சற்று நேரத்துக்கு முன்னால் ஒரு நண்பர் பேசினார். ஒரு வாசகர் என்னிடம் கொடுக்கச் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் அந்த நண்பரிடம் கொடுத்திருக்கிறார். பணம் கொடுத்தவர் ஒரு தொழிலதிபர். ஏன், அவருக்கு என் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தெரியாதா என்று கேட்டேன். தெரியும், ஆனாலும் உங்களை நெருங்குவதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்திருக்கிறது என்றார் நண்பர்.
இப்படியும் பல வாசகர்கள் இருக்கலாம். அந்தத் தொழிலதிபர் மேலும் ஒரு விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டாராம். பணம் கொடுக்காத பணக்காரர்கள் எல்லோருமே பிச்சைக்காரனின் மனோபாவத்துடன் வாழ்வதாகச் சொல்ல முடியாது. சாருவை நெருங்குவதில் எங்களுக்கு உள்ள மனத்தடையும் காரணமாக இருக்கலாம்.
உண்மைதான். என்னுடன் பேசாமல் பழகாமல் தூரத்திலிருந்தே என் எழுத்தை வாசித்துக் கொண்டிருந்தால் சிறப்பு; நெருங்கினால் மன உளைச்சல்தான் மிஞ்சுகிறது என்று சிலர் நினைக்கலாம். சிலருக்கு அப்படி நடந்தும் இருக்கிறது. இதன் பொருள் நான் பழகுவதற்குக் கடினமானவன் என்பது அல்ல. லூசிஃபர் என்ற வெப்சீரீஸைப் பார்த்திருந்தீர்கள் என்றால் என்னை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அந்த லூசிஃபர் மாதிரிதான் நானும். நடைமுறை உலகின் பழக்கவழக்கங்கள் எனக்குப் புரிவதில்லை. ஒருத்தன் தன்னை கடவுள் என்றான். நான் அதை நம்பினேன். அதுதான் நான். மை நேம் இஸ் கான் படத்தில் வரும் கான் போலவும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் எனக்கு என்னவோ லௌகீக உலகின் நடைமுறைகள்தான் மிக வினோதமாகவும் மிக மூர்க்கமாகவும் தெரிகின்றன. சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு என் நேரத்தை வீணடித்துக் கொண்டு நாலைந்து பக்கங்களில் ஒரு கடிதம் எழுதினேன். அறம் பற்றிய என் கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒரு கடிதம். நான் எழுதிய கடிதங்களிலேயே ஆகச் சிறந்த கடிதமாகக் கருதுவது அந்தக் கடிதத்தைத்தான். அந்தக் கடிதம் நண்பரின் கவனத்துக்குப் போக வேண்டும் என்று வாட்ஸப்பிலும் கடிதம் எழுதியிருக்கும் விவரத்தைத் தெரிவித்து, நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள் என்று தகவல் தெரிவித்தேன்.
ஓகே சாரு, நிச்சயம் பார்க்கிறேன் என்று வாட்ஸப்பில் பதில் கொடுத்தார் நண்பர்.
ஒரு வாரம் ஆகி விட்டது. நண்பரிடமிருந்து ஒரு வார்த்தை பதில் இல்லை. இது என்னை மிகவும் அவமதித்ததாக இருந்தது. என் வாழ்விலேயே நான் எதிர்கொண்ட மிக மூர்க்கமான எதிர்வினை இதுதான். இத்தனைக்கும் நான் ஒன்றும் பிரச்சினைக்குரிய விஷயம் எதையும் எழுதவில்லை. அவர் நேர்ப்பேச்சில் தெரிவித்த ஒரு விஷயத்துக்கு மாற்றுக் கருத்தை கடிதமாக எழுதினேன். அவ்வளவுதான். அவர் என்னுடைய அந்தக் குறிப்பிட்ட கடிதத்தைப் படித்து மனம் புண்படும்படி எந்த விஷயமும் அதில் இல்லை. அறம் பற்றிய என் புரிதலை கடிதத்தில் விவரித்தேன். அவ்வளவுதான்.
நான் அவர் இடத்தில் இருந்தால், ”கடிதம் படித்தேன், உங்கள் கருத்தை ஏற்காவிட்டாலும் கடிதம் எழுதியதற்கு நன்றி” என்று ஒரு வார்த்தை பதில் எழுதியிருப்பேன்.
ஆனாலும் அவரோடுதான் இன்று மதியம் உணவருந்தினேன். அவரோடுதான் இன்று முழுவதும் இருந்தேன். அவர் அந்தக் கடிதம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நானும் ஒரு வார்த்தை கேட்கவில்லை.
நான் அந்தக் கடித்த்தை எழுத அரை நாள் எடுத்துக் கொண்டேன். என் வாழ்வு பூராவும் நான் வாசித்த புத்தகங்களின் சாரம் அந்தக் கடிதம். அதற்கே கடிதம் கிடைத்தது என்று ஒரு வார்த்தை இல்லை. நான்தான் பழகுவதற்குக் கடினமானவன்!
என்னை நெருங்குவதற்குத் தயங்கும் நண்பர்கள் வினித்தைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வினித்தின் தொலைபேசி எண்: 84384 81241