மூன்று கோமிய பாட்டில்களை அப்புறப்படுத்த முயன்றது பற்றிய ஒரு நிகழ்காலக் குறுங்கதை

ஆஹா, சரித்திரத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்து விட்டேன்.  இல்லாவிட்டால் என்னை கல்கி, சாண்டில்யனோடு சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது.  சரி, கதையைப் பார்ப்போம்.

இந்தூரிலிருந்து வருகிறது அந்தக் கோமிய பாட்டில்கள்.  உடைந்து விடாமல் பக்காவாகத்தான் பார்சல் பண்ணி அனுப்புகிறார்கள்.  என்னுடைய ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் சீராக வைத்திருப்பதற்காக இந்தக் கோமியம்.  ஒரு மிருகத்தின் கழிவு எப்படி மருந்தாக முடியும் என்று கேட்டான் வினித்.  அ.மார்க்ஸின் நண்பன் இல்லையா, அப்படிக் கேட்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.  ”பசு மட்டும் அல்ல, ஆயுர்வேதத்தில் இப்படி பல மிருகங்களின் மூத்திரம் கலந்து இருக்கிறது.  கழுதை மூத்திரம் உட்பட”  என்றேன்.  குடிக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும்.  அநேகம் பேரால் இதைக் குடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. 

ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில்கள் ஆகின்றன.  ஒன்றரை மாதமாகக் குடிக்கிறேன்.  அப்படியானால் மூன்று பாட்டில்கள்.  இந்த பாட்டில்களை எப்படி அப்புறப்படுத்துவது?  இதெல்லாமா ஒரு பிரச்சினை, குப்பைப் பையில் போட்டு கட்டி குப்பைத்தொட்டியில் போட வேண்டியதுதானே என்பீர்கள்.  அது எனக்குத் தெரியாதா? அவந்திகா இப்போது ஊரில் இல்லை.  இப்போது இந்த பாட்டில்களை குப்பைக் கூடையில் போட்டால் இதை எடுத்துக் கொண்டு போகும் வாட்ச்மேன்கள் நான் குடிக்கிறேன் என்று நினைத்து விடுவார்கள்.  அவர்கள் நினைத்தால் நமக்கு என்ன, இதெல்லாமா ஒரு பிரச்சினை என்பீர்கள்.  இதுதான் பிரச்சினை. 

மெட்றாஸ் வாட்ச்மேன்களிடம் மட்டும் நாம் எதுவுமே வைத்துக் கொள்ளக் கூடாது.  இதற்கு முன்பு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எங்கள் வீட்டுக்கு மேலே இருந்த தளத்தில் ஷ்யாமி என்று ஒரு பெண்மணி இருந்தார்.  ஊரில் உள்ள வங்கிகளிடமிருந்தெல்லாம் கடன் வாங்கி விடுவார் போல.  வாரம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு வங்கியிலிருந்து அடியாள் மாதிரி ஆட்கள் வந்து ஷ்யாமி ஷ்யாமி என்று கத்துவார்கள்.  ஷ்யாமியின் கையாட்களான வாட்ச்மேன்கள் மேடம் ஊரில் இல்லை என்று சொல்லி அந்தத் தடியர்களை அனுப்பி விடுவார்கள்.   ஒருநாள் ஷ்யாமி ஒரு வாட்ச்மேனிடம் முறைத்துக் கொண்டாள் போல, அந்த வாட்ச்மேன் ஷ்யாமியைப் போட்டுக் கொடுத்து விட்டார்.  மேல்தளத்தில் பெரிய கலாட்டா நடந்தது.   

எனக்கு வேறு எதிரிகள் பலர் இருப்பதால் யாராவது வீடு தேடி அடிக்க வந்தால் வாட்ச்மேன்களே காட்டிக் கொடுப்பார்கள்.  அவர்களிடம் வம்பு வைத்துக் கொண்டால்.  அவந்திகாவுக்கு அவர்களிடம் வம்பு வைத்துக் கொள்வது அல்வா சாப்பிடுவது மாதிரி.  கேட்டால் அவர்கள்தான் வம்பு பண்ணுகிறார்கள் என்பாள்.  ஒருநாள் ஒரு வாட்ச்மேன் அவந்திகாவிடம் பூனைப் பீ நாறுகிறது, அதை எடு என்று ஒருமையில் சொல்லி விட்டார்.  ஒரே தகராறு.  அவந்திகாதானே பூனைகளுக்கு உணவு போடுகிறாள், அதனால் ஏற்பட்ட வம்பு.

சரி, இதற்கும் அந்தக் கோமிய பாட்டில்களுக்கும் என்ன சம்பந்தம்?  குப்பைப் பையில் பாட்டில்கள் இருப்பது தெரிந்தால், நீங்கள் என்ன சரக்கு சார் குடிப்பீர்கள் என்பார்கள் வாட்ச்மேன்கள்.  இல்லை, இது கோமியம் என்றால், அந்தக் கோமிய சமாச்சாரம் குடியிருப்பு முழுவதும் பரவும்.  ஆள் ஆளுக்குக் கேள்வி கேட்பார்கள்.  இல்லை என்று வேறு ஏதாவது காரணம் சொன்னால், குடித்து விட்டு அதை மறைக்கிறேன் என்று வதந்தி பரவும். 

எதற்குப் பிரச்சினை என்று வேளச்சேரியில் இருக்கும் சீனி அலுவலகத்துக்கு ஒரு பயணப் பையில் பாட்டில்களை வைத்து எடுத்துக் கொண்டு போனேன்.  அவரிடம் கொடுத்து விட்டால் அவர் அதை அப்புறப்படுத்தி விடுவார். 

விஷயத்தைச் சொன்னதும் சீனி பகர்ந்ததாவது:

எனக்கு வரும் கோபத்தில் நம்முடைய நட்பையே முறித்திருப்பேன்.  ஆனாலும் ஒருமுறை நீங்கள் “என்னோடு பழகுபவர்கள் எல்லாம் கொஞ்ச காலத்திலேயே ஓடி விடுகிறார்கள், அப்படி நீங்கள் செய்யக் கூடாது” என்று சொல்லி, முண்டக்கண்ணி அம்மன் கோவிலில் வைத்து சத்தியம் வாங்கியிருப்பதால் பொறுத்துக் கொள்கிறேன்.  ஏங்க சாரு, சாந்தோமிலிருந்து வேளச்சேரி வரும் வழியில் ஒரு குப்பைத்தொட்டி கூடவா கிடைக்கவில்லை?  அட்ராஷியஸ்.  இது கூடப் பரவாயில்லை.  இந்த ஒளியைப் பாருங்கள்.  அவர் கொண்டு வந்த இந்த சாக்கு மூட்டையைப் பாருங்கள்.  உள்ளே முழுக்க பாட்டில்கள்.  என்னிடம் கொண்டு வந்து கொடுத்து இதையெல்லாம் தயவுசெய்து டிஸ்போஸ் செய்து விடுங்கள் என்கிறார்.  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம்?  நம்முடைய ஆவணப்படத்துக்கு நானே காரோட்டி, நானே ப்ரொடக்‌ஷன் மேனேஜர், நானே லைட்பாய். இப்போது நானே துப்புரவுப் பணியாளனாகவும் பணியாற்ற வேண்டுமா?

(ஒளி எங்களின் ஒளிப்பதிவாளன்.) சீனி அப்படி வெடித்ததும்தான் எனக்கே என் தவறு புரிந்தது.  வழியில் குப்பைத்தொட்டி இருந்ததுதான்.  ஆனால் நான் வந்த கார் ஒரு பிரபல நண்பருடையது.  அவருடைய காரோட்டியிடம் காரை நிறுத்தச் சொல்லி குப்பைத்தொட்டியில் பாட்டில்களைப் போடும் போது அந்தக் காரோட்டியும் என்னைக் குடிகாரன் என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது.  மேலும், அந்தக் காரை அப்படியெல்லாம் குப்பைத்தொட்டியின் அருகே நிறுத்த முடியாது.  எல்லோரும் பார்க்கக் கூடிய அளவுக்கு சில அடையாளங்களைக் கொண்டிருந்த கார் அது.    

இத்தனைக்கும் என் வீட்டுக்கு எதிரிலேயே ஒரு குப்பைத்தொட்டி இருக்கிறது.  ஆனால் அங்கேயும் போட முடியாது.  நாங்கள் போடுகிறோம் என்று குப்பைப் பையை வாட்ச்மேன்கள் நம் கையிலிருந்து பிடுங்கிக் கொள்வார்கள்.  குட்டு உடைந்து விடும்.

வேளச்சேரியிலிருந்து திரும்பி வந்து மூன்று கோமிய பாட்டில்களையும் பழையபடியே அலமாரியில் வைத்து விட்டேன்.  இனிமேல்தான் இவற்றை அப்புறப்படுத்த வேறு ஏதாவது நல்ல வழி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். இல்லாமலா போய் விடும்?