150 சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்த பாஸ்டன் பாதிரியின் முழுப் பெயர் ஜான் கேகன். அவர் சிறையில் சக கைதியால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்டார். இது பற்றி டாக் பேசுகிறார்.
”(எனக்கு) மாசிமோ ஸ்டான்ஸியோனேவின் குழந்தைகள் படுகொலை ஓவியம்தான் நினைவுக்கு வருகிறது. அவ்வோவியத்தில் ஒருவன் இரக்கமற்று குழந்தையின் மீது வாளைச் சொருக கை உயர்த்தி இருப்பான். குழந்தையின் தாய் போராடிக் கொண்டிருப்பாள். தரையில் ஏற்கனவே வெட்டப்பட்ட குழந்தைகளின் பிஞ்சு மணிக்கட்டுகள் கிடக்கும். வேதனையில் கதறிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் பாஸ்டனும் இருந்தது. சிறுவர்களைத் தவறாக நடத்தினால் கேஹேனாவில் எறியப்படுவார்கள் என்று இயேசுவும் சொல்லியிருக்கிறார். கியாரா, இவ்வளவு நேரம் நீ என்னைக் கேள்வி கேட்டாயல்லவா? உன்னிடம் ஒரு கேள்வி: எது இவர்களை இப்படி அத்துமீற வைத்ததென்று நினைக்கிறாய்?
உதட்டைப் பிதுக்கித் தனக்குத் தெரியாது என்று தலையாட்டினாள்.
“எளிமையாகச் சொல்வதென்றால் அவர்களால் செய்ய முடியும். அதனால் செய்தார்கள்.” சொல்லிக்கொண்டே தன் கறுப்புச் சட்டையில் பொருத்தியிருந்த வெள்ளைக் காலரை கையில் எடுத்து, “இது குருக்களின் அடையாளம் மட்டுமல்ல, அதிகாரம். கடவுளின் பணியை உலகில் செய்வதற்கு எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம். இதைத் துறக்காதவரை நாங்கள் துறவிகள் அல்ல. மற்ற போதைகளை விட அதிகாரம் தரும் போதை அலாதியானது. எங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள் அல்லவா? அது தரும் இன்பம் சொல்லில் அடங்காதது. நான்காம் ஹென்றியை போப் ஏழாம் கிரகோரி கிறிஸ்துவ மதத்திலிருந்து விலக்கி வைத்தார். அதனால் மனமுடைந்த மன்னன் போப் ஏழாம் கிரகோரியின் அரண்மனை வாசலில் அரச மரியாதைகளைத் துறந்து காத்துக் கொண்டு நின்றிருந்தார். இந்நிகழ்ச்சி Road to Canossa என்ற பெயரில் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது. நம்ப முடிகிறதா? அரசன் வாசலில் காத்திருந்தான். அதிகாரம். அதிகாரம் என்ன வேண்டுமானாலும் செய்யும்.”
“கூர்மையான கத்தியைவிட ஆபத்தனாது அதிகாரம். இவ்வுலகில் நான் ஜாக்கிரதையாக இருக்க நினைப்பது இந்த அதிகாரத்திடமிருந்துதான். அதனால்தான் என்னை நான் ஃபாதர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. என்னுடைய திருநிலைப்பாட்டை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இருக்கும் வரை யாருடைய சுதந்திரத்துக்கும் தடையாய் இல்லாமல் எல்லாரையும் மதித்து அன்பு செய்து வாழ்ந்து முடிக்கவே விரும்புகிறேன்.”
ஒரு இளம் படைப்பாளி என்னையோ மிஷல் ஃபூக்கோவையோ படிக்காமல் ஒரு இளம் படைப்பாளி அதிகாரம் குறித்து மேற்கண்ட தெளிவைப் பெறுவது கடினம்.
எந்தப் படைப்பு தன்னுள்ளே பலவிதமான உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிறதோ அதையே உலகத் தரமான படைப்பு என்று நான் புரிந்து கொள்கிறேன். இந்த உரையாடலில் இடம் பெறும் ஓவியம்: