My beloved Charu,
பா. வெங்கடேசன் பற்றிய உங்கள் குறிப்பும் ஆசையின் கட்டுரையும் படித்தேன். உங்கள் கருத்தை மதிக்கிறேன். பா. வெங்கடேசனை உடனடியாக வாங்கிப் படிக்கிறேன். நீங்கள் சிபாரிசு செய்யும் எழுத்தாளர்கள் பலரையும் படித்து வருகிறேன். எதுவுமே ஏமாற்றியதில்லை.
ஆசையின் அபிப்பிராயம் பற்றி. தாண்டவராயன் கதை நோபல் பரிசுக்கு உரியது என்று சொல்லியிருக்கிறார். அப்படியே ஆக வேண்டும். ஆனால் எனக்கு ஒரு கேள்வி. ஆசையோ நீங்கள் வியந்தோதும் பா. வெங்கடேசனோ நீங்கள் எழுதிய ராஸ லீலாவைப் படித்திருப்பார்களா? சர்வ தேச இலக்கியத்தின் ஒரு வாசகியாக நான் மிக நிச்சயமாகச் சொல்லுகிறேன், ராஸ லீலாதான் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யக் கூடிய முதல் படைப்பாக இருக்கும்.
என்னுடைய இந்தக் கடிதத்தை தயவுசெய்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (நான் ஒரு ஃபேக் ஐடி என்று ஃபேஸ்புக்கில் பலரும் சொல்லி வருவதால் என் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறேன். தாங்கள் அதை வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)
ஸ்ரீ
அன்புள்ள ஸ்ரீ,
த. ராஜன் பா. வெங்கடேசனை நேர்காணல் செய்து வெளியிட்டுள்ள கதையும் புனைவும் என்ற நூலைப் படித்துப் பாருங்கள். எதிர் வெளியீடு. அதில் பா. வெங்கடேசன் என் எழுத்து பற்றிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். தமிழில் வேறு யாருமே வெளியிட்டிராத கருத்துக்கள் அவை. என் எழுத்தைப் படிக்காத ஒருவர் அப்படி மதிப்பிட முடியாது. பா. வெங்கடேசன் என்னை விட ஒன்பது வயது கம்மியானவர் என்றாலும் என் சமகால எழுத்தாளர். என்னோடு வளர்ந்தவர். நாங்களெல்லாம் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஆசை இன்றைய கவிஞர். என் மதிப்புக்குரியவர். தாண்டவராயன் கதையை நான் இப்போதுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பா. வெங்கடேசனின் மிகத் தீவிரமான வாசகன் நான். பா. வெங்கடேசன் எழுத்தாளர்களின் எழுத்தாளன். பா. வெங்கடேசன் சந்தேகமே இல்லாமல் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளன். பாகீரதியின் மதியம் ஒன்று போதும் அதற்கான சாட்சி.
சாரு