சென்னையில் ஒரு லிட்ரரி சலோன்…

1970களில் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் இல்லத்தின் மொட்டைமாடியில் அவர் காகங்கள் என்ற பெயரில் மாதாமாதம் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்தினார். அது அப்போது இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தி.  நான் 1978இல் தில்லி சென்றேன்.  அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்த கொல்லிப்பாவை என்ற இதழில் “காகங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது என் கனவுகளில் ஒன்று” என்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  நிவேதிதா, புதுதில்லி என்ற பெயரில் வந்திருந்தது அந்தக் கடிதம்.  பிறகு கொல்லிப்பாவையுடன் பெரும் யுத்தம்.  1981இல் ஜே.ஜே. சில குறிப்புகள் வந்ததும், அதை நான் கடுமையாக விமர்சித்ததால் சுந்தர ராமசாமியுடனும் பிரச்சினை.  ஆனாலும் காகங்கள் கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொள்ள முடியாதது பற்றி இன்னமும் எனக்கு வருத்தம்தான்.

கு.ப.ராஜகோபாலன் அவர் காலத்தில் கும்பகோணத்தில் வாராவாரம் இலக்கியக் கூட்டம் நடத்துவார் என்று படித்திருக்கிறேன்.  ஷேக்ஸ்பியர் கிளப் என்பது பெயர். 

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியின் இலக்கியவாதிகள் மாதம் ஒருமுறை ஒரு எழுத்தாளரின் வீட்டில் சந்திப்பது வழக்கமாக இருந்தது.  பதினேழாம் நூற்றாண்டிலிருந்து ஃப்ரான்ஸ் அந்த வழக்கத்தைத் தன்னிடம் எடுத்துக் கொண்டது.  அதை salon littéraire என்று ஃப்ரெஞ்சில் அழைத்தார்கள்.  சலோன் என்றால் அறை அல்லது கேலரி.  இலக்கியவாதிகள் சந்திக்கும் இடம்.  அப்படி ஒரு இடம் சென்னையில் 1990இல் இருந்தது.  அதுவும் தி. நகர் ரங்கநாதன் தெருவில்.  அதை ஆரம்பித்தவர் பெயரும் ரங்கநாதன்.  மத்தியதர வர்க்கத்தின் குறியீடாக விளங்கும் ரங்கநாதன் தெருவுக்கு ஒரு இலக்கியவாதி போகும் சாத்தியம் இருக்கிறதா?  ஆனால் இலக்கியவாதிகள் அந்தப் பரபரப்பான தெருவுக்கு தினந்தோறும் சென்றார்கள்.  ஆம்.  அப்படித்தான் நடந்தது.

1990இல் முன்றில் என்ற பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்கப்பட்டது.  ஆசிரியர் மா. அரங்கநாதன்.  அதற்கு முன் அவர் பெயரை நான் கேட்டதில்லை.  அரசுத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரங்கநாதன் அந்த வயதில்தான் தமிழ் இலக்கிய உலகில் ஒரு இளைஞனுக்கு உரிய மிடுக்குடன் நுழைந்தார்.  ஒரு கவிதைத் தொகுதி, இரண்டு நாவல்கள், எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் என்று பெரும் வேகத்துடன் எழுதினார். முன்றிலுக்கும் மற்ற சிறு பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், முன்றில் வெறும் பத்திரிகையோடு நின்று விடவில்லை.  தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு நெருக்கடியான வணிக வளாகத்தின் முதல் மாடியில் ஒரு கடையில் முன்றில் புத்தக விற்பனைக் கூடம் தொடங்கப்பட்டது.  அப்போதெல்லாம் பணப் புழக்கம் இல்லாத காலம்.  கணினி, ஸாஃப்ட்வேர் துறை வேலை என்று எதுவும் அறிமுகம் ஆகியிருக்கவில்லை.  யாரும் அந்தப் புத்தக விற்பனைக் கூடத்திலிருந்து புத்தகம் வாங்கி நான் பார்த்ததில்லை.  ஆனால் அது ஒரு நல்ல நூலகம் போல் விளங்கியது.  அங்கேயே அமர்ந்து நமக்குத் தேவையான புத்தகத்தைப் படிக்கலாம்.  எப்போதுமே குறும்பான ஒரு சிரிப்புடன் தோற்றம் தரும் அரங்கநாதன் எல்லோருடனும் சிநேகமாக இருப்பார்.  எந்தக் குழுவிலும் சேர மாட்டார்.  அவருக்கு எல்லோருமே நண்பர்களாக இருந்தனர். 

விடுமுறை நாட்களில் காலையிலிருந்தே முன்றில் விற்பனைக் கூடத்தில் எழுத்தாளர்களைப் பார்க்க முடியும்.  மற்றபடி தினந்தோறும் மாலை ஐந்து மணியிலிருந்து ஒன்பதரைக்கு அந்த வணிக வளாகம் மூடும் வரை அங்கே எழுத்தாளர்கள் குழுமியிருப்பார்கள்.  நானும் வாரம் இரண்டு முறையாவது போய் விடுவேன்.  அந்த விற்பனைக் கூடத்தில் மூன்று ஆட்கள்தான் அமர முடியும்.  ஆனாலும் விற்பனைக் கூடத்தின் வெளியே உள்ள வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள் எழுத்தாளர்கள்.  இல்லாவிட்டால் அந்த வணிக வளாகத்தின் வாசலில் இருந்த டீக்கடையில் எழுத்தாளர்களைப்  பார்க்கலாம். 

அரங்கநாதனிடம் ஒரு விசேஷம் என்னவென்றால், தன் வயதை ஒத்த மற்றும் தன் வயதுக்குக் கீழான எழுத்தாளர்களை அவன் இவன் என்றுதான் குறிப்பிடுவார்.  ஆனால் அரங்கநாதன் அன்பும் சிநேகமும் நிறைந்தவர் என்பதால் அதை யாருமே தவறாக நினைக்க மாட்டார்கள்.  இருந்தாலும் அவர் சுந்தர ராமசாமியைக் கூட அவன் இவன் என்று குறிப்பிடும்போது எனக்கு சிரிப்பு வந்து விடும்.  யாராவது வந்து ”சார், மோகன் வந்தாரா?” என்று கேட்டால், ”இப்போதானே நின்னுட்டு இருந்தான், கீழே டீ குடிக்கப் போயிருப்பான்” என்று வெகு சகஜமாகச் சொல்லுவார். 

அரங்கநாதன் இன்றைய இளைஞர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு நிறை வாழ்வை வாழ்ந்தவர்.  எத்தனை பேர் அறுபது வயதில் இலக்கியத்தில் நுழைந்து, இறுதி நாள் வரை எழுதிக் கொண்டே இருந்தார்கள்?  எழுதியது மட்டுமா?  ஒரு தீவிர செயல் வீரரைப் போல் இயங்கி 1990இலேயே மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தினார்.  இன்றளவும் அப்படி ஒரு கருத்தரங்கை சென்னையில் நான் கண்டதில்லை.  அப்படி ஒரு கருத்தரங்கை நடத்த எத்தனை லட்சம் செலவாகியிருக்கும்?  அதற்கெல்லாம் ஒரு ஸ்பான்ஸர் கிடையாது.  எல்லாம் மா. அரங்கநாதன் மற்றும் மகாதேவனின் சொந்தப் பணம்தான்.  மகாதேவன் யார் என்று பின்னால் சொல்கிறேன்.   

காலச்சுவடு பத்திரிகை சென்னையில் நடத்திய உலகத் தமிழ் மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடந்தது என்றாலும், முன்றில் கருத்தரங்கை எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த விழாவாகவே கொண்டாடினார்கள் எனலாம். பெங்களூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த படிகள் பத்திரிகை எண்பதுகளில் வில்லிவாக்கத்தில் நடத்திய கருத்தரங்கமும் சிற்றிலக்கியச் சூழலில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. 

முன்றில் அரங்கநாதனுக்கு அப்போது வலது கரமாக விளங்கியவர் ஒரு இளைஞர்.  மகாதேவன்.  வழக்கறிஞர்.  அரங்கநாதனின் புதல்வர். வக்கீல் மாதிரியே தெரியாது.  கல்லூரி மாணவனைப் போல் இருப்பார்.  முன்றில் விற்பனைக் கூடத்தின் பின்னால் ஒரு அறையில் தன் கட்சிக்காரர்களை சந்திப்பார் மகாதேவன்.  தந்தையும் மகனும் ஆரவாரம் இல்லாதவர்கள்.  ஆனால் செயல் என்று வந்தால் எந்தக் குறையுமே இல்லாமல் செய்து முடிப்பார்கள்.  நான் மகாதேவனைப் பார்த்து முப்பது ஆண்டுகள் இருக்கும்.  இப்போது உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். 

என்னை அப்போது எல்லோரும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.  யாருக்குமே என் எழுத்து பிடிக்காது.  பகலில் எல்லோரும் சிநேகமாகத்தான் பழகுவார்கள்.  ஆனால் குடித்து விட்டால் மனத் தயக்கம் போய் விடும் இல்லையா, நீ எழுதுவது குப்பை என்று ஆரம்பித்து விடுவார்கள்.  இந்திரா பார்த்தசாரதி ஒருவரைத் தவிர வேறு யாருமே என் எழுத்தை அப்போது பாராட்டியது இல்லை.  என்னுடைய குருவாக நினைத்த அசோகமித்திரனுக்கே என் எழுத்து பிடிக்காது.  என் எழுத்து பற்றிய பேச்சு வந்தால் அருவருப்பு உணர்வுடன் முகத்தைச் சுளிப்பார் அசோகமித்திரன். 

அப்படிப்பட்ட சூழலில் என் எழுத்தைப் பாராட்டி மிகவும் உற்சாகப்படுத்தியவர் மா. அரங்கநாதன்.  முன்றிலில் நான் எழுதிய பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் என்ற சிறுகதையை முன்றிலைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையிலும் அப்போது வெளியிட்டிருக்க மாட்டார்கள்.  எனவேதான் சொல்கிறேன், ஐம்பத்தொன்பது வயதில் நிகழ்ந்த மா. அரங்கநாதனின் இலக்கியப் பிரவேசம் பல எழுத்தாளர்களுக்குப் பெரும் ஆசுவாசத்தையும் இளைப்பாறலையும் அளித்தது.

முன்றில் அப்போது ஒரு இயக்கமாகவே இருந்தது.  எந்த அரசியல் சார்பும் இல்லாமல், எந்த இலக்கியக் குழுவையும் சாராமல் மா. அரங்கநாதன் என்ற ஒரே ஒரு இலக்கியவாதியின் பெரும் ஆர்வத்தையும் அவரது புதல்வர் மகாதேவனின் உழைப்பையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கின முன்றில் பத்திரிகை, முன்றில் விற்பனைக் கூடம், முன்றில் பதிப்பகம் ஆகிய மூன்றும்.  இப்போது யோசித்துப் பார்க்கிறேன், எந்த தனவந்தர்களின் உதவியும் இல்லாமல் எப்படி இந்தத் தந்தையும் புதல்வரும் மட்டுமே அத்தனை பெரிய பொருளாதாரத் தேவையை சமாளித்தார்கள் என்று.  அரங்கநாதன் தன் வாழ்நாள் சேமிப்பையும் முன்றிலுக்காக செலவழித்திருக்க வேண்டும்.

முன்றிலுக்குப் பிறகு – முப்பது ஆண்டுகளாக – லிட்ரரி சலோன்களை நான் சென்னையில் தேடிக் கொண்டே இருக்கிறேன்.   இப்போது கே.கே. நகர் முனுசாமி சாலையில் ஒரு பிரம்மாண்டமான லிட்ரரி சலோன் தோன்றியிருக்கிறது.  வேடியப்பன் என்ற இலக்கியச் செயல்வீரர் மூலம்.  டிஸ்கவரி புக் பேலஸ் என்பது அந்த சலோனின் பெயர்.  தமிழில் வெளியாகிக் கொண்டிருக்கும் அத்தனை புத்தகங்களும் டிஸ்கவரியில் கிடைக்கிறது.  நாம் ஜவுளிக் கடல் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்?  கே.கே. நகர் முனுசாமி சாலை டிஸ்கவரி புக் பேலஸ் ஒரு புத்தகக் கடல்.  நுங்கம்பாக்கத்தில் அப்படி ஒரு புத்தக்க் கடல் இருந்த்து.  ஆனால் அது எனக்கு ஒரு அவமானகரமான இடமாகத் தோன்றும்.  ஏனென்றால், அங்கே ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே இருக்கும்.  எங்கோ ஒரு மூலையில் அம்பது தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும்.  தமிழ்வாணன், பாலகுமாரன், வைரமுத்து, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று.  தமிழ்நாட்டில் தமிழுக்கு அப்படி ஒரு அவலநிலை இருந்தது.        

டிஸ்கவரி புக் பேலஸின் மாடியில் ஒரு லிட்ரரி சலோன் உள்ளது.  கஃபேவும் இருக்கிறது.

பிரம்மாண்டமான இடம்.  கே.கே. நகர் முனுசாமி சாலை.  புத்தக வெளியீடு போன்ற கூட்டங்கள் நடத்தவும் விஸ்தாரமாக இடம் கிடக்கிறது.  தமிழ்கூறு நல்லுலகம் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  வேடியப்பனுக்கு என் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும்.