வளன் அரசுவின் யூதாஸ் – சில அனுபவங்கள் (1)

பத்து மாதங்களுக்கு முன்பு வளன் எனக்கு அனுப்பியிருந்தான் – நீங்கள் இல்லாமல் இந்த நாவல் சாத்தியம் இல்லை என்ற குறிப்புடன்.   பிறகு நேரில் பார்க்கும் போது “இந்த நாவலை நான் உங்களுக்காகவே எழுதினேன்” என்றான். 

ஆனாலும் நான் ஔரங்ஸேபில் மூழ்கியிருந்த்தால் இப்போதுதான் படிக்க நேர்ந்த்து.  170 பக்கம் உள்ள இந்த நாவலைப் படிக்க இரண்டு மணி நேரம் ஆகியிருக்கலாம்.  ஆனால் நான் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அதே அளவுக்குத் தீவிரத்தன்மை கொண்ட இன்னொரு வேலையில் ஈடுபட மாட்டேன்.   

படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட மனப்பதிவு, தமிழ் இலக்கியச் சூழல் மீதான சோகமும், கைப்பு உணர்வும், கசப்பும்தான். இப்படி ஒரு உலகத் தரமான நாவல் வெளிவந்திருக்கிறது, இது பற்றிய ஒரு முணுமுணுப்பு கூட இங்கே இல்லையே என்ற ஆற்றாமையால் எழுந்த கசப்பு அது. 

எஸ். சம்பத்தின் இடைவெளி, தஞ்சை ப்ரகாஷின் கரமுண்டார் வூடு, ஆ. மாதவனின் எட்டாவது நாள், எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், தி. ஜானகிராமனின் மரப்பசு போன்ற நாவல்களைப் படித்தபோது எனக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்பட்டனவோ அதே உணர்வுகள் யூதாஸைப் படிக்கும்போதும் ஏற்பட்டன.  ஆக, வளனின் யூதாஸ் ஒரு உலகத் தரமான படைப்பு.  இதைத் தமிழ் இலக்கிய உலகம் காலால் எட்டி உதைத்துத் தள்ளியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன்.  என்னுடைய பள்ளியிலிருந்து வந்தால் இப்படித்தான் நடக்கும்.  நடக்க வேண்டும்.  அது சரியாகவே நடந்திருக்கிறது.  இந்த நாவலுக்கு இதுவரை ஒரு மதிப்புரை இல்லை.   நாவல் கலந்து கொண்ட போட்டியிலும் இது ஒரு குப்பையாக வெளியே வீசப்பட்டது.  

ஆனால் ஒன்று நிச்சயம்.  இதில் நான் கோபப்படுவதற்கு ஒன்றுமில்லை.  இது போன்ற நாவல்கள் தமிழின் கட்டுப்பெட்டி சூழலில் இவ்வாறாகத்தான் எதிர்கொள்ளப்படும்.  அந்த வகையில் இதுவரை நடந்தது சரியாகவே நடந்திருக்கிறது.

நான் அடிக்கடி Reinhard Hauff என்ற ஜெர்மன் திரைப்பட இயக்குனர் பற்றிக் குறிப்பிடுவது வழக்கம். அவர் படங்கள் இந்தியாவில் அத்தனை பிரபலம் இல்லை.  நானே கூட அவர் படங்களைத் திரும்பப் பார்க்க முயற்சி செய்தாலும் கிடைப்பதில்லை.  குறிப்பாக 1980இல் வெளிவந்த அவருடைய Slow Attack என்ற படம்.

வளனின் யூதாஸில் வரும் ஒரு காட்சி எனக்கு ரெய்னார்ட் ஹாஃப்-இன் படங்களை ஞாபகப்படுத்துகிறது.

கியாரா பாஸ்டன் நகரில் பெற்றோரைப் பிரிந்து, வேலை இல்லாமல், வீடு இல்லாமல் தெருவோரங்களில் வாழும் ஒரு இளம் பெண்.  பாஸ்டன் நகரின் குளிர் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும்.  அதோடு அன்றைய தினம் மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. கியாராவுக்கு மிக அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும்.  கென்மோரின் காமன்வெல்த் அவென்யூ வழியாக வந்து கொண்டிருந்தாள். 

இனிமேல் நாவலிலிருந்தே தருகிறேன்:

மக்கள் காமன்வெல்த் அவின்யூவின் மையத்திலிருந்த நெடிய பூங்காவில் நாய்களுடன் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கு எந்தப் புதரும் இல்லை. பூங்காவின் இரு மருங்கிலும் நெடிய ஓக் மரங்கள் மட்டும் இருந்தது. உணவகமோ காஃபி கடைக்கோ போக வேண்டுமென்றால் அருகிலிருக்கும் கென்மோருக்குத் தான் வர வேண்டும். உணவகங்களிலும் முன்பு போலக் கழிப்பறையை வீடற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வாடிக்கையாளர்களுக்கு மட்டும், அதுவும் அவர்கள் கேட்டால் ஒருவர் வந்து கழிப்பறையைத் திறந்துவிடுவார். பயன்படுத்திய பின் உடனே பூட்டிவிடுவார்கள். கியாராவுக்கு சிறுநீர் பெருக்கெடுத்து கண்களின் வழியே கசிவது போல இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று ஏதோ சொல்லிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். குளிர்ந்த காற்று அவளை இன்னும் அவதியுறச் செய்தது. இப்போது அவள் தனக்குள் பாரமாக உணர்ந்தாள். அவள் நடையும் மாறியிருந்தது.

கென்மோருக்கு முன்பாக ஒரு சிறிய ஓடை அமைதியாக சாலையைக் கடந்து பாய்ந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் யாரும் அதைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. காரணம், பைத்தியக்காரத்தனமாக சாலையில் செல்லும் வாகனங்கள் அவ்வோடையைக் கவனிக்கவிடாது. கியாராவுக்கு அதன் ஓரத்தில் சென்று சிறுநீர் கழித்து விடத் தோன்றியது. உடனே பாலத்தின் அருகிலிருந்த சிறிய கான்க்ரீட் கட்டையில் உடைமைகளை வைத்துவிட்டு ஓடையின் கரைக்கு ஓடினாள். அங்கே எந்த மறைப்பும் இல்லை. காவலாளிகள் பார்த்தால் சிறை, அல்லது பணம் கட்ட வேண்டும். அப்போதுதான் கியாரா அந்தப் பாலம் தாழ்ந்து செல்வதால் அடியில் ஒரு மறைவிடம் வருவதை கவனித்தாள். ஒரு வாத்தைப் போல் காலைக் கொஞ்சம் அகட்டி அந்த மறைவுக்குள் சென்று நிதானமாக ஜீன்ஸை அவிழ்த்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் வலித்தது. இருந்தாலும் அதன் இதத்தில் கண்கள் சொருகி லயித்திருந்தாள். இன்னும் முடியவில்லை. கொஞ்சம் சிந்தை தெளிந்து அருகில் பார்த்த போது சில மீட்டர் தூரத்தில் அந்த குகை போன்ற அமைப்பில் ஒருவன் வாசனை மெழுகுத் திரியுடன் கியாராவை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பகீரென்றிருந்தது அவளுக்கு‌. ஆனால் இனி எதையும் நிறுத்த முடியாது. தலை குனிந்து கடைசி சொட்டு வரை கழித்த திருப்தியில் எழுந்து ஜீன்ஸை அணிந்து கொண்டு மீண்டும் அவனைப் பார்த்தாள். பெரிய மருண்ட விழிகளுடன் ஒடுங்கிய இளைஞன் இன்னும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு யுவதி சிறுநீர் கழிப்பதைப் பார்க்கும் எந்தக் கூச்சமும் அவன் கண்களில் தெரியவில்லை. அவன் பயந்து தன்னை நோக்குகிறான் என்று கியாரா நினைத்து மெதுவாகப் பின் நகர்ந்தாள்.

அந்தப் பாலத்தின் கீழ்ப் பகுதிக்குள் நுழைவதற்கு சராசரி உயரம் கொண்டவர்கள் நன்றாக இடுப்பை வளைத்துத்தான் நுழைய வேண்டும். கியாராவும் அப்படித்தான் உள்ளே வந்தாள். இப்போது இவனைப் பார்த்த பதற்றத்தில் சற்று நிமிர்ந்து பின் நகர்கையில் ‘டங்கென’ மேற்கூரையில் இடித்துக்கொண்டாள். இப்போது உள்ளேயிருந்தவன் பதறி கியாராவிடம் பேச ஆரம்பித்தான்.

“பார்த்து மெதுவாக…” கியாராவுக்கு ஆச்சரியம். இவ்வளவு அந்நியமாகப் பார்த்தவன் இப்படிச் சொன்னதில் அவளுக்கு இவன் மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“மன்னிக்கவும். இங்குதான் நீங்கள் தங்கியிருக்கிறீர்களா? உங்களைப் பார்க்காமல் உங்கள் இடத்தை பயன்படுத்தியதற்காக மன்னிக்கவும்.”

“கவலை வேண்டாம் மேம். நான் இங்குதான் சில ஆண்டுகளாகத் தங்கியுள்ளேன். வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இடித்துக்கொள்ளாமல் பத்திரமாகச் செல்லுங்கள்.”

கியாராவுக்கு அவன் பயந்ததன் காரணம் புரிந்தது. மெதுவாகக் குனிந்து பின் நகர்ந்து தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கென்மோர் நோக்கி நடக்கத் துவங்கினாள். பெரும் பாரத்தை இறக்கிய களிப்புடன் கொஞ்சம் வேகமாக நடக்கத் துவங்கினாள். ஓடையின் மறுகரைக்கு அருகில் இன்னொரு பெரிய பாலம் பாஸ்டன் நகரத்தின் பிற முக்கியமான சாலைகளை இணைக்கும் இடம் என்பதால் கார்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. இருள் மெதுவாகப் படரத் தொடங்கியது. மறுகரைக்கு வந்ததும் அந்த இளைஞனின் மறைவிடத்தைக் குனிந்து பார்த்தாள். மங்கலான மெழுகுத் திரியின் வெளிச்சம் மட்டும் சற்றுத் தடுமாறிக் கொண்டிருந்தது. அவனை மறுகரையிலிருந்து பார்க்க முடியவில்லை. பின்னர் கியாரா தன் உடைமைகளை கென்மோர் ஸ்டேஷனின் ஓரத்தில் சாற்றிவிட்டு சாவகாசமாகச் சாய்ந்து உறங்கத் தொடங்கினாள். கனவில் மெழுகுத்திரியுடன் நின்ற இளைஞனின் மருண்ட பார்வை கியாராவை மிரட்டியவாறு இருந்தது.

இப்படி ஒரு நாவலை சமீப காலத்தில் நான் வாசித்ததில்லை.

யூதாஸ் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.   
என் வாசகர்கள் அனைவரையும் இந்த நாவலைக் கட்டாயம் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.