தெ அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தில்லியும் கோவாவும் சீலேயும்தான் பாக்கி. போயும் போயும் ஒரு ஆவணப் படத்துக்கா அம்பது லட்சம் ஆகும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கேமரா தளவாடங்கள் வாங்குவதற்கே பத்து லட்சம் ஆகி விட்டது. கேமராமேன் சம்பளம், தங்கும் செலவு, பயணம், உணவு என்று செலவு அடித்துக் கொண்டு போகிறது. எல்லா செலவையும் பிச்சை எடுத்துத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பெரிய செலவுக்கு மட்டும் கையேந்தினாலும் கிடைப்பதில்லை. ஒரு நண்பர் சீலே செல்வதற்கு எனக்கு டிக்கட் போடுகிறேன் என்றார். ஆனால் இயக்குனருக்கு நான்தான் டிக்கட் எடுக்க வேண்டும். மூணு லட்சம். தங்கும் செலவு மூணு லட்சம். மொத்தம் ஆறு லகரம் ஆகி விடும். தங்கும் செலவு என்பது சீலே சென்று படத்தை எடுப்பதற்கான செலவு. இதெல்லாம் மிகக் குறைந்த பட்ச செலவுக் கணக்கு.
சாந்த்தியாகோவிலிருந்து வடக்கே அத்தகாமா பாலைவனம் போய் வர வேண்டும். பிறகு, சாந்த்தியாகோவிலிருந்து தெற்கே பத்தகோனியா பீடபூமியில் உள்ள தோரஸ் தெல் பாய்னே என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். உலகப் பந்தின் தென் எல்லை பத்தகோனியாவுடன் முடிவடைகிறது. அங்கிருந்து பனிக்காட்டிலேயே 1600 கி.மீ. சென்றால் தென் துருவமான அண்டார்க்டிகா வந்து விடும். தோரஸ் தெல் பாய்னேவின் உயரம் 9000 அடி. அங்கே என்னால் தங்க முடியும். பத்தாயிரத்தைத் தாண்டினால்தான் சுவாசப் பிரச்சினை. அப்படி 9000 அடியையும் தாங்க முடியாவிட்டால் அங்கிருந்து 75 கி.மீ. தூரத்திலேயே இருக்கும் புவெர்த்தோ நத்தாலெஸ் என்ற ஊருக்குப் போய்த் தங்கிக் கொள்ளலாம். பொலிவியாவில் நடந்தது போல் அடித்துப் பிடித்து விமானத்தில் ஏறி சீலே ஓட வேண்டியதில்லை.
நீங்கள் ஏன் ஒரு ஆவணப்படத்துக்காக சீலே எல்லாம் போகிறீர்கள் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. அதற்கான பதிலை தெ அவ்ட்ஸைடர் என்ற இந்த ஆவணப்படமே சொல்லும்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தமிழில் எழுத்தாளனின் இடத்தை சினிமா நடிகர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மற்ற நடிகர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்றால், கமல் அறிந்தே செய்கிறார். ஏனென்றால், அந்தக் கூட்டத்திலேயே கமல் மட்டுமே இலக்கியம் வாசிப்பவர். மற்ற சிலரும் படிக்கிறார்கள் என்றாலும் கமல்தான் தீவிர வாசகர். 45 ஆண்டுகளுக்கு முன்பே பிரக்ஞை என்ற சிறு பத்திரிகை பற்றிப் பேசியவர் கமல். எனவேதான் அவரை மட்டுமே சுட்ட வேண்டியிருக்கிறது. ஜெயமோகனும் அவரும் உரையாடிய காணொலியை என்னால் சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. அந்தக் காணொலியைப் பார்த்தால் அறம் தொகுதியை எழுதியவர் கமல் என்ற சித்திரமே யாருக்கும் கிடைக்கிறது. இதற்குக் காரணம் ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனுக்கான இடத்தை கமல் கொடுத்திருக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் பேசுவதை நடிகன் கேட்கும் காலம் வர வேண்டும் என்றுதான் முப்பது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து இங்கே நடிகர்கள் பேசுவதைத்தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
எழுத்தாளன் எழுத்தாளனாக வாழும் ஒன்றிரண்டு தேசங்களில் சீலே முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் சீலே இல்லாமல் என் இலக்கிய வாழ்க்கை இல்லை என்கிறேன்.
ஏன் இந்த ஆவணப் படத்துக்கு அம்பது லட்சம் செலவு? வெறும் பத்தாயிரம் ரூபாயில் ஆவணப் படத்தை முடித்து விடலாம். நாகூரில் புளியமரம் அதிகம். அறுபது நிமிடப் படத்துக்கு ஆறு புளியமரம் போதும். பத்து நிமிடத்துக்கு ஒரு புளிய மரம் என்று மாறி மாறி அமர்ந்து எடுத்து விடலாம். அதற்குப் பெயர் பேட்டி அல்லது நேர்காணல் ஐயா, ஆவணப்படம் அல்ல. தமிழில் எழுத்தாளர்கள் பற்றி எடுக்கப்படும் பெரும்பாலான ஆவணப்படங்கள் நேர்காணல்கள்தான்; ஆவணப்படங்கள் அல்ல. எடுப்பவர்கள் மீது தவறே இல்லை. அவர்கள் இந்த அளவு எடுப்பதே பெரிய விஷயம். நல்ல முறையில் எடுக்க யாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது?
க்ரௌட் ஃபண்டிங் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு எழுத்தாளனுக்கு இங்கே செல்வாக்கு இல்லை. என் வாசகர்களாகிய உங்களிடம்தான் என்னால் கேட்க முடியும். முடிந்தவர்கள் இந்த சிறப்புப் பதிப்பை வாங்கி உதவுங்கள். ராஸ லீலா சிறப்புப் பதிப்பு பத்தாயிரம் ரூபாய். சுமார் எழுபது பேர் வாங்கினார்கள். ஏழு லட்சம் கிடைத்தது. சீலே பயணம் சாத்தியமாயிற்று. இந்த ஔரங்ஸேப் சிறப்புப் பதிப்புக்கு வெறும் பத்து பேர்தான் பணம் அனுப்பிப் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
இனிமேல் சிறப்புப் பதிப்பு பற்றி எழுத அவகாசம் இல்லை. செய்வது என்றால் விரைந்து செயல்படுங்கள். நாவல் அச்சுக்குப் போக வேண்டும். நாங்களும் அக்டோபர் வாக்கில் சீலே செல்ல வேண்டும். எது எப்படிப் போனாலும் என் சேமிப்புப் பணம் அவ்வளவையும் செலவு செய்து ஆவணப் படத்தை முடித்து விடுவேன். அதன்பின் மீண்டும் பழையபடி – பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் – வங்கிக் கணக்கு பூஜ்யத்தில் வந்து நிற்பேன்.
நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி அராத்து எழுதியுள்ள சிறிய குறிப்பு இங்கே:
சாரு நான்தான் ஔரங்ஸேப்… எழுதும்போது அடிக்கடி உடனிருந்து (விர்ச்சுவலாக) பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். சாரு இதற்காகப் போட்ட உழைப்பு மிகப் பெரியது. கலையில் “உழைப்பை” எல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க காரணியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற கருத்துடையவன் நான். இருந்தாலும் இந்த நாவல் விஷயத்தில் இதை ஏன் குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால்… இது வரலாறு சம்பந்தப்பட்ட நாவல். அந்த வரலாற்றை அப்படியே புனைவாக்கிக் கொடுக்காமல் , கிடைக்கும் வரலாற்றுத் தரவுகளில் ஊருருவிப் பார்த்து , வெளிப்படையாக அணுகி , தனக்கென ஒரு புதுப்பார்வையை உருவாக்கிக்கொண்டு , அதில் வரும் வராலாற்று மாந்தர்களின் ஆன்மாவுக்குள் புகுந்து அவர்களாகவே மாறி சாரு நிவேதிதா எழுதிய ஒரு பின் நவீனத்துவ வரலாற்றுக் களியாட்டம் இந்த நாவல். இதை உழைப்பு என்று கூட சொல்ல வேண்டாம், முனைப்பு என சொல்வோமாக.
பலதரப்பட்ட வரலாற்றுப் புத்தகங்கள் , வரலாற்றுக் குறிப்புகள் என தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு புத்தகத்தையும் தலையணை என்று கூட சொல்ல முடியாது. நவீன இலக்கிய, கவிதைப் புத்தகங்களை விட பெரியதாக, படுத்திருக்கும் மெத்தையை சுருட்டி வைத்தது போல இருக்கும்.
அரபி அறிஞர்கள் , வரலாற்றுப் பேராசியர்கள் என பலரிடமும் தொடர்பில் இருந்தார். இவை எல்லாவற்றையும் விட இந்த நாவலுக்கென புது எழுத்துப் பாணியை உருவாக்கினார். கதை சொல்லல் முறையில் புது பாய்ச்சலைக் கண்டடைந்தார். இளைஞர்கள் எல்லாம் இலக்கிய உலகில் “எங்க ஆத்தா ” “என்ற அப்பன் ” “எங்க வயக்காடு” என மூக்கொழிக்கொண்டு, நகரத்தில் அமர்ந்துகொண்டு சீழைக் கீறி வெள்ளமாக விட்டுக்கொண்டு இருக்கையில், 70 வயதாகும் சாரு நிவேதிதா இன்னமும் புதுமையாக, உலகத்தரத்தில், நவீன இலக்கியத்தை முன்னெடுப்பது மிகவும் அரிதான விஷயம்.
இதற்காக அவருக்கு விழா எல்லாம் எடுக்க வேண்டாம். முன்னறிவிப்புத் திட்டத்தில், சிறப்புப் பிரதிகள் திட்டத்தில் சாருவின் “நான்தான் ஔரங்கசீப்…” புத்தகத்தை வாங்கி வாசிக்கலாம். யாருக்காவது வாங்கிப் பரிசளிக்கலாம். சிந்தனையின் போக்கில் நிச்சயம் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் புத்தகம் இது.
சிறப்புப் பிரதிகள் குறித்து முன்பு எழுதியதையே மீண்டும் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். சிறப்புப் பதிப்புக்கான விவரங்கள்:
நாவலின் முதல் சிறப்பு பிரதியின் நன்கொடை மதிப்பு மூன்று லட்சம் ரூபாய். நாவலிலேயே முதல் பிரதி என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். முன் அட்டையும் பின் அட்டையும் வெள்ளியில் இருக்கும். முன்னட்டையில் சாரு 70 என்று எழுதப்பட்ட தங்க நாணயம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதை நீங்கள் வெளியில் கொண்டு சென்று படிக்க முடியாது என்பதால் சாதா பிரதி ஒன்றும் தரப்படும்.
சிறப்பு அட்டையைக் கொண்ட நாவலின் மற்றொரு சிறப்புப் பதிப்பின் நன்கொடை மதிப்பு ஐந்து லட்சம். இதைத் தருபவரின் பெயர் நாவலின் எல்லா பிரதிகளிலும் பின்வருமாறு கொடுக்கப்படும். இந்தப் பிரதியை வாங்குபவர் பெயர் ராஜேஷ் என்று வைத்துக் கொண்டால்,
ராஜேஷ் வழங்கும்
நான்தான் ஔரங்ஸேப்…
என்று எல்லா பிரதிகளிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
அடுத்து ஐந்து சிறப்புப் பிரதிகள். ஒவ்வொன்றின் நன்கொடை மதிப்பு ஒரு லட்சம். ஐந்து பேர் வரை இந்த சிறப்புப் பிரதிகள் தரப்படும். சிறப்பு அட்டையில் சாரு 70 என்று பதிக்கப்பட்டிருக்கும் தங்க நாணயம் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த பத்து பேருக்கான சிறப்புப் பதிப்பின் நன்கொடை மதிப்பு ஐம்பதாயிரம். நூலின் சிறப்பு அட்டையில் சாரு 70 என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயம் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்து, நூறு சிறப்புப் பிரதிகள். நன்கொடை பத்தாயிரம் ரூபாய். சிறப்பு அட்டையில் சாரு 70 என்று பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் பொருத்தப்பட்டிருக்கும். இவர்கள் அனைவரின் பெயர்களும் நாவலின் ஆரம்பத்தில் குறிக்கப்படும்.
செப்டம்பர் வாக்கில் நடக்கும் நாவல் வெளியீட்டு விழாவில் இவர்கள் அனைவரும் மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விழாவில் நான் மட்டுமே பேச இருக்கிறேன். வேறு சிறப்புப் பேச்சாளர்கள் யாரும் இல்லை. உரை முடிந்ததும் வாசகர்களுடன் கலந்துரையாடல், கேள்வி பதில் நேரம் எல்லாம் உண்டு. ஒரு சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி ஏழரை மணிக்கு விழா முடியும்.
கை கொடுக்க அழைக்கிறேன்…
இன்னொரு குறிப்பு: ஐந்து லட்சம், மூன்று லட்சம், ஒரு லட்சம், மற்றும் ஐம்பதாயிரம் நன்கொடை வழங்கியவர்கள் ஒரு வார இறுதியை என்னோடு கொண்டாடலாம். அநேகமாக மகாபலிபுரத்தில். தேதி அவர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com