The Outsider (10)

ஆவணப்படத்துக்காக சில பிரபலமான ஒளிப்பதிவாளர்களை அணுகினேன்.  எல்லோரும் அவர்கள் முன்பு ஒப்புக் கொண்ட வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.  சரி, புதியவர்களைப் பிடிக்கலாம் என்று முனைந்தேன்.  மிகவும் கசப்பான அனுபவங்களே எஞ்சின.  யாருமே தம் வாழ்வில் ஒரு புத்தகம் கூட படித்திருக்கவில்லை.  படித்த ஒருவர் எங்களோடு பத்து நாட்கள் பணி புரிந்தார்.  பிறகு அவருக்குப் பெரிய வேலை கிடைத்துப் போய் விட்டார்.  லெனினிடம் சொன்னேன்.  அவர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் அந்த ஒளிப்பதிவாளரோ ஒரு நாளைக்கு 25000 ரூ. கேட்டார்.  பிறகு ஒரு வழியாகப் பேரம் பேசி ஒரு தொகைக்கு ஒப்புக் கொண்டார்.  ஆனால் அவர் தமிழர்தான் என்றாலும் நாங்கள் பேசுவது அவருக்கும் அவர் பேசுவது எங்களுக்கும் புரியவில்லை.  அது தவிரவும் ஏகப்பட்ட மிக மிக மிகக் கசப்பான அனுபவங்கள்.  தப்பித்தோம் பிழைத்தோம் என்று கழன்று கொண்டோம்.  கொஞ்சம் பண நஷ்டம்.  நட்புடன் நான் தோளில் கை போட்டால் குரங்கைப் போல் தாவி என் தோளில் அமர்ந்து கொள்கிறார்கள். 

வேறு சில இளம் ஒளிப்பதிவாளர்களை அணுகிய போது அவர்களும் பணம் பணம் என்றே பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.  சரி, எவ்வளவு வேண்டும் என்று கேட்டால், நீங்களே சொல்லுங்கள் என்று பதில் வருகிறது.  இப்படி ஒரு பதில் வந்தாலே அந்தப் பேரம் சரியாக முடிந்ததில்லை என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  அதனால் மேற்கொண்டு பேசாமல் விலகி விடுகிறோம். 

லெனின் எவ்வளவு பெரிய சாதனையாளர்!  அவரிடம் இந்த ஆவணப்படத்தை எடிட் செய்து தர முடியுமா என்று கேட்டதும் ஒரு வார்த்தை பேசாமல் ஒப்புக் கொண்டார்.  ரஷ்ஷைப் பார்த்தார்.  உலகில் உள்ள ஆவணப்பட ஆர்வலர்களிடம் கொண்டு செல்லுங்கள் என்றார்.  ஒருநாள் இடைவிடாமல் தொடர்ந்து பதினைந்து மணி நேரம் ரஷ்ஷைப் பார்த்தார்.  ஆனால் 25 வயது ஆன ஆரம்ப கட்ட ஒளிப்பதிவாளர்கள் எடுத்த எடுப்பில் பணத்தைப் பற்றித்தான் பேச ஆரம்பிக்கிறார்கள்.  நான் என்ன வணிக சினிமாவா எடுத்துக் கொண்டிருக்கிறேன்? 

ஆவணப்படம் பற்றி லெனின் ஒரு சம்பவம் சொன்னார்.  முன்பெல்லாம் படச்சுருள் பெட்டிகளை ரயிலில் அனுப்புவார்கள்.  திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அம்மாதிரி படப்பெட்டிகளைத் தூக்குவதற்கு போர்ட்டர்களுக்குள் அடிபிடி சண்டை நடக்குமாம்.  பணம் அதிகம் கிடைக்கும் என்பதால்.  அவ்வப்போது லெனினின் ஆவணப்படப் பெட்டியும் போகும்.  அதைத் தூக்க ஆளே வர மாட்டார்களாம்.  அவர்களுக்கு அது டாக்யுமெண்டரி என்று தெரிந்து விடும்.   லெனின் ஒவ்வொரு போர்ட்டரையாகக் கெஞ்சுவார்.  அப்போது ஒரு போர்ட்டரை இன்னொரு போர்ட்டர் தூக்குப்பா என்று சொன்ன போது, யோவ், இது டாக்குமெண்ட்ரிப்பா, தூக்கிக் கொண்டு போய் வச்சுட்டு டைரக்டருக்கே நாம்தான் காசு கொடுக்க வேண்டும் என்றாராம் அந்தப் போர்ட்டர். 

எங்கள் நிலை அப்படித்தான் இருக்கிறது. 

உங்களுக்குத் தெரியுமா ஒளிப்பதிவாளர்களே, எழுத்தாளர்களாகிய நாங்கள் பத்திரிகைகளில் எழுதுவதற்கு இதுவரை ஒரு பைசா வாங்கியதில்லை என்று?  ஆச்சரியமாக இருக்கிறதா?  அதுதான் உண்மை.  இலக்கியப் பத்திரிகைகள் அனைத்துமே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதால் அவர்களால் காசு கொடுக்க முடியாது.  வெகுஜனப் பத்திரிகையில் ஒரு கட்டுரைக்கு நானூற்றி ஐம்பதோ தொள்ளாயிரமோ கொடுப்பார்கள்.  அது என்ன தொள்ளாயிரம் என்றால், நூறு ரூபாய் வருமான வரி.  இந்தத் தொள்ளாயிரம் ரூபாய் கூலிக்கு நாங்கள் இரண்டாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்க வேண்டும். 

பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே போய் வந்தால் பத்திரிகையில் பயணக் கட்டுரை கேட்பார்கள்.  அனுப்பினால் அதற்கும் தொள்ளாயிரம்தான் கிடைக்கும்.  அதுவும் எட்டு மாதம் கழித்து. 

தொலைக்காட்சியிலும் அதே நிலைதான்.  வின் டிவியில்  முப்பது உலக சினிமா பற்றிப் பேசினேன்.  ஒவ்வொன்றும் அரை மணி நேரம்.  வாரா வாரம்.  உலகம் பூராவிலிருந்தும் பார்த்தார்கள்.  இதற்காக ஒவ்வொரு படத்துக்கும், எனக்கு மூன்று தினங்கள் உழைக்க வேண்டியிருந்த­து.  ஒரு பைசா கொடுக்கவில்லை.  முழுக்க இலவசம். 

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் என்னுடைய வலைத்தளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களும் இலவசமாகத்தான் வாசிக்கப்படுகின்றன.

நான் உங்களை எனக்கு இலவசமாக வேலை செய்யச் சொல்லவில்லை.  ஆனால் எடுத்த எடுப்பில் பணம் பற்றித்தான் பேசி முடிவு செய்ய வேண்டுமா?  ஆவணப்படமும் வணிக பொழுதுபோக்கு சினிமாவும் ஒன்றா?

ஒரு எழுத்தாளன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா?  புரிகிறதா?  அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, கட்சி வித்தியாசம் இல்லாமல் என்னால் எந்த முதல்வருக்கும் போன் செய்ய முடிகிறது.  ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினை பற்றி நான் ட்விட்டரில் எழுதியதும் அந்தத் துறையின் செயலர் என்னோடு பேசுகிறார்கள்.  சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி, அப்படித்தான் நடக்கிறது. சென்ற ஆண்டு குமுதத்தில் எழுத்தாளர்களுக்கு வீடு கொடுங்கள் என்று எழுதியதும், அந்தக் கட்டுரை வெளிவந்து இரண்டே நாட்களில் எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் என்ற திட்டத்தை அறிவிக்கிறார் இப்போதைய முதல்வர்.  எழுத்தாளனுக்கான இடத்தைத் தமிழ்ச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கீகரித்து வருவதன் அடையாளம் இது.

ஆனால் தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்கள் மட்டும் கையில காசு, வாயில தோச என்கிறார்கள்.  வணிக சினிமா என்றால் அந்த விஷயமே வேறு.  ஆனால் ஆவணப்படத்துக்கும் காசை எடு, அதுவும் ஒரு நாளைக்கு 25000 ரூபாய், அதிலும் லெனினின் சிபாரிசுக்குப் பிறகும் இந்தத் தொகை என்றால் இது பற்றி என்ன சொல்ல என்று தெரியவில்லை.  

ஒளிப்பதிவாளர்களே, வாழ்நாள் பூராவும் இந்த சமூகத்துக்காக இலவச சேவை செய்யும் ஒரு எழுத்தாளனுக்கு உங்களால் உங்களுடைய நேரத்தையும் கலையையும் கொஞ்சம் தானம் செய்ய முடியாதா என்ன?