தனுஷுக்காக க்ரே மேன் பார்த்தேன். ஒரு ஹாலிவுட் குப்பை. விக்ரம் மாதிரி. ஆனால் எனக்கு இப்படிப்பட்ட குப்பைகள்தான் பார்க்கப் பிடிக்கிறது. காரணம், என் ரத்த அழுத்தம். எதையும் சிந்திக்காமல் – சொல் அற்று சும்மா இருந்தால் ரத்த அழுத்தம் 120 – 80யில் நிற்கிறது. அதாவது, காலையில் எழுந்ததும் சோதித்தால் வரும் அளவு 120 – 80. பல் துலக்கி, தியானம் செய்து விட்டுப் பார்த்தால் 110- 70. பகல் முழுவதும் சிந்தித்து, படித்து, எழுதி விட்டுப் பார்த்தால் 180 – 120. 180 எல்லாம் போகவே கூடாது என்று சொல்லி விட்டார் மருத்துவர். அதற்காக சிந்திப்பதை நிறுத்த முடியுமா? சிந்திப்பதுதானே தொழிலே? இந்த நிலையில் சிந்தனையைத் தூண்டுவது போன்ற பெர்க்மன் ரகப் படங்களைப் பார்த்தால் அழுத்தம் மேலும் எகிறி விடுகிறது. ஆகவே, தொல்லையற்ற பொழுதுபோக்கு என்று எடுத்தால் விக்ரம், க்ரேமேன் போன்ற குப்பைகள்தான் எனக்கு சரிப்பட்டு வருகின்றன. ஆனால் இப்படி குப்பையில் புரளுவது எப்போதாவதுதான். சிலரைப் போல தினசரி காரியம் அல்ல. அதிலும் தனுஷ் எனக்குப் பிடித்த நடிகர் என்பதால் க்ரே மேனைப் பார்த்தேன்.
தமிழ் சினிமா நடிகர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாகவும் பரிதாபமாகவும் இருக்கும். பொறாமை ஏன் என்றால், உலகில் எங்கேயும் இல்லாத அளவுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் புகழ். அந்தப் புகழுக்கு உரியவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே ஆவர். எல்லா நாடுகளிலுமே இதுதான் நிலைமை. தமிழ்நாட்டைத் தவிர மற்ற உலக நாடுகளில் புகழ் என்ற ஒரு நிகழ்வில் எழுத்தாளர்கள்தான் அதிக உயரத்தில் இருப்பவர்கள். இத்தனைக்கும் எனக்குப் புகழ் பிடிக்காது. என்னை யாரும் கவனிப்பதை நான் விரும்ப மாட்டேன். நான் இங்கே சொல்வது எல்லாமே பொதுவானவை. என்னை முன்னிறுத்தி அல்ல. புகழ் பிடிக்காத ஒருவனுக்கு ஏன் நடிகர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்க வேண்டும்? நடிகர்களின் முன்னே எழுத்தாளன் கை கட்டி நிற்க வேண்டியிருக்கிறது என்பதுதான் காரணம். இதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொள்ளாதீர்கள். கை கட்டி என்றால் கை கட்டி அல்ல. நடிகரை ஒரு எழுத்தாளன் சார் என்றுதான் அழைக்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் நடிகரை விட மூத்தவராக இருந்த போதிலும்! அது அந்த எழுத்தாளரின் தவறு என்றார் என் நண்பர். இல்லை. சார் என்று அழைக்கப்படுவதுதான் நடிகருக்கு விருப்பமானதாக இருக்கிறது. சார் என அழைக்காத எழுத்தாளனை நடிகர் தன்னை நெருங்க விடுவதில்லை. ஆனால் நடிகரோ எழுத்தாளனைப் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார், பேசுகிறார்.
இங்கே ஒருவரின் தகுதி என்பது பணத்தையும் புகழையும் மட்டுமே வைத்து அளவிடப்படுகிறது. இரண்டிலுமே எழுத்தாளன் மிகவும் கீழ்த்தட்டில்தான் நிற்கிறான். ஒரு உதாரணத்துக்குப் பாருங்கள், ஒரு நடிகர் ஒரு எழுத்தாளனைச் சந்திக்க விரும்பினால் (விபரீதமாக அப்படி ஏதேனும் நடந்தால்!), நடிகர் வீட்டுக்குத்தானே எழுத்தாளன் செல்ல வேண்டியிருக்கிறது? எழுத்தாளர் வீட்டுக்கா நடிகர் வருகிறார்?
ஆனாலும், நடிகரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்றும் சொன்னேன். ஏனென்றால், இன்றைய தினம் புகழின் உச்சியில் அமர்ந்திருக்கும் நடிகர் அவர் காலத்துக்குப் பின் அவர் பெயரே தெரியாமல் மறக்கடிக்கப்படுகிறார். எம்.கே.டி. ஒரு சிறந்த உதாரணம். ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஸோஃபாக்ளிஸின் நாடகங்கள் இன்னமும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்னுடைய நாவல்களும் சில சிறுகதைகளும் இன்னும் 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் அர்த்தமிழக்காமல் இருக்கும் என்று நம்புகிறேன்.
காளிதாஸனை இப்போது பயின்று கொண்டிருக்கிறேன். ஆனால் காளிதாஸனை என்னைப் போன்ற எழுத்தாளர்களும் பண்டிதர்களும்தான் வாசிக்க முடியும். இன்று பெரும் காவியங்களின் வாசிப்புக் காலம் முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது. ரகுவம்சத்தின் மூத்த அரசன் திலீபன் இந்திர லோகத்துக்குச் சென்று திரும்பி வரும்போது கற்பக விருட்சத்தின் கீழே நின்று கொண்டிருந்த காமதேனுவை பிரதக்ஷிணம் செய்யாமல் வந்து விடுகிறான், அதனால் கோபமடைந்த காமதேனு அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் ஆவது என்று சபித்து விடுகிறது. (அதன் பிறகு அவன் காமதேனுவின் கன்றான நந்தினிக்குப் பணிவிடை செய்து சாப விமோசனம் பெறுகிறான், அது வேறு விஷயம்…) ஆனால் இதையெல்லாம் படிக்கும் இன்றைய இளைஞனுக்கு இது எப்படி அர்த்தமாகும் என்று யோசிக்கிறேன்.
ஆனால் காளிதாஸனுக்கும் முன்னால் எழுதப்பட்ட கிரேக்க நாடகங்கள் அப்படி அல்ல. அவை இன்றைக்கும் – இன்றைய வாழ்வுக்கும் பொருந்தக் கூடியதாக – சமகாலத்தில் எழுதப்பட்டவை போல் இருக்கின்றன.
அதனால்தான் இன்று புகழின் வெளிச்சத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடிகர்களைப் பார்க்கும் போது எனக்கு விட்டில் பூச்சிகளின் வாழ்வு ஞாபகம் வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தனுஷ் அபாரமான நடிகர். அது அவருக்குக் கடவுள் தந்த வரம். ஆனால் க்ரே மேனில் அவர் ஒரு ஸ்டண்ட் நடிகராக மட்டுமே சில நிமிடங்கள் வந்து போகிறார். அவருக்கென்று படத்தில் தனித்துவமான அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது (லோன் வுல்ஃப்) என்றாலும், அந்தப் பாத்திரம் மனதில் பதியும்படி இல்லை. படம் முழுவதும் அடிதடி. அதில் ஒரு அடிதடியில் தனுஷ் இடம் பெறுகிறார். ஆனாலும் தனுஷின் பாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்படி ஒரு முக்கியமில்லாத பாத்திரத்துக்கு மறக்க முடியாத ஒரு பெயரைக் கொடுத்திருப்பது. படத்தில் வேறு யார் பெயரும் மனதில் நிற்கவில்லை. அது மட்டுமல்லாமல் இரண்டு இடங்களில் தனுஷை தமிழ் நண்பா என்று அவருடைய இன அடையாளத்தைச் சொல்லி அழைக்கிறார் வில்லன். இது ஹாலிவுட் படத்தில் நான் பார்த்திராத அதிசயம். ஹிந்திப் பட்த்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கே தமிழ் அடையாளம் ஒரு கேலிப் பொருள். காமெடிக் காட்சி. மட்டுமல்லாமல் வட இந்தியாவில் தமிழ் என்ற பிரயோகமே இல்லை. நாலு மாநிலத்தையும் சேர்த்து மதறாஸி என்று விளிப்பார்கள். கேரள், கன்னட், தெலுகு, மதறாஸி. எல்லாம் சேர்த்து மதறாஸி. ஆனால் க்ரே மேனில் லோன் வுல்ஃப் ஒரு தமிழன் என்ற அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்படுகிறான். இரண்டாவது காட்சியில், வில்லன் தன் தோழியிடம், உன் தமிழ் நண்பனிடம் சொல் என்கிறான்.
இது எல்லாமே எனக்குப் பெரிய ஆச்சரியம். அமெரிக்கா என்ற பெரிய தேசத்தில், அதிலும் ஹாலிவுட் படத்தில் தமிழ் அடையாளம் என்பது மிகப் பெரிய விஷயம். இதை தனுஷ் தான் வலியுறுத்தியிருக்க வேண்டும். அதற்காக அவருக்கு என் பாராட்டு.
இந்த ஒரு விஷயத்துக்காகவே தமிழ் சினிமாவின் ஒரு மிக முக்கியமான நடிகர் ஹாலிவுட்டில் வெறும் அடிதடி நடிகராகக் காண்பிக்கப்பட்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம்.
தனுஷைப் பொருத்த வரை ஒரு ஹாலிவுட் படத்தின் முழுநேர ஹீரோவாகவே வரக் கூடிய அளவுக்குத் திறமைசாலிதான். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் ஒரு அல் பச்சீனோ அல்லது ஆண்டனி ஹாப்கின்ஸ் அளவுக்குத் தனித்துவம் மிக்க நடிகராக உலகமெங்கும் அறியப்படுவதற்கு உரிய உடல் மொழியும் நடிப்புத் திறமையும் கொண்டவர்தான். சந்தேகம் இல்லை.