நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம்

நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வர முடியவில்லை.  இரண்டு காரணங்கள்.  ஒன்று, ஆவணப் படப்பிடிப்பு.  இரண்டு, நான் தான் ஔரங்ஸேப்… நாவலின் இறுதிக் கட்ட பிழை திருத்த வேலை.  ஒரு பிழை கூட இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நிறுத்தற் குறிகளில் கூட பிழைகள் இருக்கலாகாது.  பிழை திருத்தம் முடித்து நாவலை பதிப்பகத்தில் கொடுத்து விட்டேன்.  இந்த ஆகஸ்ட் இறுதிக்குள் நாவல் வந்து விடும்.  ராம்ஜி முன் வெளியீட்டுத் திட்டம் அறிவித்திருக்கிறார்.  நாவல் 916 பக்கங்கள்.  விலை 1145.  முன்வெளியீட்டுத் திட்டத்தில் 999 ரூபாய்க்குக் கிடைக்கும்.  இது குறித்த அறிவிப்பு கீழே:

நேற்று மாலை இது குறித்த அறிவிப்பு வந்தது.  இந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்று ராம்ஜிக்கு ஃபோன் செய்து கேட்கலாமா என நினைத்தேன்.  அப்புறம் அவர் சொல்லப் போகும் பதிலால் எனக்கு மன உளைச்சல்தான் மிகும்.  இன்னும் யாரும் அனுப்பவில்லை சார் என்றோ, மூணு பேர் பணம் அனுப்பியிருக்காங்க சார் என்றோதான் சொல்வார்.  அந்த பதிலைக் கேட்கத்தான் திராணி இல்லை. 

பணம் செலுத்தி முன்பதிவு செய்து விடுங்கள்.  இதன் காரணம் என்னவென்றால், முன் பதிவை வைத்துத்தான் எத்தனை பிரதிகள் என்று பதிப்பகத்தில் முடிவு செய்வார்கள்.  முன்பதிவு செய்தோர் பத்து பேர் என்றால், ஐம்பது பிரதி வெளிவரும்.  ஐம்பது பிரதி வெளிவந்தால் நூலின் தரம் சரியாக இருக்காது.  முன்பதிவே ஒரு ஐநூறு என்றால், தைரியமாக இரண்டாயிரம் பிரதிகளுக்கு ஆர்டர் போடலாம்.   அப்படிப் போட்டால், புத்தகம் மிகவும் தரமாக வரும்.  அதனால்தான் இந்த விஷயத்தை வலியுறுத்திச் சொல்கிறேன். 

செக்ஸ் இல்லாமல் உங்களால் கதை எழுத முடியுமா என்று இந்திரா பார்த்தசாரதி ஒருமுறை கேட்டார்.  இன்னும் சில நண்பர்களும் கேட்டிருக்கிறார்கள்.  இப்போது முதல் முதலாக நான்தான் ஔரங்ஸேப்… நாவலில் செக்ஸ் இல்லை.  அறவே இல்லை.  மாணவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் எல்லோரும் இந்த நாவலை சிபாரிசு செய்யலாம். 

இந்த நாவலை நான் எல்லோருக்குமாக எழுதியிருக்கிறேன்.  ஐஐடி பேராசிரியரும் படிக்கலாம், ஒரு ஆட்டோக்காரரும் படிக்கலாம். 

https://tinyurl.com/naanthaanaurangazeb