த அவுட்ஸைடர்… (2)

இன்று அஞ்சல் பொருள் கிடங்கு என்ற அலுவலகத்தில் படப்பிடிப்பு. 

அந்த அலுவலகத்தில் நான் நான்கு ஆண்டுகள் வேலை செய்தேன்.  1993இலிருந்து 1997 வரை.  அந்த அலுவலகத்தில் நான் பணி மாற்றம் செய்யப்பட்டது ஒரு கதை.

1992இல் நான் வேலூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டேன்.  ஸ்டேனோவுக்கு ஒரு இடத்தில் நான்கு ஆண்டுகள்தான் வேலை செய்ய முடியும். 

நான் போன ஜென்மத்தில் கொடும்பாவங்களைச் செய்திருக்கிறேன்.  ஏனென்றால், ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தா என்பவர் அதிர்ஷ்டசாலி.  குமாஸ்தாவை விட ஸ்டெனோ அம்பது ரூபாய் சம்பளம் அதிகம் வாங்குபவர் என்றாலும் அவர் அவருடைய அதிகாரிக்கு ஒரு வைப்பாட்டியைப் போல் பணி செய்ய வேண்டும்.  தில்லியில் நான் வேலை பார்த்த சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் அப்படி இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படித்தான்.  குமாஸ்தாவையும் நான்கு ஆண்டுகளில் மாற்றுவார்கள் என்றாலும் மவுண்ட் ரோட்டிலிருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றுவார்கள்.  ஆனால் ஸ்டெனோவை சென்னையிலிருந்து வேலூருக்கு மாற்றுவார்கள்.  வேலூரிலிருந்து நாகர்கோவிலுக்கு மாற்றுவார்கள்.  ஏனென்றால், அஞ்சல் துறையில் அப்போது மொத்தமே இருபது இருபத்தைந்து ஸ்டேனோக்கள்தான் இருந்தார்கள். 

நான் தில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றல் கேட்டேன்.  தில்லி அட்மினிஸ்ட்ரேஷனில் மட்டும் அந்த வசதி இருந்தது.  இந்தியாவில் எந்த இடத்துக்கும் மாற்றலில் போகலாம்.  எந்தத் துறைக்கும் போகலாம்.  இத்தனைக்கும் நான் தில்லி மாநில அரசில் பணி புரிந்தேன்.  தில்லிக்கு மட்டும் அந்த வசதி இருந்தது.  சென்னையின் வருமான வரித் துறையில் மாற்றல் கேட்டேன்.  அங்கே இடம் காலி இருந்தது.  ஆனால் அது wet department என்பதால் அந்தத் துறையின் தொழிலாளர் சங்கம் என்னை ஏற்க மறுத்து விட்டது.  நானும் படு பயங்கரமான வெட் டிபார்ட்மெண்ட்டிலிருந்துதான் வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தேன்.  எங்கள் கொள்கையிலிருந்து விலக மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்.

மத்தியப் புலானாய்வுத் துறையிலிருந்து என்னை எடுத்துக் கொள்கிறேன் என்றார்கள்.  அதாவது, என்னுடைய துறை மாற்ற வேண்டுகோள் சென்னையில் இருக்கும் எல்லா மத்திய அரசுத் துறைகளுக்கும் அனுப்பப்படும். 

புலனாய்வுத் துறையில்தான் வெங்கட் சாமிநாதன் டெபுடி டைரக்டராக இருந்தார்.  ஸ்டெனோவாகச் சேர்ந்து அந்த உயர்நிலைக்கு வந்து சேர்ந்திருந்தார். 

அவர் கும்பகோணம்.  அந்தக் காலத்து ஏழை பிராமணர்களின் புகலிடம் ஸ்டெனோ வேலை.  நான் அப்ராமணன் என்றாலும் படு புத்திசாலி என்பதால் நானும் என்னை அறியாமலேயே பிராமண கோஷ்டியோடு சேர்ந்து ஸ்டெனோ ஆனேன்.  ஆனால் ஒருபோதும் புலனாய்வுத் துறையில் சேரும் அளவுக்கு என் புத்தி மழுங்கி விடவில்லை.  அதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்த்து.

எங்கள் குடும்பம் வசித்த நாகூரில் யாருமே அரசு வேலையில் இருக்கவில்லை.  முக்கால்வாசிப் பேர் சிங்கப்பூர், மலாய்.  கொஞ்சம் பேர் துபாய்.  சிலர் கள்ளக் கடத்தல்.  இந்துக்கள் எடுபிடி வேலை.  ரவுடித் தொழில்.  பழக்கடை, காய்கறிக் கடை போன்ற சிறு வணிகம்.  ஒருத்தர் கூட அரசு வேலையில் இல்லை.  அக்ரஹார பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள்.  என் நைனா ஈஎஸ்எல்சி (எட்டாம் கிளாஸ்) பாஸ் என்பதால் டீச்சர் ட்ரைய்னிங் முடித்து ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாராக இருந்தார்கள். 

ஒருத்தர் கூட அரசு வேலை இல்லை.  ஆனால் நானோ போட்டித் தேர்வையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு எழுதுபவனாக இருந்தேன்.  பழைய கேள்வித் தாள்களெல்லாம் எனக்கு ஐந்து நிமிட வேலையாக இருந்த்து. 

உதாரணம் சொல்கிறேன்.

நான் இளம் வயதில் மிகவும் வித்தியாசமானவனாக இருந்தேன்.  காரணம் தெரியவில்லை.  நான் தட்டச்சு பயின்ற இன்ஸ்டிட்யூட்டில் காலை ஆறு மணி வகுப்புக்கே சென்றேன்.  அந்த இன்ஸ்டிட்யூட் தொடங்கிய காலத்திலிருந்து இருபது ஆண்டுகளாக காலை ஆறு மணி வகுப்புக்கு யாருமே சென்றதில்லை.  நான்தான் முதல்.

நான் அப்போதே காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்.  ஐந்தரை வரை படித்துக் கொண்டிருந்து விட்டு, இன்ஸ்டிட்யூட் கிளம்புவேன்.  இன்ஸ்டிட்யூட்டில் தினந்தோறும் நான்தான் அழைப்பு மணியை அழுத்துவேன்.  கடும் இருளாக இருக்கும்.  இன்ஸ்டிட்யூட்டின் ஆசிரியர் வீடும் அதேதான்.  ஆசிரியரின் பெண் தூக்கக் கலக்கத்தோடு கேட்டின் பூட்டைத் திறப்பார்.  நானே போய் லைட்டைப் போட்டு விட்டு நானே தட்டச்சைப் பயிற்சி செய்வேன்.  அந்தப் பெண்தான் இன்ஸ்ட்ரக்டர்.  எதுவும் சந்தேகம் உண்டா என்று கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்பார் அந்தப் பெண்.  இல்லை என்று வாயைத் திறக்காமலேயே தலையை ஆட்டுவேன்.

ஏழு மணிக்கு நானே கேட்டை சாத்தி விட்டுப் போய் விடுவேன்.  அந்த இன்ஸ்டிட்யூட்டிலிருந்து யாருமே ஷார்ட் ஹேண்ட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவில்லை என்பதால் வெளிப்பாளையத்தில் உள்ள ஒரு ப்ரைவேட் டீச்சரிடம் சேர்ந்தேன்.  அதற்காக ரயில் பாஸ் வாங்கிக் கொண்டு நாகூரிலிருந்து வெளிப்பாளையம் செல்வேன்.  நான்கு மணிக்கு ரயில்.  மூன்று கிலோ மீட்டர் தூரத்தை அந்த நிலக்கரி ரயில் முக்கால் மணி நேரத்தில் கடக்கும்.  நாகப்பட்டினத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் வெளிப்பாளையம் வந்து ஐந்து மணி வகுப்பில் நிற்பேன். 

ஆசிரியர் டிக்டேஷன் கொடுப்பார்.  ஒரு நிமிடத்துக்கு நூறு வார்த்தைகள்.  அதாவது, லோவர் தேர்வுக்கு எண்பது வார்த்தைகள்தான்.  ஆனாலும் நூறு வார்த்தைகளைப் பயிற்சி செய்தால்தான் எண்பது வார்த்தைத் தேர்வை வெற்றி பெற இயலும் என்பது ஆசிரியரின் திட்டம். 

மாணவர்கள் அனைவரும் திண்டாடித் தெருவில் நிற்பார்கள். 

பத்து நிமிட டிக்டேஷன்.  நான் ஒரு பிழை இல்லாமல் எழுதிக் கொடுப்பேன். 

மிரண்டு போன ஆசிரியர் ஒருநாள் ஹிண்டு எடிட்டோரியலை டிக்டேஷன் கொடுத்தார்.  மற்ற மாணவர்கள் டிக்டேஷனையே எடுக்கவில்லை.  நான் ஒரே ஒரு பிழையுடன் எழுதிக் கொடுத்தேன்.  கண்கள் சிவக்கும் அளவுக்குக் கோபமாகி விட்டார் ஆசிரியர்.  நீ ஏற்கனவே இண்டர் எல்லாம் பாஸ் பண்ணி விட்டு இங்கே வந்திருக்கிறாய்.  இனி நீ என் வகுப்புக்கு வராதே. 

தெருவில் கேட்கும் அளவுக்குக் கத்தினார்.

அத்தோடு அந்த வகுப்பு முடிந்தது.

நான் லோவர், இண்டர், ஹையர் என்று எதுவுமே எழுதவில்லை.  நேராக தில்லி அரசின் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் நடத்திய தேர்வை எழுதி தில்லி அட்மினிஸ்ட்ரேஷன் என்ற மாநில அரசில் சிவில் சப்ளைஸ் என்ற துறையில் பணியில் சேர்ந்தேன்.  அந்தத் துறையில் அப்போது பணியில் இருந்த ஒரே தமிழன் நான் மட்டுமே. பொதுமக்களுக்கு ரேஷன் கார்ட் வழங்கும் துறை.

இன்று மன்னை நாராயணசாமி பற்றி சமஸ் எழுதியிருக்கிறார்.  மன்னை நாராயணசாமி என்னை டேய் ரவி என்று அழைப்பார். பொன்மலை ராகவன் அன்பில் தர்மலிங்கத்தின் வலது கரம்.  பொன்மலை ராகவன் என் சின்ன நைனா. 

ஒருமுறை திருச்சியில் திமுக பொதுக்குழு விழா.  அடிமட்ட வேலையைச் செய்தது எல்லாம் ராகவன்.  என் சின்ன நைனா.  கனிமொழியிடம் ராகவனை அறிமுகம் செய்து இவர்தான் இதையெல்லாம் செய்தது என்கிறார் அன்பில் தர்மலிங்கம்.  அப்போது கனிமொழி “உங்கள் அண்ணன் மகன் ரவி என்கிற அறிவழகன் என்கிற சாரு நிவேதிதா எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்” என்று ராகவனிடம் சொல்லியிருக்கிறார். 

இதை என் சின்ன நைனா என்னிடம் சொல்லி “டேய், அந்தக் கணமே எனக்கு செத்து விடணும் போல் இருந்துதுடா, உன்னை என் தலைவனுக்கு எதிரி என்று நினைத்தேன், ஆனால் என் தலைவனின் மகளே உன்னைப் பற்றிச் சொல்லி விட்டார்” என்றார்.  ஏனென்றால், எங்கள் குடும்பம் திமுக குடும்பம்.   அந்தக் குடும்பத்தில் நான் ஒரு ரெபலாக இருந்தேன்.  ஒருமுறை என் நைனா எனக்குக் கொஞ்சம் காசு கொடுத்தார்கள்.  அதைக் கொண்டு நான் ஹிந்தி கிளாஸில் சேர்ந்தேன்.  ஒரு கம்பை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க வந்தார்கள் என் நைனா.  என் நைனா என்னைக் கோபித்த தருணம் அது ஒன்றே ஒன்றுதான்.    

மற்றபடி, என்னை என் அம்மாவும் நைனாவும் ஒரு மேதையைப் போல் நட்த்தினார்கள்.  மேதை என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது.  ஆனால் அப்படித்தான் நட்த்தினார்கள்.  நானும் அப்படித்தான் இருந்தேன்.  கட்டுரைப் போட்டியா, நான்தான் முதல்.  ஒப்பித்தல் போட்டியா, நான்தான் முதல்.  கவிதைப் போட்டியா, நான்தான் முதல்.  முதல் மாணவன் யார், அறிவழகன்.  ஒரு நாடகம் போட்டார்கள்.  அதிலும் முதல் பரிசு, அறிவழகன்.  சாம்ராட் அசோகன் நாடகத்தில் அசோகனை அஹிம்ஸாவாதியாக மாற்றிய பெண் நான்.  டேய் நீ அறிவழகன் அல்ல, அறிவழகி என்பார்கள் பள்ளியில். 

என் நைனாவிடம் அத்தனை ஆசிரியர்களும் உங்கள் பையனைப் போன்ற ஒரு மாணவனை நாங்கள் பார்த்த்தில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.

என் தங்கை சுமதி சொன்னது, நாங்கள் பத்தரை மணிக்குத் தூங்கப் போவோம், அண்ணன் படித்துக் கொண்டிருப்பார்கள், காலையில் நாலரை மணிக்கு எழுவோம்.  அப்போதும் அண்ணன் படித்துக் கொண்டிருப்பார்கள். 

சுமதி சொல்லித்தான் எனக்கே தெரிகிறது, ஓ, நான் அப்படியா இருந்தேன்?

அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வார்கள், டேய் ரவி, நீ எங்கயோ பொறக்க வேண்டியவண்டா, இந்தக் கழிசடையில பொறந்துட்டே.

எல்லோரையும் அவர்களது பெற்றோர் தங்கத் தட்டில்தான் தாங்குவார்கள்.  ஆனால் என் பெற்றோர் என்னை மேதை என கணித்தார்கள்.  நான் மேதை இல்லை. மேதை என்ற வார்த்தைக்கு அருகதையான ஒரே ஒரு இந்தியன் அம்பேத்கர்தான். நானோ ஒரு முட்டாள்.  ஆனாலும் நான் ஒரு கலைஞன்.  அதை முதல் முதலில் புரிந்து கொண்டவர்கள் என் அம்மாவும் நைனாவும்.  அவர்கள்தான் எனக்கே என்னைப் புரிய வைத்தவர்கள் எனலாம். 

அந்நாட்களில் எங்களுக்கு வழி காட்ட ஆள் இல்லை.  ஐஏஎஸ் தேர்வு எழுத டிகிரிதான் தகுதி என்று தெரிந்திருந்தால் நான் டிகிரி எழுதித் தேர்வாகி ஐஏஎஸ் ஆகியிருப்பேன்.  முதல் பத்துப் பேரில் கூட என் பெயர் வந்திருக்கும்.  அந்த அளவுக்கு அவர்களுக்கு வேண்டிய பொது அறிவைக் கொண்டவனாக இருந்தேன்.  ஆனால் டிகிரிதான் ஐஏஎஸ் தேர்வு எழுதத் தகுதி என்று எனக்கு அப்போது தெரியாது.

கேவலம், ஸ்டெனோ தேர்வு எழுதவே ஊரில் விட மாட்டார்கள்.  டேய், நம் ஊரில் எவனுமே லோயர் கூடப் பாஸ் பண்ணினதில்லை. 

நான் அதற்கு, டேய் லூஸு, லோயர்னு சொல்லக் கூடாது, லோவர்னுதான் சொல்லணும் என்பேன்.  1976இல் நடந்தது.

காரணம், ஒரு ஓட்டை ட்ரான்ஸிஸ்டரை வைத்துக் கொண்டு எப்போதும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவைக் கேட்டு ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பயின்று கொண்டிருப்பேன்.

என்னைப் பைத்தியம் என்பார்கள்.  கிதாரைத் தூக்கிக் கொண்டு தெருவில் நடந்தால் கல்லால் அடிப்பார்கள்.  அப்படித்தான் இருந்தது. 

தில்லியிலிருந்து எனக்கு வேலூரில்தான் போஸ்டிங் கிடைத்தது.  நான்கு ஆண்டுகள்.  அதை எப்படிக் கடந்தேன் என ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன்.  இங்கே மீண்டும் எழுதத் தேவையில்லை. 

சுருக்கமாக.  அண்ணா நகர் திருமங்கலத்திலிருந்து காலை ஆறு மணிக்கு 7 சி பஸ்.  பார்க் ஸ்டேஷன் ஸ்டாப்பில் இறங்கி  அங்கிருந்து செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஓட்டம். ஒன்றரை கிலோமீட்டர்.  ஏனென்றால், பிருந்தாவன் எக்ஸ்பிரஸின் கடைசி கோச்சில்தான் ஏற முடியும். 

பத்து மணிக்குக் காட்பாடி ரயில் நிலையம்.  அங்கிருந்து வேலூர் பஸ்.  பத்தரைக்கு ஆஃபீஸ்.  (ஆஃபீஸ் நேரம் ஒன்பதே கால்.  எனக்கு மட்டும் விதிவிலக்கு)  மாலை ஆறு மணிக்குக் காட்பாடியிலிருந்து பிருந்தாவன்.  ஐந்து மணிக்கே வேலூரிலிருந்து கிளம்ப வேண்டும்.  ஆறு மணி பிருந்தாவன் எட்டரைக்கு செண்ட்ரல் வரும்.  அங்கிருந்து மீண்டும் ஒன்றரை கிலோமீட்டர் ஓடி வந்து பார்க் ஸ்டேஷன் வாசலில் செவன் சி பிடித்து வீடு வர ஒன்பதரை.  இரவு உணவு உண்டு தூங்குவதற்கு பதினொன்று.  காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும்.  இதற்கிடையில் மனைவி என்ற பெண் ”எப்போது டிவோர்ஸ் அப்ளை பண்ணுவீர்கள்? நான் கையெழுத்துப் போட்டு விட்டேன், சீக்கிரம், சீக்கிரம் லாயரைப் பார்க்க வேண்டும்” என்று தார்க்குச்சி போடுவார்.

உலகிலேயே பெரும் பாவம் ஒன்றை நான் போன ஜென்மத்தில் செய்திருக்க வேண்டும்.  என் ஜாதகத்தை வாங்கிப் பார்க்கும் ஜோதிடர்கள் திடுக்கிடுகிறார்கள்.  இத்தனை கஷ்டமா பட்டிருக்கிறீர்கள்? 

ஆமாம், பட்டேன்.  அதைத்தான் எழுதியிருக்கிறேன்.

ஆனால் ஒரே ஒரு ஜோதிடர் வேறு விதமாகத் திடுக்கிட்டார், என்ன இது, ஒரு மனிதரைச் சுற்றி இத்தனை புத்தகங்களா?  இத்தனை புத்தகங்களை எப்படி ஒரு மானுடன் படித்திருக்க முடியும்?  நீங்கள் யார்? என்ன வேலை பார்க்கிறீர்கள்?

வேலூரில் நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டேன்.  Senior Superintendent of Railway Mail Services.  SSRM.  என் அதிகாரி என்று சொல்லப்பட்ட அந்த இளைஞனுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயதுதான் இருக்கும்.  ஐஏஎஸ் தேர்வு ஆனவுடன் இந்தியாவை மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட இளைஞன்.  சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்த்து. 

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் வந்து வேலையில் மூழ்கி விடுவார்.  மாலையில் ஆர் எம் எஸ் (ரயில்வே மெயில் சர்விஸ்) இடங்களுக்குப் போய் முதல் செட், இரண்டாம் செட், மூன்றாம் செட் எல்லாம் சோதனை செய்வார்.  மூன்றாம் செட் நள்ளிரவு இரண்டு மணி.  அவர் வீட்டுக்குக் கிளம்பும்போது இரண்டரை மணி இருக்கும்.  ஆனால் காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் வந்து விடுவார்.  சமீபத்தில் திருமணம் ஆனவர்.  அவர் குறிக்கோள் இந்தியாவைத் திருத்த வேண்டும்.  அதை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள எஸ் எஸ் ஆர் எம் அலுவலகத்திலிருந்து தொடங்க வேண்டும்.

அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.  தினமுமே ஐந்து மணிக்கு என்னை அழைத்து ஒரு மணி நேரம் டிக்டேஷன் கொடுப்பார்.  ஆறு மணி.  உடனே வேண்டும் என்பார்.  எட்டு மணி.

ஒருநாள்.  சனிக்கிழமை.  அதேபோல் நடந்தது.  ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை டிக்டேஷன் சடங்கு நடந்தது.  இப்போதே வேண்டும்.  நான் இங்கேயே இருக்கிறேன்.  பத்து மணிக்குள் கொடுங்கள், உங்களால் முடியும் என்றார்.  இல்லாவிட்டால் நாளை காலை வருகிறேன்.  எப்படியும் பத்து மணிக்குள் முடித்து விட்டால் தில்லிக்கு அனுப்பி விடலாம்.

நாளை காலை வருகிறேன் என்றேன்.

ஆறு மாதம் அந்த அலுவலகம் பக்கமே போகவில்லை.  ஆரம்பத்தில் மெடிகல் லீவ் அனுப்பினேன்.  ஒரு வாரத்துக்கு மேல் அதுவும் அனுப்பவில்லை. 

மயிரே போச்சு என்ற மனநிலை.  என்னை நம்பி யாருமே இல்லை.  விவாக ரத்து ஆகியிருந்த நேரம். 

ஆறு மாத காலம் எங்கெங்கோ சுற்றியலைந்தேன்.  ஒரு நரிக் குறவ கோஷ்டியோடு சில மாதங்கள் இருந்தேன். 

திருநெல்வேலியில் ஒரு ஜோதிடர் சொன்னார், அடுத்த மாதம் உங்களுக்குத் திருமணம்.  அரசு வேலை போகாது.

எனக்குத் தாம்பரம் எஸ் எஸ் ஆர் எம் மிடமிருந்து ஒரு தகவல் ஒரு நண்பர் மூலம் வந்த்து.  எங்கள் துறையில் கொடும் ஊழல் பேர்வழி என்று பெயர் எடுத்திருந்த அந்த அதிகாரி என் வாசகர்.  அறிவழகன், நீங்கள் உடனே அலுவலம் வந்தால் ஆறு மாத ஆப்சென்ஸை நான் சரி செய்கிறேன். 

சென்றேன்.  பின் தேதி போட்டு என்னிடமிருந்து விண்ணப்பம் வாங்கி சரி செய்தார். 

அரசாங்கத்தில் என்னவும் சாத்தியம்.

அந்தத் தாம்பரம் அலுவலகத்திலிருந்து அஞ்சல் பொருள் கிடங்கில் தூக்கி அடித்தார்கள்.

அதாவது, நீங்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் கிடைக்கும் பனிஷ்மெண்ட் போஸ்டிங் எனக்குக் கிடைத்த்து.

போஸ்டல் ஸ்டோர்ஸ் டெப்போ.  பூந்தமல்லி ஹை ரோட்டில் ஈகா தியேட்டர் பக்கத்தில் போஸ்டல் ஸ்டோர்ஸ் டிப்போ.

அங்கேதான் அவந்திகாவைப் பார்த்தேன். 

பார்த்து ஒரே மாதத்தில் கல்யாணம்.

அவளிடம் நான் கேட்டேன்.  கஞ்ஜா கேஸ் மற்றும் என்னை மாதிரி உருப்படாதவர்களைத்தானே இங்கே போஸ்ட் பண்ணுவார்கள், உன்னைப் போல் புத்திசாலிகள் எப்படி இங்கே?

அட லூஸு, கஞ்ஜா கேஸ்களையும் உங்களைப் போன்ற உருப்படாதவர்களையும் வைத்து மல்லுக்கட்ட திறமையான ஒரு டீம் தேவையில்லையா?  அதற்குத்தான் என்னைப் போன்ற ரெண்டு மூணு பேர் இங்கே இருக்கிறோம்.  அரசு இயந்திரம் ஓட வேண்டும் இல்லையா?

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.  இந்த ஆவணப்படம் வந்தால் அவசியம் பாருங்கள்.  போஸ்டல் ஸ்டோர்ஸ் டிப்போ. 

ஒருநாள் என் மேஜை டிராயரைத் திறந்தேன்.  அதில் ஒரு பாம்பு.

இன்றைய தினம்.  அங்கே இருந்த செக்யூரிட்டி சொன்னார்.  சார், பார்த்து நடங்கள், எக்கச்சக்கமாக பாம்பு இருக்கு. 

அதற்கு சீனி சொன்ன பதில்:

ஒளி ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சி பண்ணினவர்.  தோற்று விட்டார்.  இப்போது பாம்பு மூலம் நடந்தால் அவர் மகிழ்ச்சிதான் அடைவார்.  மேலும், அவர் குடும்பத்தில் அவருக்கு இன்னும் நாலைந்து சகோதரர்கள் இருக்கிறார்கள்!!!