எனக்குப் பொதுவாக இது எந்த மாதம் என்று தெரியாது. என்ன தேதி என்று தெரியாது. என்ன கிழமை தெரியாது. அதேபோல் இன்று எழுந்த போதும் நாள், கிழமை, மாதம் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு கேள்வி எழுந்தது. ரொம்ப நாளாக அவருக்குப் பிறந்த நாள் என்று கேள்விப்படவில்லையே? தாண்டி கீண்டிப் போய் விட்டதோ? யாரைக் கேட்கலாம்? அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கலாமா? அவரையே கேட்டால் சுவாரசியம் இருக்காதே? அவர் வேறு வேலை மிகுதியால் பத்துப் பதினைந்து நாட்களாகப் பேசவில்லையே? சரி, ஏதாவது செய்து அவருடைய பிறந்த நாளைக் கண்டு பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு காவேரி மருத்துவமனைக்குச் சென்றேன். இன்று கொஞ்சம் உடல் பரிசோதனைகள் இருந்தன.
நண்பரிடமிருந்து எட்டரைக்கு போன். ஒரு நல்ல கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வேறு யாரிடமோ தேங்க் யூ தேங்க் யூ என்று சொன்னது கேட்டது. “என்ன, உங்களுக்கு இன்று பிறந்த நாளா?” என்று கேட்டேன். “ஆமாம் சாரு, அதைச் சொல்லத்தான் உங்களை அழைத்தேன். இந்தக் கவிதை பிஸனஸ் முடிந்து சொல்லலாம் என்று இருந்தேன்” என்றார்.
நாம் அடிக்கடி அன்பு பற்றிப் பேசுகிறோம். கேள்விப்படுகிறோம். படிக்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரிவதில்லை. எனக்கு எது அரிதாகத் தோன்றியதோ அதை அவருக்குப் பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்தேன்.