சிவந்த வானம்

அநேகமாக பணம் அனுப்பியவர்கள் அனைவரும் தங்கள் பெயரைத் தெரிவித்து விட்டார்கள். நன்றி. நான்தான் ஔரங்ஸேப்… இறுதி கட்ட பிழை திருத்தம் செய்து விட்டேன். நாளை டம்மி காப்பி எடுத்துப் பார்த்து விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டும். இன்னும் இரண்டொரு நாளில் அச்சுக்குப் போய் விடும். சிறப்புப் பதிப்பு வெளியீட்டுத் திட்டத்தில் இணைய விரும்பும் நண்பர்கள் புதன்கிழமைக்குள் பணம் அனுப்பி பெயரையும் தெரிவியுங்கள். இந்தத் தொகை அனைத்தும் இப்போதைய சீலே பயணத்துக்குத்தான் பயன்படும். வீசா கிடைத்தால் பாரிஸ் போய் அங்கே ஒரு வாரம் தங்கி விட்டு சீலே கிளம்ப வேண்டும். முதலில் இருந்த திட்டப்படி கூபா வழியாக சீலே போவதாக இருந்தது. ஆனால் கூபாவுக்கே தனியாக இரண்டு லட்சத்துக்கு டிக்கட் ஆனபடியால் அதைக் கை விட்டு விட்டு பாரிஸ்.

பாரிஸில் நண்பர்கள் யாரையும் பார்க்க இப்போதைக்கு யோசனை இல்லை. பார்க்கலாம் என்றால் கேமராவைத் திருடி விட்டேன், மொபைல் போனைத் திருடி விட்டேன் என்று எழுதுகிறார்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் கொஞ்ச காலம் பிக்பாக்கெட் அடித்துப் பிழைத்திருக்கிறேன். ஆனால் என்னை அதிதியாகப் பாராட்டும் நண்பர்களின் வீட்டில் கை வைத்தது இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், எனக்குப் பணத்தின் மீதோ பொருட்களின் மீதோ ஆசை கிடையாது. உயிரின் மீதே பற்று இல்லாமல் வாழ்பவன் நான். அப்படிப்பட்ட ஒருவன் கேமராவைத் திருடி விட்டான் என்றால் அப்படிச் சொல்பவர்களின் மலினமான மனதைத்தான் காட்டுகிறது. என்னுடைய பையில் சுகனின் கேமரா இருந்ததாம். அதுதான் சாட்சி. அட, மனநோயாளிப் பேய்களா! என் பையில் பொருட்களை வைத்துக் கட்டியவன் யார்? அவனை அல்லவா அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்? மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள். இப்படிக் குற்றம் சாட்டிய மனிதனின் வீட்டில்தான் நான் ஒரு மாதம் தங்கியிருந்தேன் என்பது எவ்வளவு பெரிய ஹராம் பாருங்கள்.

அதனால் இந்த முறை எந்த நண்பரையும் சந்திக்க விருப்பம் இல்லை. அப்படியே சந்திக்க நினைத்தால் என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் “நான் அவர்களிடமிருந்து எந்தப் பொருளையும் திருடவில்லை” என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து விட்டுத்தான் போக வேண்டும். மேலும், என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் எனக்கு 500 யூரோ கொடுக்க வேண்டும். ரொம்பவும் கம்மி காசுதான். சல்லிசாக இருப்போம் என்று முடிவு செய்து விட்டேன். 1000 யூரோ கொடுத்தாலும் ஓகேதான். குறைந்த பட்ச கட்டணம் 500 யூரோ. இப்படிச் செய்தால் திருட்டுப் பட்டம் கிடைக்காது என்று நினைக்கிறேன்.

சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டது குறித்து நான் எதுவும் எழுதவில்லையே என்று பல நண்பர்கள் கேட்டார்கள். அவரெல்லாம் அதிர்ஷ்டசாலி. உலகமே அவரை வியந்து பாராட்டுகிறது. அன்பு செலுத்துகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறது. ஆனால் தமிழ் எழுத்தாளனை சமூகம் திருட்டுப் பட்டம் சுமத்தி அவமானப்படுத்துகிறது. இல்லாவிட்டால் ரேப்பிஸ்ட் என்று காறி உமிழ்கிறது. எத்தனை கோடி கொடுத்தாலும் இது போன்ற அவமானங்களிலிருந்து தப்பிக்க இயலாது. தருண் தேஜ்பாலை சுப்ரீம் கோர்ட் நிரபராதி என்று சொன்னாலும், அவர் மீது விழுந்த பழி பழிதானே? எழுத்தாளர்களை நாங்கள் கத்தியால் குத்தி தியாகியாக்க மாட்டோம். ரேப்பிஸ்ட் என்று பழி சுமத்தி சமூகமே அவர் மீது காறித் துப்பும்படி செய்வோம். இல்லாவிட்டால் கேமரா திருடன் என்று பழி போடுவோம்.

சல்மான் ருஷ்டி விஷயத்திலும் எம்.எஃப். ஹுஸேன் விஷயத்திலும் என் கருத்து ஜாவேத் அக்தர் சொன்ன மாதிரிதான். பல கோடி மனிதர்கள் புனிதமாக நினைக்கும் விஷயங்களைப் பற்றி ஏன் தவறாக எழுதுகிறீர்கள்? இன்றைய உலகில் கருத்துச் சுதந்திரம் என்பது இல்லவே இல்லை. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கே சென்னையில் ஒவ்வொரு நடிகரும் இருபது பாடி கார்டுகளுடன் அலைகிறார்கள். ஆனால் தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டிருக்கும் ருஷ்டி எப்படி பாதுகாவலர் இல்லாமல் மேடை ஏறினார்? மிகவும் அவலமாக இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில்.

சமீபத்தில் ஸ்கை ரோஹோ (சிவந்த வானம் – Sky Rojo) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தேன். வாழ்வில் இதுவரை இப்படி ஒரு தொடரைப் பார்த்ததில்லை. ஷேக்ஸ்பியரின் நாடக வசனங்களைப் போல் இருந்தது. மிகவும் intense ஆன தருணங்கள். வசனத்துக்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. குடும்பத்தில் அமர்ந்து பார்க்க முடியாது. தனியாகத்தான் பார்க்க முடியும்.