தமிழுக்குக் கிடைத்த கொடை

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலிருந்து ஒரு அரை நூற்றாண்டுக் காலம் ஐரோப்பாவில் நிலவிய அரசியல், சமூகச் சூழல் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற தத்துவக் கோட்பாட்டை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  தத்துவம் மட்டும் அல்லாது எக்ஸிஸ்டென்ஷியலிஸம் தன் பாதிப்பை செலுத்திய துறைகள் இலக்கியம், ஓவியம் மற்றும் சினிமா.  அதற்குப் பிறகு வந்ததுதான் ஸ்ட்ரக்சுரலிஸம் என்ற அமைப்பியல்வாதம் மற்றும் பின்னமைப்பியல்வாதம்.  இதன் கலாச்சார வெளிப்பாடுதான் பின்நவீனத்துவம்.  பின்நவீனத்துவம் என்பது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் போல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தோடு முடிந்து விடும் தத்துவக் கோட்பாடு அல்ல.  அது ஒரு அறிதல் முறை. 

புவியீர்ப்பு விசை என்ற கண்டு பிடிப்பு எப்படி ஒரு காலகட்டத்தோடு முடிந்து விடும் உண்மை இல்லையோ அதேபோன்றவைதான் பின்நவீனத்துவம் சார்ந்த கோட்பாடுகள்.  உதாரணமாக, அதிகாரம் பற்றிய ஃபூக்கோவின் ஆய்வுகள்.  மனித உறவுகளுக்கு இடையே நிலவும் அதிகாரம் மற்றும் அமைப்புகளும் நிறுவனங்களும், கோட்பாடுகளும் தத்துவங்களும், மொழியும் வரலாறும், கலாச்சாரமும் கடவுளும் தனிமனிதர்கள் மீது செலுத்தும் அதிகாரம் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தியது ஃபூக்கோவின் சிந்தனை.

ஆனால் தமிழ் இலக்கிய சூழலில் நாம் இன்னமும் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தை விட்டுப் பெரும்பாலும் நகரவில்லை என்றே சொல்லலாம்.  அதன் காரணமாகவே பல நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் காலத்தால் பின் தங்கியதாக இருக்கின்றன.  இதற்கு விதிவிலக்காக நேசமித்ரன், போகன் சங்கர், பெருந்தேவி போன்றவர்களைக் காண முடிகிறது. 

தமிழில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பியல்வாதம் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்த புத்திஜீவிகளின் இன்றைய நிலை என்ன?  அமைப்பியல்வாதம் அதிகாரத்தைக் கட்டுடைப்பு (deconstruction) செய்தது.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டுடைப்பைச் செய்தவர்களே இன்று அதிகார மையங்களின் ஆசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள்.  அல்லது, லௌகீக உலகின் ஒளிவெள்ளத்தில் ஈர்க்கப்பட்டு காணாமல் போனார்கள்.   

இந்த விபத்தில் சிக்காத ஒரே எழுத்தாளன் பா. வெங்கடேசன்.  முப்பது ஆண்டுகளுக்கு முன் – அல்லது, அதற்கும் முன்போ? – ஹொகனேக்கல்லில் ஒரு மதுபான இரவில் பா. வெங்கடேசன் என்னோடு பேசிய பேச்சுக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். 

உங்களுக்குப் பிடித்த ஒரு ஐரோப்பிய சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞனைச் சொல்லுங்கள் என்றால் யாரைச் சொல்வது?  எனக்கு ட்சைக்காவ்ஸ்கியிலிருந்து க்ளாத் தெபூஸி வரை எல்லோரையும் பிடிக்கும்.  இல்லை, ஒரே ஒருவரைத்தான் சொல்ல வேண்டும் என்றால், சிறிதும் யோசிக்காமல் மொட்ஸார்ட் என்பேன்.  கவிஞன்? ஆர்த்தர் ரேம்போ.  நாடகக் கலைஞன்?  அந்த்தோனின் ஆர்த்தோ.  அதேபோல் தமிழில் எனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்களில் ஒரே ஒரு பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்று கேட்டீர்களானால், நான் தயங்காமல் சொல்லும் பெயர் பா. வெங்கடேசன்.  

பின்னமைப்பியல்வாதமும் பின்நவீனத்துவமும் தமிழுக்குக் கொடுத்த கொடை பா. வெங்கடேசன்.

இன்று அவருக்குப் பிறந்த நாள்.  ஃபோனில் வாழ்த்து சொன்னேன்.  சாதா வாழ்த்து அல்ல.  உங்களுக்கு நிக்கொனார் பார்ராவுக்குக் கிடைத்தது போன்ற நீண்ட ஆயுளும், குறையாத ஆரோக்கியமும், ஞானபீடப் பரிசும் கிடைக்க வேண்டும் என்றேன்.  பரிசெல்லாம் வேண்டாம், ஆரோக்கியம் ஒன்றே போதும் என்றார். 

சொல்லி விட்டு நிறுத்தாமல், வெறும் வாழ்த்து போதாது, சாருவிடமிருந்து ஒரு பரிசும் வேண்டும் என்றார்.

என்ன பரிசு என்றேன்.

நீங்கள் தாண்டவராயன் கதையைப் படிக்க வேண்டும்.  அதுதான் எனக்குக் கிடைக்கும் பெரிய பரிசு.

இன்றே ஆரம்பித்து விடுகிறேன் என்றேன்.  இதோ ஆரம்பித்தும் விட்டேன். 

கீழே ஆசை எழுதிய கட்டுரை. நன்றி: அருஞ்சொல்


பா.வெங்கடேசனை நீங்கள் ஏன் படித்தாக வேண்டும்? | அருஞ்சொல் (arunchol.com)