சங்க இலக்கியத்தையும் காளிதாஸனையும் படித்துக் கொண்டிருக்கிறேன். தியாகராஜாவுக்குள் நுழைவதற்கு முன்பாக மேற்கண்ட இரண்டையும் முடித்து விடலாம் என்று யோசனை. ஓரளவு பாதி முடித்து விட்டேன். சங்க இலக்கியம் பற்றி எழுத ஏராளமாக உள்ளது. எழுத ஆரம்பித்தால் நாவலை ஆரம்பிக்க முடியாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு படித்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சங்கப் புலவர்கள் பாவம், பெரும்பாலும் மன்னர்களிடம் போய் யாசகம் கேட்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். ஆதியிலிருந்தே தமிழ் சமூகம் எழுத்தாளர்களைப் பட்டினிதான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறது. யாசகம் கேட்டும் கிடைக்காத ஒரு புலவன் விட்ட சாபத்தில் இரண்டு ஊர்களே அழிந்திருக்கின்றன. சரி, அதை விடுங்கள். நாம் ஒரு நல்ல விஷயத்தைப் பேசுவோம்.
நான்தான் ஔரங்ஸேப்… இன்னும் சில தினங்களில் அச்சுக்குப் போக இருக்கிறது. நாளை the outsider படத்துக்கான இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதற்காக இரண்டு லட்ச ரூபாய்க்குத் தளவாடங்கள் வாங்கிக் கொண்டு வந்தோம். ஏற்கனவே ஐந்து லட்சத்துக்குக் கேமரா, லென்ஸ் போன்ற சாதனங்களை வாங்கி விட்டோம். ஆக, தளவாடங்களே ஏழு லட்சம். பயணச் செலவு, கேமராமேனுக்கான ஊதியம் எல்லாம் சேர்த்தால் இப்போதே பத்து லட்சத்தைத் தொட்டு விட்டது.
இந்த ஆவணப் படத்துக்கான காரணத்தை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். இப்போது சங்க இலக்கியத்தைப் படிக்கும் போது இந்தப் படத்தின் முக்கியத்துவம் மேலும் வலுக்கிறது. சங்கப் புலவர்களிலேயே அதி சிறப்பானவரான கபிலரின் வாழ்க்கை பற்றியே நமக்கு எதுவும் தெரியவில்லை. அவர் பாடல்களில் அவர் எழுதியுள்ள ஓரிரு குறிப்புகளிலிருந்துதான் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. (அந்தணன், புலவன்.) சரியான வரலாறு எழுதப்படாததால் ஒவ்வொரு கவிஞர் பற்றியும் எக்கச்சக்கமான கப்சாக்களும் புருடாக்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் ஒரு கப்சா, ஔவையார், திருவள்ளுவர் எல்லாம் கபிலரின் கூடப் பிறந்தவர்கள்! கிரேக்கத்தில் பார்த்தால் சிந்தனையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தத்ரூபமாக சிலை வடித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட எழுத்தாளனின் மாணவர்களின் பெயர்களையெல்லாம் கூடத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் குறையைப் போக்குவதற்காகத்தான் இந்த ஆவணப்படம்.
நாவலின் முதல் சிறப்பு பிரதியின் நன்கொடை மதிப்பு மூன்று லட்சம் ரூபாய். நாவலிலேயே முதல் பிரதி என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். முன் அட்டையும் பின் அட்டையும் வெள்ளியில் இருக்கும். முன்னட்டையில் சாரு 70 என்று எழுதப்பட்ட தங்க நாணயம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதை நீங்கள் வெளியில் கொண்டு சென்று படிக்க முடியாது என்பதால் சாதா பிரதி ஒன்றும் தரப்படும்.
சிறப்பு அட்டையைக் கொண்ட நாவலின் மற்றொரு சிறப்புப் பதிப்பின் நன்கொடை மதிப்பு ஐந்து லட்சம். இதைத் தருபவரின் பெயர் நாவலின் எல்லா பிரதிகளிலும் பின்வருமாறு கொடுக்கப்படும். இந்தப் பிரதியை வாங்குபவர் பெயர் ராஜேஷ் என்று வைத்துக் கொண்டால்,
ராஜேஷ் வழங்கும்
நான்தான் ஔரங்ஸேப்…
என்று எல்லா பிரதிகளிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
அடுத்து ஐந்து சிறப்புப் பிரதிகள் ஒவ்வொன்றின் நன்கொடை மதிப்பு ஒரு லட்சம். ஐந்து பேர் வரை இந்த சிறப்புப் பிரதிகள் தரப்படும். சிறப்பு அட்டையில் சாரு 70 என்று பதிக்கப்பட்டிருக்கும் தங்க நாணயம் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த பத்து பேருக்கான சிறப்புப் பதிப்பின் நன்கொடை மதிப்பு ஐம்பதாயிரம். நூலின் சிறப்பு அட்டையில் சாரு 70 என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயம் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்து, நூறு சிறப்புப் பிரதிகள். நன்கொடை பத்தாயிரம் ரூபாய். சிறப்பு அட்டையில் சாரு 70 என்று பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் பொருத்தப்பட்டிருக்கும். இவர்கள் அனைவரின் பெயர்களும் நாவலின் ஆரம்பத்தில் குறிக்கப்படும்.
செப்டம்பர் வாக்கில் நடக்கும் நாவல் வெளியீட்டு விழாவில் இவர்கள் அனைவரும் மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விழாவில் நான் மட்டுமே பேச இருக்கிறேன். வேறு சிறப்புப் பேச்சாளர்கள் யாரும் இல்லை. உரை முடிந்ததும் வாசகர்களுடன் கலந்துரையாடல், கேள்வி பதில் நேரம் எல்லாம் உண்டு. ஒரு சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி ஏழரை மணிக்கு விழா முடியும்.
கை கொடுக்க அழைக்கிறேன்…
இன்னொரு குறிப்பு: ஐந்து லட்சம், மூன்று லட்சம், ஒரு லட்சம், மற்றும் ஐம்பதாயிரம் நன்கொடை வழங்கியவர்கள் ஒரு வார இறுதியை என்னோடு கொண்டாடலாம். அநேகமாக மகாபலிபுரத்தில். தேதி அவர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com