சைவம் அசைவம்…

சைவ உணவுக்காரர்களோடு சேர்ந்து உணவகத்துக்குச் செல்வது ஒத்து வராது போல் இருக்கிறது.  கடந்த இரண்டு வாரமாக மிக மோசமான அனுபவங்கள்.  சென்ற வாரம் ஒரு நண்பர் என்னை மதிய உணவுக்கு அழைத்தார்.  அவந்திகா இல்லாமல் வீட்டில் தனியாகக் கிடக்கிறேன் என்று எழுதியிருந்ததைப் பார்த்து அழைத்தார் போல.  பல நூற்றாண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இவர் மட்டும் அசைவமும் சாப்பிடுவார். 

நான் அவரை அலுவலகத்தில் சந்தித்த போது அவர் அவராகவே இல்லை.  அந்த அளவுக்கு வேலை.  அவர்தான் தலைமைப் பொறுப்பு வேறு.  காலையில் எட்டு மணிக்கு வந்து இரவு எட்டு மணிக்குத்தான் கிளம்புகிறேன் என்றார்.  அட்டா, இத்தனை பிஸி என்று தெரிந்திருந்தால் வந்திருக்க வேண்டாமே என்று நினைத்துக் கொண்டேன்.  அவந்திகா வத்தக் குழம்பு, காரக் குழம்பு, மீன் குழம்பு, கறிவேப்பிலைப் பொடி, சுண்டக் காய்ப் பொடி, இஞ்சித் தொக்கு என்று ஒரு பத்துப் பதினைந்து நாட்களுக்கு சமைத்து வைத்து விட்டுப் போயிருந்தாள். 

சைவமா அசைவமா எங்கே போகலாம் என்றார் நண்பர்.  ஓட்டலில் சைவம் சாப்பிட்டால் எனக்கு வயிற்று வலி வந்து விடுகிறது, அதனால் அசைவம்தான் சாப்பிட முடியும் என்றேன்.  அப்படியானால் எங்கே போகலாம், உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டார்.

எனக்கு தாய் உணவு, ஜப்பானிய உணவுதான் பிடிக்கும்.  நம் தமிழ்நாட்டு அசைவ உணவு சென்னையில் நன்றாக இருக்காது.  ஆனால் இப்போது நமக்கு சாய்ஸே இல்லை, ஜப்பானிய, தாய் உணவுக்கெல்லாம் போனால் திரும்பி வர நான்கு மணி ஆகி விடும்.  உங்களுக்கு வேலை கெட்டு விடும்.  எனவே எது பக்கத்தில் இருக்கிறதோ அங்கே போகலாம் என்றேன். 

எனக்கு அப்போதே தெரிந்து விட்டது, இன்று ஒரு கொடூரமான அனுபவம் காத்திருக்கிறது என்று.  ஏனென்றால், சென்னையில் நீங்கள் வெளியில் எங்கேயுமே சைவம், அசைவம் இரண்டுமே சாப்பிட முடியாது.  மனிதர்கள் சாப்பிடவே லாயக்கு இல்லாதபடிதான் சமைக்கிறார்கள்.  நல்ல சாப்பாடு வேண்டுமானால் பார்க் ஷெரட்டன் தக்ஷிணுக்குப் போக வேண்டும்.  அங்கே ஒரு சாப்பாடு விலை 2500 ரூ.  இதெல்லாம் ஆகிற கதையா?  அதிலும் தக்ஷிணில் இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.  அத்தனை கூட்டம்.  தக்ஷிணில் சைவம் அசைவம் இரண்டுமே அற்புதமாக இருக்கும்.  ஆனால் மோர் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் ஒரு அற்புதமான மோர்.  விலை 500 ரூ.  அது சாப்பாட்டோடு சேர்த்தி இல்லை.  தனி. 

சென்னை அசைவ உணவகங்களும் சைவ உணவகங்கள் போலவே படு தண்டம்.  அதிலும் காரைக்குடி, செட்டிநாடு போல் ஊர்ப் பெயர்களைத் தாங்கிய உணவகங்கள் கொடூர அனுபவம் தரக் கூடியவை.  நண்பர் என்னை கௌடியா மடம் இருக்கும் தெருவில் உள்ள பொன்னுசாமி உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.  உள்ளே நுழைந்ததும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொன்னுசாமி உணவகம் பற்றி எழுதிய பாடலைப் பொறித்திருக்கிறார்கள்.  மகிழ்ச்சியாக இருந்தது.  சென்னையின் பெருமைகளில் ஒன்றான மெரீனா பீச்சோடு ஒப்பிட்டு பொன்னுசாமியை எழுதியிருந்தார் பட்டுக்கோட்டை. 

பொதுவாக இம்மாதிரி மேட்டுக்குடி உணவகங்களுக்குப் போகும் போது (ஆம், பொன்னுசாமி இப்போது மேட்டுக்குடி உணவகம்) இரண்டு பேரும் சேர்ந்து உண்ணும்படி இருக்க வேண்டும்.  உதாரணமாக, ஒருத்தர் சைவம், இன்னொருத்தர் அசைவம் என்றால், ஆளுக்கு ஒரு ஐட்டம் ஆர்டர் கொடுத்தால் இரண்டு ஐட்டமுமே மூன்று மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு வைப்பார்கள்.  ஏனென்றால், ஐட்டமெல்லாம் அத்தனை விலை.  உதாரணமாக, நண்டு என்று சொன்னால் அதன் விலை 400.  ஆனால் மூன்று பேர் சாப்பிடும்படி இருக்கும்.  இதன் காரணமாகவே நான் எங்கே போனாலும் மூன்றில் ஒரு பங்கைச் சாப்பிட்டு விட்டு இரண்டு பங்கை அப்படியே வைத்து விட்டு வருவது வழக்கம்.  அதையே அன்றைய தினமும் செய்ய மனம் வரவில்லை.   

பரவாயில்லை, மீதி இருந்தால் நாம் எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று தைரியம் சொன்னார் நண்பர்.  நீங்களும் அசைவத்துக்கு மாறியிருப்பதால் நாம் இருவரும் ஒரே கறி சொல்வோம் என்றேன்.  ஆனால் நண்பர் முதல் தலைமுறையாக அசைவத்துக்கு வந்தவர்.  சைவ மரபு அணுவிலிருந்து வந்தவர்.   அப்படிப்பட்டவர்கள் மீன் சாப்பிட மாட்டார்கள் என்பதை நான் அவதானித்திருக்கிறேன்.  (சீனி மட்டும் இதிலும் விதிவிலக்கு).  நண்பரும் அதேபோல் கடல் உணவு சாப்பிட மாட்டார் என்று அப்போதுதான் தெரிந்த்து. 

பரவாயில்லை, மீதி இருந்தால் எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று மீண்டும் சொன்னார் நண்பர்.  அவர் சிக்கன் சொன்னார்.   நான் சிக்கனைத் தொடவே மாட்டேன்.  கோழியை வளர்ப்பதற்கு மிக அதிகமான ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள்.  நாமக்கல் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் யாருமே சிக்கன் சாப்பிட மாட்டார்கள் என்பதை கவனியுங்கள்.  காரணம், இந்த ரசாயனம்தான். 

மிருகாபிமானம் காரணமாக ஆடும் சாப்பிட மாட்டேன்.  கடல் உணவு மட்டும்தான்.  நான் நண்டு சொல்லலாமா என யோசித்தேன்.  பணியாளரிடம் மேலே எழுதியதையெல்லாம் விளக்கி விட்டுக் கேட்டேன்.  ஏனென்றால், வழக்கம் போல் நண்டு நானூறு ரூபாய் என்று கண்டிருந்தது.  ஒருத்தர் அவ்வளவு சாப்பிட முடியுமா என்று கேட்டேன்.  நண்பர் கடல் உணவு சாப்பிட மாட்டார் என்று பணியாளரிடம் விளக்கினேன்.  பணியாளர் “கம்மியாகத்தான் இருக்கும், ஒருத்தர் சாப்பிடலாம்” என்று உறுதியளித்தார்.

நண்பர் அப்போதும் “மீதி இருந்தால் எடுத்துக் கொண்டு போய் விடலாம், ஒரு பிரச்சினையும் இல்லை” என்று மூன்றாவது முறையாகச் சொன்னார். 

நண்டும் ஒரு மீல்ஸும் ஆர்டர் கொடுத்தேன்.  நண்பர் மதிய உணவே சாப்பிடுவதில்லையாம்.  காலையில் ஃபுல் மீல்ஸ்.  இரவு டிஃபன்.  மதியம் ஒன்றுமில்லை.  அடக் கடவுளே, அப்படிப்பட்ட ஆளையா அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம்?  தஸ்தயேவ்ஸ்கியின் An ugly incident கதை ஞாபகத்தில் வந்து போனது.  நண்பர் ஒரு ரொட்டியும் சிக்கன் கறியும் சொன்னார்.

சிக்கன் கறியை மூவர் சாப்பிடலாம்.  நண்டு எருமைத் தலை சைஸில் வந்தது.  அதன் நீண்ட கால்கள் எருமையின் கொம்புகளைப் போல் இருந்தன.  நான் அதைத் தொட்டுக் கூட பார்க்கவில்லை.  அப்படியே பார்சல் கட்டுங்கள் என்று சொல்லி விட்டேன்.

எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை என மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.  நண்டு என்றால் சின்னதாக இருக்க வேண்டும்.  இந்தப் பெரிய நண்டில் சுவையே இல்லாத வெறும் கறிதான் இருக்கும்.  இதை விடப் பெரிய நண்டெல்லாம் மலேஷியாவில் உண்டு என்றார் நண்பர்.  எனக்கு அந்த விவரம் ரசிக்கவில்லை.  உணவகப் பணியாளர் என்னை ஏமாற்றி விட்டார்.  நண்பருக்கு அசைவ உணவகங்கள் பற்றி எதுவுமே தெரியவில்லை.  மட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான நண்பர்களையெல்லாம் இங்கேதான் வழக்கமாக அழைத்து வருவதாகவும் சொன்னார். 

எருமைத் தலை நண்டு தவிர சோறோடு வந்த மீன் குழம்பு, கறிக் குழம்பு, சிக்கன் குழம்பு எல்லாமே சேறு போல் இருந்தன.  எதுவுமே சோற்றில் ஊற்றிக் கொள்வது போல் திரவமாக இல்லை.  எல்லாமே சேறு.  எல்லாமே களி போல் இருந்தன.  மேட்டுக்குடி உணவகங்களில் இப்படித்தான் குழம்பு செய்கிறார்கள்.  இன்னொரு நண்பர் சொன்னார் என்று நேற்று க்ரஸெண்ட் உணவகத்திலிருந்து மீன் குழம்பு வரவழைத்தேன்.  அதுவுமே பொன்னுசாமி போல் சேறு மாதிரி, களி மாதிரிதான் இருந்தது.  ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்புப் போட்டு சுட வைத்துக் கொண்டேன்.  அப்புறம்தான் சோற்றில் ஊற்றிக் கொள்ள முடிந்தது.

பொன்னுசாமியின் ஐட்டங்கள் எல்லாம் களி போல் இருந்தது மட்டும் இல்லை.  வாயிலேயே வைக்க முடியவில்லை.  அத்தனை கேவலமான ருசி.  சத்தியமாக பட்டுக்கோட்டை இதைப் பாராட்டிப் பாடல் எழுதவில்லை.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் உண்ட உணவை பொன்னுசாமியின் வாரிசுகள் இப்போது தயாரிக்கவில்லை.  இது குப்பை.  ஆனாலும் இன்றைய சென்னைவாசிகளுக்கு இந்தக் குப்பைதான் பிடித்திருக்கிறது.  வரிந்து கட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

நான் கொலைவெறியிலும் பசியிலும் தட்டில் இருந்த சோற்றை உண்ண விருப்பமில்லாமல் அளைந்து கொண்டிருந்தபோது நண்பர் பணியாளரை அழைத்து ”சாருக்கு ரைஸ் போடுங்க” என்றார்.  சரிதான், தஸ்தயேவ்ஸ்கியின் கதையேதான் என்று நினைத்துக் கொண்டேன்.  சோற்றைப் போட்டு எதை ஊற்றிக் கொள்வது?  எல்லாமேதான் சேறு மாதிரியும், வாயிலேயே வைக்க முடியாததாகவும் இருக்கிறதே?  சோற்றை எடுத்துக் கொண்டு வந்த பணியாளரிடம் சைகையாலேயே வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.

எனக்கு அது பிடிக்காத பழக்கம்.  நம் தட்டுக்கு நம் நண்பரோ வேறு யாருமோ பரிமாறுவது அல்லது கவனம் எடுத்துக் கொண்டு பரிமாறச் சொல்வது.  அது என் உணவுச் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்வது போல் இருக்கும்.  நீங்கள் என் மீது காட்டும் அக்கறை அப்படி இருக்கக் கூடாது.  எனக்கு அது அத்துமீறல்.  என்னால் நிம்மதியாகச் சாப்பிட முடியாது.  எனக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று எனக்குத்தானே தெரியும்?

இப்படித்தான் நண்பர்களின் வீட்டுக்குப் போனால், ஏதாவது ஒரு பிடிக்காத ஐட்டம் இலையில் இருக்கும்.  அதை முதலில் காலி பண்ணுவோம் என்று காலி பண்ணுவேன்.  உடனே அதுதான் எனக்குப் பிடிக்கிறது என்று நினைத்துக் கொண்டு அதை இரண்டு மடங்காக அள்ளி வைப்பார்கள். 

அதேபோல் இரண்டு இட்லி வைத்து விட்டு, அதை சாப்பிட்டு முடித்ததும் ”இன்னோரு இட்லி?” என்று கேட்பார்கள் சில அம்மணிகள்.  எனக்கு அப்போது இன்னும் நாலைந்து இட்லி வேண்டும் போல் இருக்கும்.  ஒரு இட்லிக்கே அப்படி ஒரு கேள்வி.  

எது சிறப்பான பரிமாறுதல் என்றால், பண்டங்களை மேஜையில் வைத்து விட்டு நகர்ந்து விடுவதுதான்.  அப்போதுதான் நம் விருப்பப்படி எடுத்துப் போட்டு சாப்பிட முடியும்.  அதனால் நண்பர் பரிசாரகரிடம் “சாருக்கு ரைஸ் வைங்க” என்று சொன்னதை நான் ரசிக்கவில்லை. 

அன்றைய தினம் இருவருக்கான கட்டணம் 2000 ரூ. ஆயிற்று.  நான் முழுப் பட்டினி.  ஆட்டோவில் திரும்பும் போது நண்டு பார்சலை ஆட்டோக்கார்ரிடம் கொடுத்து விட்டேன்.

மூன்று தினங்களுக்கு முன்பு மற்றொரு நண்பர் என்னை மதிய உணவுக்கு அழைத்துப் போனார்.  அசைவத்துக்குப் பேர் போன சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் சைவம்.  மேலே கண்ட கதையையெல்லாம் சொன்னேன்.  பேசாமல் தாய் உணவு அல்லது ஜப்பானிய உணவகம் போகலாம் என்றேன்.  ஆனால் அடையாறில் அவர் நண்பர் ஒருவர் செஃப்பாகப் பணியாற்றும் உணவகம் ஒன்று உள்ளது என்று அங்கே அழைத்துப் போனார்.  உணவக உரிமையாளரும் நண்பர்தான். 

போகும்போதே மேட்டுக்குடி சைவ உணவகங்கள் பற்றித் திட்டிக் கொண்டே போனேன்.  பனீர் என்ற ஒரு பண்டத்தைக் கொடுத்து சாகடிக்கிறார்கள், அதைப் பார்த்தாலே எனக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது, தின்று விட்டு வாந்தியெல்லாம் எடுத்திருக்கிறேன் என்று புலம்பிக் கொண்டே போனேன்.  நண்பர் சைவம் என்றாலும் தனக்கும் பனீர் பிடிக்காது என்றார்.  அவரோடு ஒருமுறை காதர் நவாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.  அது ஒரு நல்ல அனுபவம்.  அதனால் நண்பர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. 

ஆனால் அடையாறில் நாங்கள் சென்ற அந்த மேட்டுக்குடி உணவகம் சைவம்.  முதலில் வந்தது சூப்.  பருப்பை வெந்நீரில் கலக்கியிருந்தார்கள்.  வாந்தி வந்தது.  அடக்கிக் கொண்டேன்.  அடுத்து வந்தது பனீர்.   அப்படியே ஒதுக்கி வைத்து விட்டேன்.  மீண்டும் வந்தது இன்னொரு விதமான பனீர்.  அதையும் ஒதுக்கி விட்டேன்.  அடுத்து வந்தது தாலி.  எதிலுமே நான் கடுகு அளவு கூட சாப்பிடவில்லை.  எல்லாவற்றிலுமே கொஞ்சம் கொஞ்சம் சர்க்கரை போட்டது போல் இனிப்பு.  உவ்வே. 

ஆனால் அவந்திகாவுக்கு அந்தச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். 

அன்றைய தினமும் பட்டினி.  பொன்னுசாமியில் அசைவப் பட்டினி.  இங்கே அடையாறில் சைவப் பட்டினி. 

ஆனாலும் சென்னையில் ஒரு மகா அற்புதமான சைவ உணவகம் வந்துள்ளது.  தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு.  ஒரு சாப்பாட்டின் விலை 1400 ரூ.  பாட்டி வீடு என்பது உணவகத்தின் பெயர்.  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிராமண வீட்டில் பாட்டிகள் எப்படி சமைத்தார்களோ அதே சமையல்.  என் மனைவி அவந்திகா சென்னையில் பிரபலமான பட்டப்பாவை விட நன்றாக சமைப்பாள்.  சைவம் அசைவம் இரண்டிலுமே அவளை அடிக்க ஆள் இல்லை, என் அனுபவத்தில்.  பாட்டி வீடு கிட்ட்த்தட்ட அவந்திகா சமையல் போல் இருந்த்து.  அற்புதம்.  சாப்பிட்டு முடித்து விட்டு வெற்றிலை கொடுத்தார்கள்.  எங்கேயிருந்துதான் அந்த வெற்றிலையைக் கொண்டு வந்தார்களோ, தேன் தேன்.  கும்பகோணம் கொழுந்து வெற்றிலை என்றால் இதுதான்.

எல்லாம் முடித்து விட்டு ஃபில்டர் காஃபி.  எப்பேர்ப்பட்ட சூர்ர்களும் காஃபியில் தோற்றுப் போவார்கள்.  அவந்திகா காஃபி போட மாட்டாள்.  பாட்டி வீட்டுக் காஃபி போல் நான் எங்குமே குடித்த்தில்லை.  என்னால் கூட அப்படிப்  போட முடியாது.

இன்று அதே பாட்டி வீட்டுக்கு அருணாசலத்துடன் சென்றேன்.  நிறைய சாப்பிட முடியாது என்று four course meals சொன்னோம்.  இந்தச் சாப்பாடு 800 ரூ. 

Seven course meals இல் எனக்கு அன்றைய தினம் கிடைத்த்து

பானகம்

திராட்சை ஜூஸ்

ஆப்பிள் தக்காளி ஜூஸ்.

மணத்தக்காளி வடை (எட்டு)

பிடி கொழுக்கட்டை (தொட்டுக் கொள்ள புளி மிளகு.  இந்தப் புளி மிளகு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்த்து.  இப்போது யாருக்கும் தெரியாது)

தானியச் சுண்டல்

கொள்ளு தோசையும் சட்னியும்

திணைப் பொங்கலும் கொத்சுவும்

அடுத்து வந்த்து கலந்த சாதம்

மாங்காய் சாதமும் வெள்ளரிப் பச்சடியும்

வேப்பம்பூ ரசம்

அடுத்து மெயின் சாப்பாடு

தேங்காய்த் துகையல்

சோறு

வறுத்த உருளைக் கிழங்கு

சௌசௌ கூட்டு

பொடி சாம்பார்

முட்டைக் கோஸ் பட்டானி பொரியல்

மிளகு ரசம்

வாழைத்தண்டு பொரியல்

கீரை பருப்பு கூட்டு

தயிர் சாதம்

சேமியா பேரிச்சை பாயசம்

பூந்தி லட்டு

பருத்திப் பால் ஹல்வா

வெற்றிலைப் பாக்கு

ஃபில்டர் காஃபி அல்லது டீ.

எல்லாமே உச்ச பட்ச ருசி.

இன்று அதே பாட்டி வீட்டில் எல்லாமே தலைகீழ். எடுத்தவுடன் திராட்சை ஜூஸ்.  அடுத்து பாயசம்.  அடுத்து சாப்பாடு.  சாம்பார் சாம்பார் போல் இல்லை.  ரசம் ரசம் போல் இல்லை.  தொட்டுக் கொள்ள ரெண்டு மூணு ஐட்டம்.  அதோடு சரி. வெற்றிலைப் பாக்கு ரெண்டு ரூபாய் இருக்கும்.  அது கூட தரவில்லை.  கன்னத்திலேயே பளார் என்று கொடுத்து விரட்டி விட்ட்து போல் இருந்த்து. 

நாளை பாட்டி வீட்டு ஓனரிடம் பேசலாம் என்று இருக்கிறேன்.  ஃபோர் கோர்ஸ் மீல்ஸ் சரவண பவன் சாப்பாட்டை விட மோசமாக இருந்த்து.  மீண்டும் இங்கே வராதீர்கள் என்று சொல்வது போல் இருந்த்து.  செவென் கோர்ஸ் மீல்ஸுக்கும் ஃபோர் கோர்ஸ் மீல்ஸுக்கும் இத்தனை வித்தியாசமா?  ஏன் பாட்டி, ஒரு வெற்றிலைப் பாக்கு கூடவா கொடுக்கி மாட்டீர்கள்?  நூறு ரூபாய் வாங்கும் ரோட்டுக் கடையில் கூட பீடா என்று ஒன்றைக் கொடுப்பார்களே?

இன்று அடைந்த அனுபவத்திற்கு இனியொரு முறை அங்கே போவேனா என்று தெரியவில்லை.

ஆனால் பாட்டி வீட்டில் சாப்பிட்ட செவன் கோர்ஸ் மீல்ஸ் போல் நான் வெளியில் எங்கேயுமே சாப்பிட்டதில்லை என்று உறுதியாகச் சொல்லுவேன்.