the outsider (9)

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கதை.  என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான்.  கட்டணம் கட்ட காசு இல்லை.  வங்கிக் கடனும் கிடைக்கவில்லை. படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.  நான் வேலையை விட்டு விட்டேன்.  வேலையை விட்டால் பட்டினி கிடந்தாவது பிழைத்துக் கொள்ளலாம்.  அதிகாரியை அடித்து விட்டால் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும்.  அதிகாரியை அடிப்பது தவிர வேறு வழியே இல்லை.  நைனான் என்ற அந்த அதிகாரி என்னை இடியட் என்று திட்டினான்.  ஃபோனை எடுத்துத் தரையில் அடித்தேன்.  அவன் முகத்தில் அடித்திருந்தால் அவன் முகம் கிழிந்திருக்கும்.  அவனை அலுவலகத்தில் ஸைக்கோ என்பார்கள்.  நான் ஸ்டெனோ.  என்னையும் ஸைக்கோ என்றுதான் சொல்வார்கள்.  என்னை அவனுக்கு ஸ்டெனோவாகப் போட்ட போது அலுவலகமே அதிர்ச்சி அடைந்த்து.  ஐயோ ரெண்டு ஸைக்கோவும் சந்திக்கப் போகிறதே.  அவன் இடியட் என்றான்.  ஏற்கனவே ஒரு அம்பது வயது ஸ்டெனோவை சட்டைக் காலரைப் பிடித்து வெளியே தள்ளியவன் நைனான். மலையாளி.  வயது 25.  புதிதாக ஐஏஎஸ் தேர்வாகி வந்திருக்கிறான். 

அவன் வேறு ஏதாவது திட்டி நான் அவனை அடித்து நான் ஜெயிலுக்குப் போவதற்கு முன்னால் அங்கிருந்து ஓடி விட வேண்டும் என்றுதான் வேலையை விட்டேன்.  இதற்கிடையில் நாலு எழுத்துப் பெயர் கொண்ட இன்னொரு அயோக்கியன்.  அவன் ஸைக்கோ அல்ல.  தமிழ்நாட்டின் நம்பர் ஒன் அரசியல்வாதியின் நெருங்கிய சொந்தம்.  பிராமணன்.  பிராமணர்களை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்தில் நுழைந்தவன்.  அவன் என்னை ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.  ஐஏஎஸ்.  அவன் இன்னமும் பெரிய இட்த்தில் இருப்பதால் பெயரைச் சொல்ல முடியாது.  அவனும் நைனானும்தான் தபால் துறைக்குத் தூண்கள் என்று இன்னொரு அதிகாரி சொல்லுவார்.  அவர் சிறுபத்திரிகை எழுத்தாளர். 

வேலையை விட்டேன்.  பட்டினி கிடப்பது பெரிதா?  நான் ஜெயிலில் இருப்பது பெரிதா?  வேலையை விட்டு விட்டுத்தான் அவந்திகாவிடம் விஷயத்தையே சொன்னேன்.

அவந்திகா அழுது நான் பார்த்த்து ஒரே ஒரு முறைதான்.  கார்த்திக்கின் படிப்பை நிறுத்தலாம் என்று முடிவு எடுத்த போது.  கடவுளின் பட்த்துக்கு முன்னே அமர்ந்து கண்ணீர் சிந்தினாள்.

வீட்டு ஃபோனுக்கு ஒரு ஃபோன் அழைப்பு.  அப்போதெல்லாம் என்னிடம் மொபைல் போன் இல்லை. அமெரிக்க ஆங்கிலத்தில் ஐயாம் கேலா ஸ்பீக்கிங் என்றது குரல்.  ரொம்ப நேரம் கழித்துத்தான் அது கலா என்று புரிந்து கொண்டேன்.  50000 ரூ. அனுப்பியிருக்கிறேன், கிடைத்த்தா?  ஆங்கிலம்.  அப்புறம்தான் பார்த்தேன்.  கிடைத்த்து.  கார்த்திக் படிப்பு முடியும் வரை 80 சதவிகித கட்டணம் கலா அனுப்பியதுதான்.  கலா அமெரிக்காவில் மருத்துவ மாணவி.  உங்களுக்கு ஏது இத்தனை பணம் என்று ஒருநாள் கேட்டேன்.  படிப்புக்கான உதவித் தொகை என்றார். 

அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட அவசியம் இன்றிப் பேசியதில்லை.  கார்த்திக் படிப்பு முடிந்த்து.  கேலா காணாமலே போய் விட்டார்.  நான் எழுதிய மின்னஞ்சல்களுக்கும் பதில் இல்லை.

கலா புனைப்பெயர் இல்லை. நிஜப் பெயர். கலா ஒரு கனவு. 

நீங்கள் கவனித்துப் பாருங்கள்.  எங்குமே பெண்கள் காசு கொடுக்க மாட்டார்கள்.  பொதுவாக அவர்களிடம் காசு இருக்காது.  இப்போதைய நிலை அப்படி இல்லை.  வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கிறார்கள்.  இருந்தும் அவர்கள் காசு கொடுக்க மாட்டார்கள்.  அந்த சமூகவியல் பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை.  காசு கொடுக்க மாட்டார்கள் என்பது எதார்த்தம்.  உதாரணமாக, மூன்று பேர் சாப்பிடுகிறீர்கள்.  இரண்டு ஆண்கள்.  ஒரு பெண்.  மூவரில் அந்தப் பெண்ணுக்குத்தான் ஊதியம் அதிகம்.  ஆனாலும் அவள் காசு கொடுக்கி மாட்டாள்.  அது ஒரு ஜெனடிக் பிரச்சினை.  சமூகவியலை விட இது ரொம்ப முக்கியம்.

இந்த நிலையில் நான் தான் தமிழ்ச் சமூகத்தில் முதல் முதலாக படிப்புக்குக் காசு கொடுக்கி வேண்டும் என்ற சிந்தனையை எல்லோருடைய மனதிலும் விதைத்தவன்.  எந்த வருமானமும் இல்லாத ஹவுஸ்வைஃப் என்று சொல்லப்படும் ஐந்து ஆறு பெண்கள் எனக்கு மாதாமாதம் 500 ரூ. அனுப்புகிறார்கள்.  வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். 

ஔரங்ஸேப் சிறப்புப் பிரதிக்காக நேற்று ஒரு பெண் 25000 ரூ. அனுப்பியிருந்தார்.  அவர் பெயர் தெரியவில்லை.  என்னைப் பற்றி எதுவுமே எழுத வேண்டாம் என்ற குறிப்பு மட்டும் இருந்தது.  பெயரே தெரியாதவர் பற்றி இத்தனை எழுதி விட்டேன்.  அவர் என்னை மன்னிக்க வேண்டும்.  இதை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது. 

கேமரா சாதன்ங்களைத் தூக்குவதற்கே ஒரு உதவி ஆள் தேவை.  அஸிஸ்டண்ட் கேமராமேன்.  தினச் சம்பளம் 2000 ரூ என்கிறார்கள்.  வேண்டாம் என்று சொல்லி விட்டு நாங்களே தூக்கிக் கொண்டு அலைகிறோம். 

சிறப்புப் பிரதிக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.  என் மின்னஞ்சல் முகவரி

charu.nivedita.india@gmail.com

எந்த்த் தொடர்பும் இல்லாமல் பணம் அனுப்ப வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் பின்வரும் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். 

Bank details:

Name: K. ARIVAZHAGAN

Axis Branch, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai 600004

Account Number: 911010057338057 IFSC Code: UTIB0000006

MICR code: 600211002