கல்கியும் புதுமைப்பித்தனும் தமிழ்ச் சமூகமும்…

சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்ட புதினங்களைத் தமிழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  சட்டென்று நினைவுக்கு வருவது சாண்டில்யன், வே. கபிலன், கோவி. மணிசேகரன், அகிலன், நா. பார்த்தசாரதி, கல்கி, ஒரே ஒரு சரித்திர நாவல் எழுதிய சுஜாதா.  இவர்களில் கல்கி மட்டுமே சூப்பர் ஸ்டார்.  அவருடைய பொன்னியின் செல்வன் அளவுக்கு வேறு யாரும் சுவாரசியமாக எழுதியதில்லை.  வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களில் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் சிலர் மட்டுமே.  பொதுவாக ஜனரஞ்சக எழுத்தைப் படிக்க விரும்பாத நானே அந்த நாவலை இரண்டு முறை படித்திருக்கிறேன்.  கல்கி அளவுக்கு சரித்திர நாவலை சுவாரசியமாக எழுதியவர் யாரும் இல்லை.  சுஜாதாவின் காந்தளூர் வசந்தகுமாரன் கதை பொன்னியின் செல்வன் அளவுக்கு சுவாரசியமாகத் தொடங்கியது.  ஆனால் அவர் அதை குறுநாவல் மாதிரி சுருக்கி விட்டார்.  பொன்னியின் செல்வன் ஐந்து பாகம்.  வீரபாண்டியன் மனைவி என்று மூன்று பாகங்களில் சுவாரசியமான சரித்திர நாவலை எழுதிய அரு. ராமநாதனை மேற்படி சரித்திர நாவலாசிரியர்களோடு சேர்க்க முடியாது.  இது பற்றி நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன்.

இப்போது தமிழ் பேச்சு மொழியாக மாறி விட்டதால் படிக்கும் பழக்கம் உள்ள தமிழ் இளைஞர்கள் பொன்னியின் செல்வனை ஆங்கிலத்தில் வாசிக்கிறார்கள். 

இப்போது மணி ரத்னம் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் கல்கி மீது திரும்பவும் கவனம் குவிந்திருக்கிறது. 

பொன்னியின் செல்வன் 25 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படமாக்கப்பட்டிருக்க வேண்டும்.  கமல் நடித்திருக்க வேண்டும்.  இப்போதாவது வருவதில் எனக்கு மகிழ்ச்சியே.  விக்ரமை விட வசூல் குவிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். 

மணி ரத்னம் தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கிக் கொண்டவர்.  அவருடைய திருடா திருடா, குரு, நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.  ஆனால் ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் மிகவும் அரை வேக்காட்டுத்தனமானது.  இது பற்றி வெங்கடேஷ் சக்ரவர்த்தி மிக விரிவாக எழுதியிருக்கிறார்.  அதையும் மீறி தமிழில் auteur என்ற பதத்துக்குத் தகுதியான ஒன்றிரண்டு பேரில் மணி ரத்னமும் ஒருவர்.  (இன்னொருவர் பாரதிராஜா)

எனவே இப்போது நான் எழுதப் போவது பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி அல்ல.  அந்த நாவலை எழுதிய கல்கி பற்றி.

கல்கி பற்றி க.நா.சு. மற்றும் புதுமைப்பித்தன் ஆகிய இருவரும் எழுதியவற்றைப் படிக்கும் முன்னரே நான் கல்கியை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதினேன்.  பிறகு க.நா.சு.வையும் புதுமைப்பித்தனையும் படித்த போது அவர்கள் எழுதியதையேதான் நானும் எழுதியிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். 

கல்கி பற்றி என்னுடைய விமர்சனம் என்ன?

தமிழ்ச் சமூகம் இன்று ஃபிலிஸ்டைன் சமூகமாக சீரழிந்து கிடப்பதற்குக் காரணம், கல்கிதான்.

சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.  நான் வெகுஜன எழுத்துக்கு, ஜனரஞ்சக எழுத்துக்கு எதிரி அல்ல.  ஆனால் ஜனரஞ்சக எழுத்துதான் இலக்கியம் என்ற மாயை தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் கல்கியும் அவரை ஆதரித்த ராஜாஜி போன்றவர்களுமே.  

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். என் நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் ஒரு தீவிரமான வாசகர்.  ஆங்கிலத்திலும் பழந்தமிழ் இலக்கியத்திலும் நிறையவே படிப்பவர்.  ஆனால் தமிழின் சமகாலத் தமிழ் எழுத்தில் ஐந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் அறிந்திருந்தது கல்கி, சுஜாதா இருவரை மட்டுமே.  ராகவனுக்கு மட்டும் சமகாலத் தமிழ் இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் ப. சிங்காரத்திலிருந்து ஷோபா சக்தி வரை படித்து முடித்திருப்பார். 

இது ராகவனோடு முடியவில்லை.  அவர் படித்திருந்தால் அவர் தன் வாரிசுகளுக்கும் சமகாலத் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தியிருக்க முடியும்.  அதுவும் நடக்கவில்லை.  ஒரு மாபெரும் சரித்திர ஓட்டம் ராகவனோடு நின்று போனது.  ஏதோ அவருக்குத் தெரிந்த அளவில் ஜெயகாந்தனைக் கொண்டு போய் மகளிடம் கொடுத்திருக்கிறார்.  மகளுக்கு அது பிடிக்கவில்லை.  இத்தனைக்கும் அவர் மகள் ஆங்கில இலக்கிய நூல்கள் படிப்பவர்.  ராகவன் தன் மகளிடம் செல்லப்பாவையும் க.நா.சு.வையும் தி.ஜானகிராமனையும் கொடுத்திருந்தால் அவர் படித்திருப்பார். 

இதே மாதிரிதான் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையும் கல்கியும் சுஜாதாவும் பாலகுமாரனும் காயடித்தார்கள்.  அதனால்தான் இன்று தமிழ்ச் சமூகம் இப்படி ஒரு இலக்கியச் சீரழிவை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

தமிழ்நாடு ஒரு சுரணையுள்ள சமூகமாக இருந்திருந்தால் கல்கி இருந்த இடத்தில் புதுமைப்பித்தனும், சுஜாதாவின் இடத்தில் அசோகமித்திரனும், பாலகுமாரனின் இடத்தில் தி. ஜானகிராமனும் இருந்திருக்க வேண்டும்.

நேற்று நான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முடிவெட்டிக் கொள்ளக் கிளம்பினேன்.  மூன்று ஆண்டுகளாக அவந்திகாதான் முடிவெட்டி விட்டாள்.  இப்போது படப்பிடிப்பின் காரணமாக ஏதாவது ஏடாகூடமாகி விடும், கடைக்கே போ என்று சொல்லி விட்டாள்.  எனக்கு முடிவெட்டி விட்டவர் “நீங்கள் இசைக் கலைஞரா?” என்று கேட்டார்.  எனக்கு ஒரே ஆச்சரியம்.  ஏன் கேட்கிறீர்கள் என்றேன்.  அவர்கள்தான் இப்படி நிறைய நகை அணிந்திருப்பார்கள் என்றார். 

நான் ரைட்டர் என்றேன். 

ரைட்டர் என்றோ எழுத்தாளர் என்றோ தமிழ்நாட்டில் சொல்லி விட்டால் நீங்கள் காட்டேரிப் பிசாசிடம் மாட்டிக் கொண்ட மாதிரிதான்.  யாருக்குமே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியாது.

பாட்டு எழுதுகிறீர்களா என்றார்.

இல்லைங்க, கதை.

என்ன படத்துக்கெல்லாம் எழுதியிருக்கீங்க சார்?

பொன்னியின் செல்வனுக்கு என்று தொண்டை வரை வந்து விட்டது. ஆனால் அத்தனை விபரீத விளையாட்டை விளையாட நேற்று தெம்பு இல்லை.  அதனால் “படத்துக்கு இல்லீங்க,  பத்திரிகைக்கு” என்றேன். 

பத்திரிகைக்கு என்பது தப்பான பதில்.  ஆனால் அப்படிச் சொல்லாவிட்டால் நீங்கள் அவருக்கு எழுத்தாளர் என்பதன் அர்த்த்த்தை விளக்கவே முடியாது. 

இந்த அவல நிலைக்குக் காரணம், கல்கி, சுஜாதா, பாலகுமாரன்.  இன்றைய காலகட்டத்தில் ஜனரஞ்சக எழுத்தின் இடத்தைப் பிடித்திருப்பது சினிமா. 

”மக்கள் படிப்பதுதான் இலக்கியம், மற்றதெல்லாம் சமூகத்துக்கு உதவாதவை.  மேட்டுக்குடி சமாச்சாரம்.”  இதைத்தான் கல்கி நிறுவினார்.  இதைத்தான் தன் ஆயுள் முழுவதும் எதிர்த்தார் புதுமைப்பித்தன்.

நேற்று நான் என்னுடைய பத்து இருபது நண்பர்களுக்கு புதுமைப்பித்தன் பற்றிய என்னுடைய பேருரையின் காணொலியை அனுப்பினேன்.  ஏன் திடீரென்று அதை அனுப்பியிருக்கிறேன் என்று அவர்களுக்குப் புரிந்திருக்காது.  கல்கி மீதான புதுமைப்பித்தனின் தாக்குதல்தான் காரணம்.  செல்லப்பா காலத்திலிருந்து இன்று வரை நடந்தது ஒரு போர்.  இலக்கியம் ஜீவித்திருப்பதற்காக இலக்கியவாதிகள் கல்கி போன்றவர்கள் மீது தொடுத்த போரின் ஒரு விளைவுதான் என்னுடைய இன்றைய எழுத்தும். 

பின்வரும் பக்கங்களில் கல்கி பற்றி புதுமைப்பித்தன் வைத்த விமர்சனங்களைத் தருகிறேன்.     

கல்கி பற்றி புதுமைப்பித்தன்…

……ஸ்ரீ டி.எஸ். சொக்கலிங்கம் (தினமணிஆசிரியர்) சென்ற வருஷத்து கல்கியில் வெளியான ’வீணை பவானி’ என்ற தங்கள் (கல்கி) கதையைப் பற்றி பாராட்டி எழுதியிருக்கிறார். மட்டமான மொழிபெயர்ப்புக் கதையைப் பற்றி தினமணி ஆசிரியர் அவ்விதம் எழுதியிருப்பாரா? என்று அர்ச்சனை மண்டபத்து பக்தர் ஒருவருக்கு சந்தேகம் தோன்றிவிட்ட்து. அதற்கு நேர்மையான முறையில் கல்கி பதில் எழுதவேண்டும் என்றால் பின்வருமாறு எழுதவேண்டும்:

ஹானர் டி பால்சாக் என்ற பிரெஞ்சு கதாசிரியன் ஆப்பரா ஸிங்கர் (பாடகி) என்ற கதையை எழுதியிருக்கிறார். அது இங்கிலீஷில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது பிரெஞ்சு ஆசார ஜோடனையோடு எழுதப்பட்டிருக்கிறது. அதைப் படித்ததும் நான் சொக்கிப் போனேன். தமிழிலும் அப்படி ஒரு கதை ஜோடனை செய்யவேண்டும் என்ற ஆசை தோன்றியது. நான் என்ன செய்வது? சொந்தமாக எனக்கு கற்பனை கொஞ்சம்கூட வராது. கொள்ளிடத்து முதலை என்று சொந்தமாக ஒரு கதை எழுதினேன். அப்பொழுதிலிருந்து சொந்தக் கிணறு மண்பாய்ந்து கிடக்கிறது என்று தெரிந்து கொண்டேன். ஆனால் தமிழ்ப் பணியில் எனக்கு அபார மோகம், அதனால் ஆபத்துக்கு பாபமில்லை என்று திருடினேன். அதுமுதல் அப்படியே செய்து வருகிறேன். வீணை பவானி கதையும் அதிலும் ஒன்று. பாரதியார்தான் ‘ எட்டுத் திசையிலும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று சொல்லி இருக்கிறாரே?

நிற்க. கல்கியின் கதைகளை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு என்று பக்த திருக்கூட்டம் உச்சரிக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது பிறநாட்டு இலக்கியத்தின் ரசனையும் அது கற்பனை செய்துள்ள சூழ்நிலையையும் நம் நாட்டு பாஷையில் எடுத்துத் தர முயல்வதேயாகும். ஊரையும் பேரையும் மாற்றி ‘தன் பெயரில்’ சொந்தமாக்கிக் கொள்ளும் “குல்மால்” வேலை அல்ல குமாரத்தி மொழிபெயர்ப்பு. மனுஷ வர்க்க உறவுப் பரிச்சயத்தை விருத்தி செய்து, பாசத்தை வளர்ப்பது இந்த “ குல்மால் வேலை” கபந்த உபாசனைக்காக செய்யப்படும் மோசடி.

ஆனந்த விகடன் மாஜி துணை ஆசிரியர் (கல்கியைத்தான் புதுமைப்பித்தன் இப்படிக் குறிப்பிடுகிறார்) செய்துள்ள இலக்கிய சேவையை பல்லாயிரக்கணக்கான வாசகர்களும், கல்வியறிவிற் சிறந்த பெரியோர்களும் பாராட்டி வருகிறார்களாமே. அவற்றின் வண்டவாளம் வருமாறு:-

சாரதையின் தந்திரம் என்ற விலாசத்தில் பிரசுரமாகியுள்ள கதைகளில் பெரும்பாலானவை அம்ருத பஜார் பத்திரிகையின் பிரபல ஆசிரியராக, கர்ஸான் பிரபுவுக்கு சூடு கொடுத்த, ஸ்ரீ பாபு சிசிரி குமார் கோஷ் இங்கிலீஷில் எழுதிய ‘ கிளிம்ஸ்ஸ் பிரம் இந்தியன் லைப்” (இந்திய வாழ்க்கை சித்திரங்கள்) என்ற புஸ்தகத்திலிருந்து திருடப்பட்டவை. தவிரவும் ‘தந்திர’த்திலுள்ள ‘ புது ஓவர்ஸீர்’ என்ற கதை பிரேம்சந்த் எழுதின ஸால்ட் இன்ஸ்பெக்டர் என்பது. ‘ காங்கிரஸ் ஸ்பெஷலில் கோர சம்பவம் ‘ என்ற கதை அமெரிக்காவில் ஹாஸ்ய சக்கரவர்த்தி என்று சொல்லப்பட்ட மார்க் ட்வெய்ன் எழுதிய ‘ கானிபலிஸம் இன் ஏ கார்” (ரயில் வண்டியில் நரமாம்ச பட்சணி) என்ற கதையின் திருட்டு நகல். இவை தவிர இவரது (கல்கியினது) ‘ஏட்டிக்குப் போட்டி’யில் பெரும்பாலான கதைகள், ஜெரோம் கே ஜெரோம் எழுதிய ‘ திரி மென் இன் எ போட்’ என்ற புஸ்தகத்திலிருந்து வந்த ‘ களவாணி இலக்கியம்”.

திருட்டுத் தொழில் சாதாரணம்.போலி கவுரவத்துக்காக அதைச் செய்ய ஒரு மனிதன் துணியும்போது அதை பாராட்டும் சமுதாயத்தைப் பற்றிதான் வருந்த வேண்டியிருக்கிறது.ஆனால் நாட்டின் ஷீணம் அதன் வர்மத்தையே தொட்டுவிடுமானால்தான்,இலக்கியத்திலும் இந்த பொய்மை புகுந்துவிடும்.

நாகரிக வாழ்வுக்கு கண்ணாக அமைந்த இலக்கியம், காமாலை பூத்துப் போனால் தேசத்துக்கே அவக்கேட்டை உண்டாக்கிவிடும். பிறநாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் இல்லையா? அற்புதமான கனவுகளை எல்லாம் எழுப்பவில்லையா? அதெயெல்லாம் புறக்கணித்து விட்டு ஏதோ ஒரு துடப்பக் கட்டையை திருடிக்கொண்டு வந்து, அதையும் தன்னுடையது என்று பகட்டிக்கொண்டு திரிவது: அதற்கு பக்கப்பாட்டு பாட ஒரு பஜனைக் கும்பல்; இதை உருப்படுகிறதற்கு ஏற்ற சேவை?

ஏதோ விவாதத்தில் தோற்றுவிட்டதாகவும், அதனால் ரசமட்டக் கும்பல் வசைத் தமிழில் இந்த பூச்சாண்டி காட்டுவதாக அங்கலாய்க்கும் ஆனந்த விகடனின் மாஜி துணை ஆசிரியரே! குறிப்பிட்ட விவாதத்தை விட்டு ஓடிப்போனதுடன் விவகாரத்தை குளறுபடி செய்து திமிர்த் தாண்டவமாடியது யார்? உண்மையைச் சொல்வதில் தோல்வியென்ன ஜெயமென்ன? ரசமட்ட கும்பல் ஆறு வருஷங்கள் அல்ல, அறுநூறு வருங்களானாலும் உம்முடைய கபட நாடகத்தை வேட்டையாடிக் கொண்டுதானிருக்கும்.’’

——————————————————————

ஆனந்த விகடன் ஆசிரியர் வாசன் மற்றும் கல்கி பற்றி புதுமைப்பித்தன் எழுதி 1943ம் வருடம் ஜீலை 11, தினமணி நாளேட்டில் வெளிவந்தது.

கலை சிகாமணிகள் வண்டவாளம்”

கல்கி பத்திரிகை போட்டி, பந்தயம், போனஸ், பரிசு என்றெல்லாம் தர்மாவேசத்தோடு பேச ஆரம்பித்து விட்டதுதான் கலியுக அதிசயம்! இந்த ஞானோதயம் எத்தனை நாளாக! அப்பத்திரிகை ஆசிரியரின் பூர்வாசிரமத்தை அவ்வளவு லேசில் தமிழ் மகன் மறந்துவிடுவது போல், தமிழ் மக்கள் மறந்துவிட மாட்டார்கள். தமிழ்நாடே ஏகோபித்து தனது அழுத்தமான கண்டனத்தை அறிவித்த பொழுது ஆனந்த விகடன் ஆபிஸ் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு, விட மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணின அந்த வைராக்கிய சிகாமணிக்கு பின்புறத்தில் போதிமரம் எந்த தேதியில் முளைத்தது? தம்முடைய திருச்சாயை அந்தக் காரியாலயத்தில் படிந்திருந்த வரைதான், ஸ்ரீ வாசன் செய்துவந்த காரியாதிகள் யாவும் புனிதமானதோ, முதலாளியின் செக்கு புஸ்தகத்தில் ‘காதல் கொண்டு’ மனசை விற்ற பேனா கூலிதானே, உமக்கென்ன இன்று திடீரென்று ரோஷம் பொத்துக்கொண்டு வரவேண்டும்.

ஸ்ரீ வாசன் தமது படங்களில் எல்லாம் ரசாபாசமான காட்சிகளை படம் எடுத்து, கலையுணர்ச்சியை எல்லாம் புண்படுத்தி விடுவதாக எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு வரும் தமிழ் மகனார் கல்கி பெரியார் தமது பூர்வாசிரமத்தில் ஆனந்த விகடன் நிழலில் எழுந்தருளியிருந்த காலத்திலே, தமிழ் நாட்டார் வாழ்க்கை சாரமற்றது.கதை புனைவதற்கு ஏற லாயக்கற்றது என்று எழுதியதோடல்லாமல் அவர் பேனா பிடித்த காலத்திலிருந்து இன்று வரை வெள்ளைக்கார கதாபாத்திரங்களுக்கு வேஷ்டியும் சேலையும் கட்டி விட்டு, ‘ரஷ்ண்ய சேனை’ சிங்காரத்தோடு உலாவ விட்டு வரும் கலை யோக்கியதைக்கு எந்த விதத்திலும் மட்டமாகி விடாது எனத் தெரிந்துகொள்ளட்டும். வங்காளிகள் திருடிய ஜப்பானிய கதையை தமிழில் திருடி தன் பெயரில் போட்டுக்கொள்வதுதான் தமிழர் கலையுத்தாரணமோ? தவிரவும் கலை வளர்ச்சி, கலை உத்தாரணம் என்றெல்லாம் அவர் நடத்திய கதைப் போட்டிகளின் வண்டவாளத்தை தமிழர்கள் மறந்துவிடவில்லை.சிறந்த கதை எழுதி நூறு ரூபாய் பரிசு பெற்றவருடைய சுய எழுத்துக்கும் அவர் பரிசு பெறுவதற்கும் சம்பந்தம் எப்போதும் இருந்து வந்ததில்லை என்பதை நாம் நிரூபிக்க முடியும். உம்முடைய கல்கியாரின் வண்டவாளம் இந்த மாதிரி இருக்க, தமிழ்ர் கலையுணர்ச்சிக்கு கொடி பிடித்து வருவதற்காக எந்த முகத்துடன் முன் வந்தீர். ஒழுக்கம் தர்மம் என்ற உங்கள் பேச்சு, மூன்று நாள் மழையில் நனைந்த பண்ருட்டி பொம்மை மாதிரி, சாயம் கரைகிறது. இந்த வேஷம் உங்களுக்கு லாயக்கில்லை…..

இன்னும் இது போல் பல கட்டுரைகள் கல்கி பற்றி எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.  மேலும் இது பற்றிய விவரங்களை நான் புதுமைப்பித்தன் பற்றிய பேருரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்பேருரையைக் கீழ்க்காணும் சுட்டியில் காணுங்கள்.  ஏதேனும் சிரமம் இருந்தால் எனக்கு எழுதுங்கள்:

https://drive.google.com/file/d/1XlPQCDPX62Qn2j7HMWbnLOlrc8Niffje/view?usp=sharing

பின்வருவது இரண்டாவது உரை. மூன்று மணி நேரம் நீண்டது.

https://www.youtube.com/watch?v=DoF6U6EmlxE