சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா?

செக்ஸ் இல்லாமல் ஒரு ஆயிரம் பக்க நாவலை எழுதியிருக்கிறேன் என்று நேற்று எழுதியதும் சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா என்று கேட்டிருக்கிறார் நண்பர் சமஸ். 

விவாதங்கள் என்றால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்.  பொதுவாக இலக்கிய சமாச்சாரங்கள் எதுவுமே பொதுவெளியில் கவனம் பெறுவதில்லை.  அதை முதல் முதலில் உடைத்தவர் சமஸ்தான்.  அவர்தான் தமிழ் இந்துவில் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார்.  அதுவரை அந்த மரியாதை எல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.  ஒரு எழுத்தாளர் இன்னமும் காகிதத்தில்தான் எழுதுகிறார் என்றால் அது செய்தி.  ஒரு எழுத்தாளர் நடைபாதைகளில் படுத்து உறங்கியபடியே இந்தியா முழுவதையும் சுற்றுகிறார் என்றால் அது செய்தி.  ஒரு எழுத்தாளர் சினிமா நடிகர்களைப் போல் ரெமி மார்ட்டின் மட்டுமே குடிக்கிறார் என்றால் அது செய்தி.  எழுத்தாளன் என்று ஒரு ஜீவி இந்த சமூகத்தில் உங்கள் கண்ணெதிரே உலவிக் கொண்டிருக்கிறான், கவனியுங்கள் மக்களே என்று பொதுஜனத்துக்குச் சொன்ன முதல் ஆள் சமஸ்தான்.

இப்போது பாருங்கள், பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் வெளிவந்துள்ளது.  அது பற்றிப் பாராட்டியும், எதிர்த்தும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கருத்துக்கள், அபிப்பிராயங்கள் வெளிவந்து ஒரு சமூகப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது.  அந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கு எத்தனை குழந்தைகள் என்ற அளவுக்கு விவரங்கள் அலசப்படுகின்றன.  அப்பாடல் பற்றிக் கருத்து சொல்லாத ஒரே ஆள் தமிழ்நாட்டிலேயே நான்தான். ஆனால் ஒரு நாவல் – அதிலும் இதுவரை அதிகம் பேசப்படாத ஔரங்ஸேப் பற்றியது – வெளிவர இருக்கிறது.  ஒருத்தர் கூடப் பேசவில்லை என்பது மட்டும் அல்ல; ஒரு எழுத்தாளர் கூட வாய் திறக்கவில்லை.  ஆனால் சினிமாப் பாட்டு என்றால் வரிந்து கட்டிக் கொண்டு திட்டுகிறார்கள், பாராட்டுகிறார்கள்.   அந்தப் பாடல் பற்றி எழுதாத எழுத்தாளரே இல்லை என்று சொல்லலாம்.  ஆக, தமிழ்ச் சமூகத்தில் – அது இலக்கிய உலகமாக இருந்தாலுமே –  சினிமாவுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

ஔரங்ஸேப்… மது, மாது இரண்டையும் விலக்கி விட்டு தான் நம்பிய, தான் புரிந்து கொண்ட இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்.  அவர் வாழ்வில் பாலியல் தேவைக்காக குடும்பத்தை விட்டு வெளியே சென்றதில்லை. அவருடைய காலகட்டத்தில் அப்படி ஒருவர் வாழ்ந்தது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விஷயம்.  அதிலும் ஒரு பேரரசர் அப்படி வாழ்ந்தார். எனவே, ஔரங்ஸேப் சொல்லும் சுய சரித்திரத்தில் பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு இடமே இல்லை.  அதனால்தான் நான்தான் ஔரங்ஸேப்… சண்டை இல்லாத ஜாக்கி சான் படமாக வந்திருக்கிறது.  ஆனாலும் அத்தியாயம் எண்பதிலிருந்து எண்பத்தைந்து வரை பகடியான சில கதைகள் உண்டு.  ஜாக்கி சான் படத்தில் மேக்கிங் ஆஃப் தெ ஃபில்ம் என்று படம் முடிந்த பிறகு காண்பிப்பார்கள் அல்லவா?  அதில் ஜாக்கி சான் ஸ்டண்ட் பண்ணும்போது தவறி விழும் காட்சிகள் இடம் பெறும்.  அந்த மாதிரிதான் அந்த ஆறு (80- 85) அத்தியாயங்களும் இருக்கும். 

நாவலைப் படித்த டார்ச்சர் கோவிந்தன் அந்த ஆறு அத்தியாயங்களையும் நீக்கச் சொன்னார்.  நம்முடைய ஜாதகத்தில் அப்படிப்பட்ட ராசி கிடையாது.  நல்ல வார்த்தை சொன்னால் கேட்க மாட்டேன்.  நாவலை ஒரு பத்து நண்பர்களிடம் கொடுத்தேன்.  முன்கூட்டி எதுவுமே சொல்லவில்லை.  அவர்கள் படித்து முடித்த பிறகு, ”எண்பதிலிருந்து எண்பத்தைந்தை எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்,  அந்த ஆறு அத்தியாயங்களும் நாவலின் போக்குக்கு முரணாக இருக்கின்றன” என்றேன். 

அப்படி நீங்கள் எடுத்தால் நாங்கள் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவோம் என்று மிரட்டினார்கள் பத்து பேரும்.

என்னய்யா இது அநியாயம்?

ஏற்கனவே இது ஒரு சைவ நாவல், இதிலிருந்து அந்த ஆறு அதகள அத்தியாயங்களையும் நீக்கினால் இது ஒரு நோ ஆனியன், நோ கார்லிக் உணவாக அல்லவா மாறி விடும்?  அதனால்தான் சொன்னோம், நேரடியாகவே போய் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்ந்து விடுகிறோம் என்று. அங்கே போனால் அட்லீஸ்ட் அவ்வப்போது மழைப் பயணமாவது செல்லலாம்.

அது என்ன மழைப் பயணம்?

ஆமாம், மழைக் காலத்தில் ஜெயமோகன் தன் வாசகர்களோடு நர்மதா நதி ஓரமாக மழையில் நனைந்தபடியே பயணம் செய்வார்.  அதுதான் மழைப் பயணம்.  கேட்கவே ரம்மியமாக இருக்கிறது. எப்படி அதில் கலந்து கொள்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தோம்.  இப்போது நீங்களே அதற்கு ஒரு இனிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டீர்கள்.

நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கே ஆசையாகத்தான் இருக்கிறது.  ஆனால் எனக்கு மழையில் நனைவது பிடிக்காதே?  அப்படியே நனைந்தாலும் ஜலதோஷம் வந்து விடாதா?  அந்த வட்டத்தில் உள்ளவர்களுமே ஜெயமோகன் மாதிரி சூப்பர் மேன்களா?

அதெல்லாம் இல்லை. அங்கே ஒரே ஒருத்தர்தான் சூப்பர் மேன்.  அதனால் ஜலதோஷம் வந்தால் மருத்துவம் பார்க்க அவர்கள் கூடவே ஒரு மருத்துவக் குழுவும் செல்கிறது. 

கடைசியாக, கட்சி மாற இருந்த தோழர்களை பெரு முயற்சி செய்து என்னிடமே தக்க வைத்துக் கொண்டேன்.  பிரச்சினை  முடிந்த பிறகும் ஒருத்தர் சொன்னார், அங்கேயாவது மழைப் பயணம், பனிப் பயணம் என்றெல்லாம் போகிறார்கள்.  நீங்களோ சீலே பீலே என்று பயமுறுத்துகிறீர்கள்.

’சரி, அதை விடுங்கள்’ என்று பேச்சை மாற்றி ஔரங்ஸேப் பக்கம் கொண்டு வந்தேன்.

நாவலில் மேற்படி ஆறு அத்தியாயங்களையும் நீக்க வேண்டும் என்பது டார்ச்சர் கோவிந்தனின் ஐடியாதான் என்று யாரிடமும் நான் கடைசி வரை சொல்லவில்லை. 

ஆக, வெளிவரப் போகும் நாவலில் அந்த அத்தியாயங்களும் அப்படியேதான் இருக்கும்.  பிராமணர்கள் ஸோயா ச்சங்க் என்ற ஒன்றை சமையலில் சேர்ப்பார்கள்.  அசல் மட்டன் பீஸ் மாதிரியே இருக்கும்.  ஆனால் மட்டன் இல்லை.  அந்த மாதிரிதான் அந்த ஆறு அத்தியாயங்களும். 

ஆனால் மக்களே, நோ ஆனியன் நோ கார்லிக் கூட இல்லை, சுத்த வீகனாக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன், தியாகராஜா.  அதுவும் சில மாதங்களில் வந்து விடும். 

மற்றபடி விக்ரம் படம் மாதிரி முழுக்கவே ’சண்டைக்’ காட்சிகளாக ஒரு நாவல் தயாராகிக் கொண்டிருக்கிறது.  அன்னையே தன் மூத்தாள் மகன் மீது காமுறுகிறாள்.  அசோகா.

இன்று பதிப்பகத்திடம் பேசினேன்.  நேற்று காலை வரை ஒருத்தர் கூட நான்தான் ஔரங்ஸேப்… நாவலுக்கு முன்பதிவு செய்யவில்லை என்றார்கள். நேற்று மாலை என் நண்பர் வெங்கட் முன்பதிவு செய்திருக்கிறார்.  ஐந்து பேராவது முன்பதிவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ் மாதிரி ஒரு மொழியில் எழுத வேண்டிய சாபம் பெற்றிருக்கும் நான் – ஆயிரம் பக்க நாவலை எழுதி முடித்து விட்டு – உங்களிடம் வேறு என்ன வேண்டிக் கொள்ள முடியும்?

முன்பதிவுக்கான விவரங்களை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.  நாவல் விலை 1145 ரூ.  முன்பதிவுத் திட்டத்தில் 999 ரூ.

https://tinyurl.com/naanthaanaurangazeb