த அவ்ட்ஸைடர்… (1)

சில தினங்களுக்கு முன்னால் த அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக பார்க் ஷெரட்டன் வரச் சொன்னார் சீனி.  பார்க் ஷெரட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பார்தான் ஒரு காலத்தில் என் வீடாக இருந்தது.  எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு என்றெல்லாம் ராஸ லீலாவை வைத்துக் கணக்குப் போட்டு ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டும்.  ஆனால் இருபது ஆண்டு காலம் இருக்கும்.  எப்போது அங்கே போவதை நிறுத்தினோம் என்று ஞாபகம் இருக்கிறது.  ஞாபகம் என்ன ஞாபகம்?  அந்த சம்பவத்தை இந்தியர் யாரும் மறந்திருக்க முடியாது. நாங்கள் பார்க் ஷெரட்டன் செல்வதை நிறுத்தியது 2008 டிசம்பரில்.  எப்படி இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த ஆண்டு நவம்பரில்தான் மும்பை தாஜ் ஓட்டலில் குண்டு வெடிப்பு நடந்தது.  அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நட்சத்திர விடுதிகளின் போக்கு மாறி விட்டது.  எல்லோரையும் சோதிக்க ஆரம்பித்தார்கள்.  வாகனங்களையும், உடலையும், கைப்பைகளையும்.  ”வாகனத்தை சோதித்துக் கொள், ஆட்சேபணை இல்லை.  என் சட்டையில் எப்படி நீ கை வைக்கலாம், இது என்ன விமான நிலையமா, பார்க் ஷெரட்டன் என்பது என் வீடு அல்லவா?” என்று கேட்டார் மணி. 

அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. இருபது ஆண்டுகளாக வாரம் இரண்டு முறை நாங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் செல்கிறோம்.  ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் குடித்தோம், சாப்பிட்டோம்.  எப்போதும் நாலு பேர் இருப்போம்.  மணி, நான், பாலு ஐஏஎஸ், யாராவது இன்னொரு நண்பர்.  பத்தாயிரம் என்பதே கம்மி.  பதினைந்தாயிரம் கூட ஆகும்.  ஏனென்றால், நான் குடிப்பதோடு இல்லாமல் தக்ஷிணிலிருந்து கபாப் மாதிரி ஏதாவது தீனியும் வரவழைத்துத் தின்பேன்.  பல சமயங்களில் தீனி தின்று விட்டுத்தான் குடிக்கவே ஆரம்பிப்பேன்.

என்னைப் போல் உலகில் யாருமே வாழ்ந்திருக்க மாட்டார்கள்.  வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் நான் நுழைவதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று நாள் சாப்பிடாமல் கொலைப் பட்டினி கிடந்திருப்பேன்.  பத்து ஆண்டுகளும் அப்படி இல்லை.  அவந்திகாவை சந்திப்பதற்கு முன் நான் அப்படித்தான் வாழ்ந்தேன்.  அதையெல்லாம் விளக்க முடியாது.  சட்டச் சிக்கல் வரும்.  என் புதினங்களையும் கட்டுரைகளையும் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

அழுகல் தக்காளிகளை உண்டு உயிர் வாழ்ந்தேன்.  நண்பர்கள் வாங்கி வரும் அரிசியை உண்டு உயிர் வாழ்ந்தேன்.  அப்போது என்னைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் சி. மோகன், ரவீந்திரன், எஸ்.ரா. போன்ற நண்பர்கள். 

ஆனாலும் மணி என்ற கோடீஸ்வரர் என் நண்பர்.  என் வறுமைக்கும் என் பட்டினிக்கும் அவர் என்ன செய்வார் பாவம்?  குசேலனும் கிருஷ்ணனும் நண்பர்களாக இல்லையா? 

வெஸ்ட்மின்ஸ்டர் பார் மதியம் பன்னிரண்டுக்குத் திறக்கும்.  எங்களுக்கென்று தனியாக ஒதுக்குப்புறமாக ஒரு மூலையில் இருக்கும் சோஃபா எப்போதும் ரிஸர்வில் இருக்கும்.   எப்போதும் என்றால் இப்படி:  காலை பதினோரு மணிக்கு மணியிடமிருந்து எனக்கு Cmg? என்று ஒரு மெஸேஜ் வரும்.  வாட்ஸப் அல்ல.  டெக்ஸ்ட் மெஸேஜ்.  நான் S, where என்று பதில் அனுப்புவேன்.  ஏனென்றால், பார்க் ஷெரட்டன் தவிர வேறு சில இடங்களிலும் சந்திப்போம்.  அதனால்தான் எங்கே என்ற கேள்வி.  Teekadai என்று பதில் வரும்.  டீக்கடை என்றால் வெஸ்ட்மின்ஸ்டர். பன்னிரண்டுக்கு டீக்கடையில் ஆஜராகி விடுவேன்.  எனக்கு அப்போது எழுத்தைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாததால் கூப்பிட்ட நேரத்துக்கு ஆஜராகி விடுவேன். சமயங்களில் நானும் மணிக்கு Cmg? அனுப்புவதுண்டு. 

ஒரு சமயம் நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வராததால்  கொலைப் பட்டினி.  அப்போது மந்தைவெளியில் வி.சி. கார்டன் தெருவில் இருந்தேன்.  பாபா கோவில் பின்புறம்.  வெஸ்ட்மின்ஸ்டரில் நுழைந்தவுடனேயே ஆறுமுகத்தை அழைத்து தக்ஷிணில் என்ன இருக்கிறதோ அதை எடுத்து வாருங்கள், கொலைப் பசி என்றேன்.  நான் கேட்டால் சைவ ஐட்டமே வராது.  அந்த மாதிரி ஆறுமுகத்துக்கு நிரந்தரக் குறிப்பைக் கொடுத்திருந்தேன்.  கபாபைக் கொண்டு வந்த ஆறுமுகம் “என் சர்விஸில் இப்படிக் கேட்டது – பசிக்கிறது, சாப்பாடு கொண்டு வா என்று கேட்டது முதல் முறை சார். என் வேலைக்கு இன்றைய தினம் ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஆனால் நான் கேட்டதன் பின்னணி அவருக்குத் தெரிந்திருக்காது.

அந்த ஆறுமுகத்தை சென்ற ஆண்டு நண்பர் நிர்மலோடு வெஸ்ட்மின்ஸ்டர் சென்ற போது சந்திக்க நேர்ந்தது.  பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். 

சமீபத்தில் இன்னொரு முறை வெஸ்ட்மின்ஸ்டர் சென்ற போது என்னை அந்தக் காலத்தில் வீட்டுக்குக் கொண்டு போய் விடும் பணியைச் செய்து கொண்டிருந்த ஆட்டோக்காரரின் ஆட்டோவிலேயே ஏற நேர்ந்தது.  நான் அப்போது குடித்திருக்கவில்லை.  குறுஞ்சிரிப்புடன் ஞாபகம் இருக்கா சார் என்றார்.

ஏன் இல்லாமல்?

சில சமயங்களில் நிதானம் தவறியிருப்பீர்கள் சார்.  அப்போதும் கூட உங்களை கவனமாக வீட்டில் கொண்டு போய் விடுவது என் வழக்கமாக இருந்தது.  பல சமயங்களில் பணம் கொடுக்க மறந்து போவீர்கள்.  மறு தடவை மணி சாரிடம்தான் கேட்டு வாங்கிக் கொள்வேன்.

அது சரி, உங்களுக்கு சாம்கோ சம்பவம் ஞாபகம் இருக்கிறதா?

இல்லையே சார்?

அவரிடம் அந்த சம்பவத்தை விவரித்தேன்.  அன்றைய தினம் வெஸ்ட்மின்ஸ்டரில் சாப்பிடவில்லை.  காரணம், பாலு ஐஏஎஸ்.  சாம்கோவில் பரோட்டாவும் மட்டன் கறியும் பிரமாதமாக இருக்கும், நான் உங்களை இன்று அங்கே அழைத்துப் போகிறேன் என்றார் பாலு.  (அப்போதைய சாம்கோ இல்லை இன்றைய சாம்கோ என்பது வேறு விஷயம்!)  ஆனால் கிளம்பும்போது பாலுவுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்து விட்டது.  சாம்கோ வர முடியவில்லை. 

நான் நம்முடைய ஆட்டோக்காரருடன் சாம்கோ போனேன்.  பரோட்டாவும் மட்டன் கறியும் உண்டேன்.  முடித்த பிறகு பார்த்தால் பாக்கெட்டில் பைசா இல்லை.  ஆட்டோக்காரரை அழைத்து பைசா கொடுங்கள் என்றேன்.  கொடுத்தார்.  அடுத்த முறை ஆட்டோக்காரரை நல்ல முறையில் கவனித்தார் மணி. 

நான் சொன்னதும் ஆட்டோக்காரருக்கு ஞாபகம் வந்து விட்டது.  இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள்.

வெஸ்ட்மின்ஸ்டரில் வைத்துத்தான் ராஸ லீலா நாவலை எழுதினேன்.

இரண்டு ஆண்டுகள்.  ஒன்று விட்டு ஒருநாள் போவேன்.  பன்னிரண்டு மணியிலிருந்து ஐந்து வரை எழுதுவேன்.  சமயங்களில் ஆறு ஏழு வரை கூட போகும்.  எழுதி விட்டுக் கிளம்பி வந்து விடுவேன்.   மாத முடிவில் மணி பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விடுவார்.  நீ ராஸ லீலா எழுதியதில் எனக்குப் பல லட்சம் செலவாகி விட்ட்து, அடுத்த ஜென்மத்தில் நீ திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அடிக்கடி மணி சொல்வார்.  இரண்டு மூன்று முறை பிரபஞ்சனையும் அழைத்துச் சென்றிருக்கிறேன்.  அவரோடு சென்றால் மதியம் பன்னிரண்டிலிருந்து தொடங்கி இரவு எட்டுக்கு மேல் ஆகி விடும்.  நான் பில்லுக்குப் பணம் கொடுக்காமல் கிளம்பியதைப் பார்த்து அவர் அதிர்ந்தே போனார்.  அப்புறம்தான் விஷயத்தைச் சொன்னேன். ஒரே ஒரு முறை நாஞ்சில் நாடனுடன் சென்றிருக்கிறேன்.  அப்போது அவருடைய தம்பி எதிர்பாராத விதமாக காலமாகி இருந்ததால் மிகவும் கலக்கத்தில் இருந்தார் நாஞ்சில் நாடன். 

2008 டிசம்பருக்குப் பிறகுதான் டென் டி எனப்படும் டென் டௌனிங் செல்ல ஆரம்பித்தோம்.  டென் டி இளைஞர்களின் இடம்.  வெஸ்ட்மின்ஸ்டர் வெஸ்ட்மின்ஸ்டர்தான்.  அதை டென் டௌனிங்கால் ஈடு செய்யவே முடியாது.  காரணம், உண்மையிலேயே வெஸ்ட்மின்ஸ்டர் என் வீடு போலவே இருந்தது.  மதிய வேளையில் அங்கே பெரிய கூட்டம் இருக்காது.  ஆனாலும் சில சமயங்களில் பக்கத்து மேஜையில் சத்தம் போடுவார்கள்.  அதனால் ஆறுமுகத்திடம் நிரந்தர உத்தரவு ஒன்றைப் போட்டேன்.  ”நாங்கள் வரும் தினங்களில் எங்கள் மேஜையை முன்பதிவு செய்யும் போதே பக்கத்து மேஜையிலும் ரிஸர்வ்ட் போர்டை வைத்து விடுங்கள்.”  அதேபோல் 2008 வரை நாங்கள் சென்றால் பக்கத்து மேஜையிலும் ரிஸர்வ்ட் அட்டை இருக்கும், நாங்கள் கிளம்பிச் செல்லும் வரை.  வாழ்வு. 

அப்படிப்பட்ட சாம்ராட் அசோகனை ஷேம் ஆன் யூ பண்ணி விட்டார் சீனி.  காரணம், அவர் என்னை கலர்ஃபுல்லான காஸ்ட்யூம் மற்றும் அதே போன்ற ஆடம்பரமான ஷூ மற்றும் கூலர்ஸோடு வரச் சொல்லியிருந்தார்.

எனக்குக் கூலர்ஸுக்கு அர்த்தம் தெரியவில்லை.  ஷூவுக்குக் கூலர்ஸ் என்றா சொல்வார்கள் என்று குழம்பினேன்.  இருந்தாலும் ஒரு வண்ணமயமான ஷூவை அணிந்து கொண்டேன். படு வண்ணமயமான சட்டை.  முன்பு ஒருமுறை பிஸ்மில்லாஹ் பாடலுக்கு கைலாஷ் கேர் அணிந்திருந்த கத்தரிப்பூ (purple) நிற சட்டை பற்றி எழுதியிருந்தேன். 

https://www.bing.com/videos/search?q=kailash+kher+youtube+teri+diwani&&view=detail&mid=57A0F19513089E0FB00857A0F19513089E0FB008&&FORM=VDRVRV

உடனே அந்தக் கத்தரிப்பூ நிறச் சட்டையை கிருஷ்ணமூர்த்தியும் குமரேசனும் வாங்கித் தந்தார்கள்.  அந்தச் சட்டையை அணிந்து கொண்டு சென்றேன்.

ஷூவின் நிறம்!

இந்தத் தோற்றத்துக்குத்தான் சீனியின் ஷேம் ஆன் யூ கிடைத்தது.  காரணம், நான் ஒரு கம்பெனியின் சி ஈ ஓ போல் சட்டையை உள்ளே விட்டுக் கொண்டு சென்றிருந்தேன்.  வெளியே விட்டிருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும்.  நீங்கள் ஷர்ட்டை இன்ஸெர்ட் பண்ணியே நான் பார்த்ததில்லை என்றார் சீனி.  எப்படி வரக் கூடாதோ அப்படி வந்தீர்கள் என்றார் மேலும்.  ஒரு பாருக்கு இப்படியா வருவார்கள் என்றார் மேலும். 

தமிழ்நாட்டுக்கு ரெமி மார்ட்டினை அறிமுகப்படுத்திய ஒருவனுக்கு இப்படி ஆனது.  அதை விடுங்கள்.  1980இல் தஞ்சாவூரில் எல் பார் ஷர்ட் அணிந்து ரகளை பண்ணியவன் நான்.  இன்று பெரிய அளவில் லினன் புகழ் பெற்றிருக்கும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பே லினன் அணிந்தவன் நான்.  ஆனால் எந்த இடத்தில் எதை அணிய வேண்டும் என்ற யோசனை இல்லாமல் வெஸ்ட்மின்ஸ்டருக்கு அப்படிப் போனேன்.

ஷேம் ஆன் யூ, அதுவும் காஸ்ட்யூம் கிங்குக்கே இப்படி ஒரு நிலையா என்று ஒரு நண்பரை அணுகினேன்.  அவர் ஸாரா என்ற கடைக்கு அழைத்துச் சென்றார். 

தொடரும்…