குரு பூர்ணிமா

ஒருமுறை மஹா பெரியவரிடம் ஒரு பக்தர் கேட்டார், என்னுடைய குருவிடம் பல தீய பழக்கங்கள் இருக்கின்றன. அதனால் குருவை மாற்றி விடவா?

வீட்டைத் தூய்மை செய்யும் துடைப்பம் அழுக்காகத்தான் இருக்கும். வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனி. குருவை மாற்றினால் உனக்குப் பரிசுத்தமான குரு எப்போதுமே கிடைக்க மாட்டார்.

என் எழுத்துதான் உங்களுக்கு நான் அளிக்கும் ஞானம். நான் அளிக்கும் பரிசு. என் எழுத்து ஒரு பொக்கிஷம். அதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளுங்கள். மற்றபடி நான் பாதாள சாக்கடையைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு தொழிலாளி. என் கையில் இருக்கும் சாராயப் புட்டியைப் பார்த்து நீங்களும் சாராயத்தைக் கையில் எடுக்காதீர்கள். சாராயம் இல்லாமல் பாதாள சாக்கடையில் இறங்க முடியாது. இசைக் கலைஞனாக இருந்தாலும் சரி, ஓவியனாக இருந்தாலும் சரி, எழுத்தாளனாக இருந்தாலும் சரி, அவன் அசாதரணனாகத்தான் இருப்பான். வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ஆலன் கின்ஸ்பர்க், ஜான் ஜெனே, ஹெமிங்வே போல் நீங்கள் எந்த எழுத்தாளரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் ரத்தச் சகதியில்தான் நின்று கொண்டிருப்பார்கள். வில்லியம் பர்ரோஸுக்கு ஒரு நாள் ஒரு மிகப் பெரிய பிரச்சினை. போதை ஊசியைக் குத்திக் கொள்ள இரண்டு கைகளிலும் இடம் இல்லை. கடுகத்தனை இடம் இல்லை. அந்த அளவுக்கு ஏற்கனவே குத்திக் கொண்டாயிற்று.

நான் சொல்வதில் உங்களுக்குத் துளி சந்தேகம் இருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸில் உள்ள Bohemian Rhapsody என்ற படத்தைப் பாருங்கள். அந்தப் படத்தில் வரும் ஃப்ரெட்டி மெர்க்குரி (க்வீன்) நான்தான். அவன் பாடுகிறான். நான் எழுதுகிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் என்னை நீங்கள் பின்பற்றக் கூடாது. ஏனென்றால், நான் பாதாள சாக்கடையில் நின்று கொண்டிருக்கிறேன். அந்த பாதாள சாக்கடையில் நின்று கொண்டு நான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது ஞானம். அதைப் பற்றிக் கொள்வதோ நிராகரிப்பதோ உங்கள் விருப்பம், உங்கள் சாமர்த்தியம். பதிலாக என் கையிலிருக்கும் சாராய போத்தலைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் துரதிர்ஷ்டசாலி.

என் வாழ்விலிருந்து கண்டறிந்த ஞானத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன். அப்படிப்பட்ட குருவை நீங்கள் வணங்கும் ஒரு நாள் என்பது ஒரு குறியீடு. ஒவ்வொரு குருவுக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. என் பாணி சிநேகபூர்வமானது. ஆனாலும் உள்ளே நுழைந்தால் பின்பற்றுவதற்கு மிகவும் சிரமமானது. நான்கு பேர் சாப்பிடும்போது நால்வரிலும் அதிக பணம் உள்ள ஒருத்தர் உணவுக்குப் பணம் செலுத்தவில்லை எனில் அவரை அன்றே அப்போதே கடிந்து கொள்வது என் பழக்கம். அடுத்த முறையும் அவர் அப்படியே இருந்தால் அவரை நான் பார்ப்பது அதுவே கடைசி முறையாக இருக்கும். இப்படி ஒரு நூறு வாழ்வியல் நடைமுறைகளைக் கொண்டது என் சிநேகம்.

கருணை, தயை, அன்பு, மாற்றாரை எக்காரணம் கொண்டும் சுரண்டாமல் வாழ்தல் – இவைதான் என் வாழ்வியல் நடைமுறைகள். இதை என் சந்திப்புகளில் கலந்து கொள்ளும் அத்தனை பேரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். உங்களுக்கு முன்னுதாரணமாக நானே கக்கூஸ் கழுவிக் கொண்டிருப்பேன். அம்மா அப்பாவைச் சுரண்டி வாழும் ஒட்டுண்ணி இளைஞர்களுக்கு என் சங்கத்தில் இடமே இல்லை. அடித்துத் துரத்தியிருக்கிறேன். முதலில் போய் உன் அன்னையை கவனித்து விட்டு வா சிறுவனே என்று என் வார்த்தை கேட்டு ஓடிய இளைஞர்கள் பலர் உண்டு. இருபத்தைந்து வயதுக்கு மேலும் பெற்றோரைச் சுரண்டி வாழும் இளைஞர்களை என் அருகில் வர நான் அனுமதிப்பதே இல்லை. இப்படிப்பட்ட கடுமையான நிபந்தனைகளோடு கூடியதே என் நட்பு.

என்னைப் போல் வாழ முயற்சிக்காதீர்கள். அப்புறம் பூமியின் அடியிலே கிடக்கும் கரிச் சுரங்கங்களுக்குள் செல்ல வேண்டியிருக்கும். அந்த இருள் பயணத்தில் மரணமும் சம்பவிக்கலாம். ஆனால் வெளியே வந்து நான் உங்களுக்கு அளிக்கும் வைரக் கற்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்வின் வெளிச்சமாக விளங்குவதைக் கண்டு கொள்வீர்கள்.

சென்ற வாரம் என் ரத்த அழுத்தம் 230 – 130. என் சிந்தனை எனக்கு அளித்த பரிசு. என் உடலையும் உயிரையும் உருக்கித்தான் உங்களுக்கு என் ஞானம் வழங்குகிறேன்.

இப்போது ஒரு மாத்திரையின் மூலமும் சில ஆசனங்களின் மூலமும் – மூன்று தினங்களில் – 130 – 80 அளவுக்குக் கொண்டு வந்து விட்டேன்.

நான் பூமியில் தங்கியிருக்கும் வரை உங்களுக்கு நான் கண்டடைந்த வைரக்கற்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

உங்கள் அனைவருக்கும் என் அன்பு.

கீழே உள்ளது என் ஆருயிர்த் தோழன் பிச்சையின் கடிதம்:

சாரு  ..
தளராத  உழைப்பில்
தடையறாத்  தமிழில்
இலக்கியம்  இசை  என      எதைத்தொட்டாலும் 
அதைப்பொன்னாக்கும்  ரசவாதத்தில்
பிறர் உணர்வை மதிக்கும்
சுரணையுணர்வை விதைப்பதை
இடையறாது செய்து  வருவதில்
ஸீரோ  டிகிரி   ராஸ லீலா என சிகரங்களைத்  தொட்டபின்னும்
புதிதாக  சிகரங்களை  சிருஷ்டித்து
அந்த  சிகரங்களையும் தொட்டுப்பார்க்கும்
ஒளரங்ஸேப்  போன்ற  கலைவெற்றிகளை தருவதில்
உணவு முதல் உடை வரை
எழுதும் பேனா முதல்  
தொழுதிடும்  இறை வரை
ஒவ்வொன்றிலும் உயர்ரசனை
காட்டும் , உயர்உள்ளத்தில்
என ஒவ்வொன்றிலும்  ஒளியாய்சுடர்விட்டு  முன்னுதாரண நாயகனாய்  வாழும்
எங்கள்  சாருவுக்கு
குருபூர்ணிமா  நன்னாளில்
குரு  வணக்கங்கள

அனைத்து வாசகர்கள் சார்பாக
பிச்சை