காலமும் வெளியும்…

நான்தான் ஔரங்ஸேப், தியாகராஜா, 1857, அசோகா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சாரு ஒரேயடியாக சரித்திரத்தின் பக்கம் போய் விட்டார்.  நிகழ்கால வாழ்வை எழுதிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது என்ன ஆனது?  ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து, பின்நவீனத்துவம், ஆட்டோஃபிக்‌ஷன் எல்லாம் எக்ஸைலோடு முடிந்து விட்டதா? இதற்கெல்லாம் காரணம், அவர் இப்போது பயணமே செல்வதில்லை.  மனிதர்களை சந்திப்பதே இல்லை.  கிட்டத்தட்ட கமல்ஹாஸன் மாதிரி எதார்த்த வாழ்விலிருந்து விலகி எங்கோ போய் விட்டார்.  கமலுக்கு சந்தான பாரதி சொல்லும் விஷயங்கள்தான் எதார்த்தம், அதேபோல் சாருவுக்கு அவர் நண்பர்கள் ரெண்டு மூணு பேர் சொல்லும் விஷயங்கள்தான் வாழ்க்கை, அந்த மூன்று பேரும் வேறு யாரும் அவரை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.  சாரு தனிமைப்பட்டுப் போய் விட்டார்.  இனிமேல் அவர் சரித்திரத்திடம்தான் தஞ்சம் அடைய வேண்டும்.  அவருக்கு வேறு வழியில்லை.

இப்படி என்னிடம் இரண்டு நண்பர்கள் சொன்னார்கள்.  இருவருமே என் மதிப்புக்கு உரியவர்கள்.  என்னிடம் சொன்னது மட்டும் அல்லாமல் ஒரு நண்பர் ஃபேஸ்புக்கிலும் எழுதினார். 

அதற்கு இத்தனை தாமதமாக பதில் சொல்கிறேன்.  காரணம், இன்று என் வாசகர் வட்ட நண்பர் ஒருவரும் இதே ரீதியில் என்னிடம் சொன்னார்.

நண்பர்களே, எனக்குக் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று எதுவும் இல்லை.  மனித மூளையின் சாத்தியங்கள் மிகவும் குறைவு.  அதை வைத்து காலம் என்ற பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  வெளி என்ற பிரம்மாண்டத்தைப் போலவே காலமும் ஒரு புதிர்தான்.  நீங்கள் முந்நூறு ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகள், ஐயாயிரம் ஆண்டுகள் என்று கணக்கிடுகிறீர்கள்.  ஆனால் காலத்தின் வயது நம் மனித மூளையால் அளவிட முடியாதது. 

நான் ஒரு படைப்பாளியாக நிகழ்காலத்தில் நிற்கவில்லை.  தரையிலிருந்து மேலே பறந்து கொண்டிருக்கும் பறவை நான்.  எனக்குக் கடந்த காலமும், நான் நின்று கொண்டிருக்கும் நிகழ் காலமும், எதிரே இருக்கும் காலமும் ஒன்றாகத் தெரிகிறது.  ஒரே நேர்க்கோட்டில் தெரிகிறது.  என்னைப் பொருத்தவரை தியாகராஜா ஒரு நிகழ்காலக் கதை. 

1857 – காதல், வன்முறை, துரோகம் எல்லாம் கலந்த ஒரு கதை.  அசோகா நாவலின் கதைக்குள் செல்லவும், அசோகரைப் புரிந்து கொள்ளவும் பின்நவீனத்துவமே எனக்கு உதவியது.  சரித்திரத்தை நான் பின்நவீனத்துவ வெளிச்சத்தில் அணுகுகிறேன்.  தியாகராஜா மட்டுமே விதிவிலக்கு.  அது ஒரு பக்தி இலக்கியம்.

மேலும், நான்தான் ஔரங்ஸேப்… நாவலை எழுத உதவிய நூல்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறேன்.  ஒரு ஐம்பது நூல்கள்.  இதில் சில புத்தகங்கள் 4000 பக்கங்கள் கொண்டவை.  தவிர, இன்னும் ஒரு ஐம்பது புத்தகங்கள் விடுபட்டு விட்டன.  இந்த நாவலை நான் ஆறு மாத்த்தில் எழுதினேன்.

ஒரு மேற்கத்திய எழுத்தாளர் இப்படி ஒரு நாவலை எழுத பன்னிரண்டு ஆண்டுகள் எடுத்திருப்பார்.  ஆக, இன்னும் பதினொன்றரை ஆண்டுகளுக்கு நான் வைன் அருந்தியபடி ஓய்வில் இருக்கலாம். 

தமிழ் எழுத்தாளனுக்கு மட்டுமே உலகில் இப்படி ஒரு சிலுவை சுமத்தப்பட்டிருக்கிறது.  எந்த ஒரு மேற்கத்திய எழுத்தாளனை எடுத்தாலும் ஐந்து ஆறு நாவல்கள்தான் எழுதியிருக்கிறான்.  ஆனால் இங்கே நாங்கள் அ-புதினங்கள் என்று இருநூறு முந்நூறு புத்தகங்கள் என்று எழுத வேண்டியிருக்கிறது.  புதினங்கள் என்றால் கோடி பக்கங்கள்.  சாமியோவ்!

நான் எழுத வேண்டியதையெல்லாம் எழுதி முடித்து விட்டேன்.  இனி எழுதுவதெல்லாம் போனஸ் மட்டுமே. 

மட்டுமல்லாமல் இப்போதைய நிகழ்கால வாழ்வை நான் வெறுக்கிறேன்.  நான் எழுதும் தகுதி இன்றைய நிகழ்கால வாழ்வுக்கு இல்லை. 

சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருந்த போது தி.ஜானகிராமனும், கு.ப. ராஜகோபாலனும் ஆண் பெண் உறவு பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள்.  சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை.  அதைப் போலவேதான் இப்போது எனக்கு முன்னே இருக்கும் எதார்த்த வாழ்வை நான் புறக்கணிக்கிறேன்.  அதுவும் எப்படி?  நாற்பது ஆண்டுகள் சமகால வாழ்வை எழுதிய நான் என் எழுபதாவது வயதில் சமகால வாழ்வைப் புறக்கணிக்கிறேன்.  ஸீரோ டிகிரி நாவலில் கைபேசி மூலம் நடக்கும் சாட்டிங் பற்றி எழுதினேன்.  அப்போது யார் கையிலும் கைபேசி இல்லை.  எதிர்காலத்தை முன்னறிவித்தேன்.  ராஸ லீலாவில் இண்டர்நெட் சாட்டிங் பற்றி நூறு பக்கங்கள் எழுதினேன்.  அது இன்றைய எதார்த்தமாக ஆகியிருக்கிறது.  இப்படியெல்லாம் இன்றைய எதார்த்தத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதியவன் நான்.  இப்போது காலத்தில் பின்னே செல்கிறேன். 

புரிந்து கொள்ளுங்கள்.  எனக்கு அறிவியல் புனைவு எழுத்த் தெரியாது.  தெரிந்திருந்தால் முன்னேதான் பாய்ந்திருப்பேன். மேலும், கடந்த காலம் என்றெல்லாம் எதுவுமே இல்லை.  ஔரங்ஸேப் கதை இப்போதைய மோடியின் கதைதான்.  இன்றைய காலகட்டத்தின் நாவல் அது.  சரித்திரம் திரும்பத் திரும்ப அலுப்பூட்டும் அளவுக்கு ஒரே மாதிரி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.   

மேலும், பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் சூப்பர் ஸ்டாரான உம்பர்த்தோ எக்கோ எழுதிய நாவல்கள் அனைத்தும் சரித்திரப் பின்னணி கொண்டவைதான்.  எதுவுமே நிகழ்காலப் புனைவுகள் அல்ல.

நான் சொல்வதில் தவறு இருந்தால் எழுதுங்கள். விவாதிப்போம்…

charu.nivedita.india@gmail.com