வாதிகாரியா? எப்பேர்ப்பட்ட தெருப்புழுதிகளெல்லாம் ஃபேஸ்புக்கில் உலவுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். இனிமேல் என் இணைய தளத்தில் எழுதுவதை ஃபேஸ்புக் குப்பையில் போய் பகிராதீர்கள் என்று என் நண்பர்களை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.