நிகழ மறுத்த அற்புதம் என்று நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கமல்ஹாஸன் பற்றிய கட்டுரை. அந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் அந்த்த் தலைப்பு தர்மு சிவராமுவினுடையது என்று தெரிய வந்த்து. அதனால் நான் ஒன்றும் கவலைப்படவில்லை. தர்மு சிவராமு ஒரு லெஜண்ட். லெஜண்டுகளின் வார்த்தைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள தடையேதும் இல்லை.
அப்படியேதான் மாயமான் வேட்டை என்ற தலைப்பையும் பயன்படுத்திக் கொண்டேன். அத்தலைப்பு இந்திரா பார்த்தசாரதியின் குறுநாவல்.
என் வாழ்வில் சீலேயின் முக்கியத்துவம் பற்றி ஆயிரம் பக்கம் எழுதியாயிற்று. ஒரு வாக்கியம் கூட இப்போது எழுதப் போவதில்லை.
சீலே செல்ல வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. ’யோவ், இனிமேல் பயணம் செல்வதற்கு நீர் பணம் இல்லை என்று சொல்லவே கூடாது’ என்று சொல்லி மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் அனுப்பினார் ஒரு நண்பர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பதினைந்தாயிரம் ரூபாயின் மதிப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதினைந்தாயிரத்தில் ஒரு ரூபாயைக் கூட என் செலவுக்குப் பயன்படுத்த முடியவில்லை. காரணம், என் மகன் கார்த்திக் எங்களிடம் ஸோரோ, ப்ப்பு என்ற இரண்டு நாய்களைக் கொண்டு வந்து கொடுத்தான். ஸோரோ க்ரேட் டேன். அப்போது க்ரேட் டேன் நாயை நடிகர் விக்ரமும் நடிகர் அமிதாப் பச்சனும்தான் வளர்த்தார்கள். அந்த அளவு செலவு வைக்க்க் கூடிய நாய் க்ரேட் டேன். என் நண்பர் அனுப்பிய பதினைந்தாயிரம் ரூபாய் போதவில்லை. மேலும் ஐந்தாயிரம் செலவாயிற்று.
என் மகன் மரீன் எஞ்ஜினீயர். அவனிடம் நான் மாதம் ஐந்தாயிரம் அனுப்பி வை என்றேன். எனக்காக அல்ல. அவன் என் மீது சுமத்திய சிலுவைக்காக. அவன் அனுப்பவில்லை.
நான் அவந்திகாவிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை, யேய், நான் சீலே செல்ல வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அப்படி நான் சீலே செல்லாமல் செத்துப் போனால் உன்னையும் கார்த்திக்கையும் (என் மகன்) பிசாசாக வந்து கொடுமைப்படுத்துவேன்.
அறுபது வயது ஆயிற்று. சீலே செல்ல முடியவில்லை. அறுபத்தைந்து ஆயிற்று. சீலே செல்ல முடியவில்லை. காசு இல்லை அதுதான் விஷயம்.
அப்போது சீனி ஒரு யோசனை சொன்னார். ராஸ லீலா நாவலின் இரண்டாம் பதிப்புக்கு ஒரு சிறப்புப் பதிப்பு அறிவியுங்கள். ஒரு பிரதி பத்தாயிரம் ரூபாய். அப்படி பத்தாயிரம் ரூபாய் கொடுப்பவர்கள் உங்களோடு புகைப்படம் எடுத்து புத்தகத்தின் பின்னட்டையில் வருவார்கள்.
அறிவித்தேன். எண்பது பேர் பணம் அனுப்பினார்கள். சீலே சென்று வந்தேன்.
இதுபோல் சீனி எனக்கு ஒரு ஐம்பது யோசனை சொல்லியிருக்கிறார்.
ஆனால் சீனி தமிழைக் கொலை செய்கிறார். ஆனால் அவர் எழுதும் விஷயங்கள் சமகாலத் தமிழில் யாரும் எழுதாத்து. அதனால்தான் அவரை என் வாரிசு என்றேன்.
ஒரு எழுத்தாளன் என்றால் அவன் தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாயாவைப் படித்திருக்க வேண்டும். எம் என் ராய் படித்திருக்க வேண்டும். சங்க இலக்கியம் தெரிய வேண்டும். இதெல்லாம் தெரிந்தால்தான் அவன் எழுத்தாளன்.
இதைத் தெரிந்தவர்கள் எஸ்.ரா.வும் ஜெயமோகனும் மட்டும்தான். இதைத் தெரியாதவர்கள் எழுத்தாளர்களே இல்லை என்பது என் கருத்து.
ஆனாலும் இன்றைய வாழ்வை எழுதுபவர் சீனிதான். சீனி அராத்து.
என்னோடு பழகியவர்கள் ஏராளம். ஆனால் எனக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரிந்த ஒரே நண்பர் சீனிதான். அவர் என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்.