கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதம்

2007இல் இந்தியா டுடேவில் வெளிவந்த கட்டுரை

தமிழர்களிடம் காணக் கிடைக்கும் ஒரு வினோதமான பழக்கம் என்னவென்றால், உலகத்திலேயே சிறந்த மொழி, சிறந்த கலாச்சாரம், சிறந்த கலை, சிறந்த இலக்கியம் – இன்னும் என்னென்ன சிறந்த விஷயங்கள் உண்டோ அத்தனை சிறந்தவைகளுக்கும் தாங்களே சொந்தக்காரர்கள் என்று நம்புவது. சமயங்களில் சில கவிஞர்களும் தமிழர்களின் இந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு வளர்ப்பதுண்டு. கவிஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்றோ, இதே கவிஞர் சீனாவில் பிறந்திருந்தால் ‘இந்த உலகத்திலேயே இனிமையான மொழி சீன மொழிதான் ’ என்று சத்தியம் செய்யக் கூடியவர் என்றோ நினைத்துப் பார்க்கும் அளவுக்குத் தமிழர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்ல.உலகில் எந்தப் பகுதியிலும் அறிஞர், நாவலர், கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர், நடிகர் திலகம், கவிப் பேரரசு போன்ற பட்டங்களை நாம் காண இயலாது. காவியங்களில் காணக் கூடிய அளவுக்கு சாகசத்தன்மைகளைக் கொண்டிருந்த மாபெரும் புரட்சிக்காரனாகவும், இன்றைக்கும் உலகிலுள்ள புரட்சி இயக்கங்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியவனாகவும் விளங்கும் சே குவேராவையே யாரும் புரட்சித்தலைவன் என்று அழைத்தது கிடையாது. ஆனால் தமிழ் நாட்டில் சினிமாவில் திறமையாக ஸ்டண்ட் செய்பவர்கள்தான் புரட்சிக்காரர்கள்.தமிழ்நாட்டில் உருவாகும் எந்த ஒரு பிரபலமான நபரும் இந்த இமேஜ் என்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல் இருந்ததில்லை. சினிமாவை எடுத்துக் கொண்டால், சிவாஜி. (எம்ஜியார் அரசியலுக்குள் போய் விட்டதால் அவரை விட்டு விடுவோம்). சிவாஜியைத் தமிழ்நாடே நடிகர் திலகம் என்று கொண்டாடியது. ஆனால் அவருடைய பெயர் தமிழ்நாட்டு எல்லையை விட்டு வெளியே தெரியவில்லை. உண்மையிலேயே உலகின் தலைசிறந்த எந்த நடிகனோடும் ஒப்பிடும் அளவுக்கு நடிப்புத் திறமை கொண்ட கணேசன் தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே தரத்தில் மிகத் தாழ்ந்த வர்த்தக சினிமாவிலேயே தொடர்ந்து நடித்ததன் காரணமாக இன்று சாதாரண ஆட்களால் கூடப் பகடி செய்யப் படும் அளவுக்கு கேலிப் பொருள் ஆகி விட்டார். தனது கடைசிக் காலத்தில் அவர் நடித்த ’ முதல் மரியாதை ’ என்ற படம் மட்டுமே அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது என்றால் அது அவரது நீண்ட கால சினிமா அனுபவத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்!

காரணம், உலகின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராக விளங்கினாலும் சிவாஜிக்கு உலகின் தரமான சினிமா பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்காதது மட்டும் அல்ல; சினிமா மேதைகளுள் ஒருவராக உலகமே கொண்டாடும் சத்யஜித் ரேயை சிவாஜியும், எம்ஜியாரும், ராஜ் கபூரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள் என்பது வரலாறு.சிவாஜியை அடிக்கடி பலரும் மார்லன் ப்ராண்டாவோடு ஒப்பிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்லன் ப்ராண்டோ A Street Car Named Desire (1951), Julies Ceasar (1953), On The Waterfront (1954) போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களைத் தந்து கொண்டிருந்த போது சிவாஜி எதிர் பாராதது, கூண்டுக் கிளி, தூக்குத் தூக்கி, மனோகரா போன்ற வர்த்தக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். ’ மனோகரா தமிழ் சினிமாவின் முக்கியமான படமாயிற்றே? ’ என்று சிலர் கேட்கலாம். அந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய ’ பொறுத்தது போதும் பொங்கியெழு ’ போன்ற வசனங்களும், பின்னர் அவர் முதல் மந்திரியாக ஆனதும் திராவிட இயக்க வரலாற்றில் வேண்டுமானால் முக்கியமான நிகழ்வாக இருக்கலாமே ஒழிய உலக சினிமா வரலாற்றில் இது போன்ற படங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. கவனியுங்கள். மனோகரா வெளியான ஆண்டு 1954. இதற்கு அடுத்த ஆண்டு வெளியான சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி உலக சினிமாவின் காவியங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.இந்தப் பின்னணியை அறிந்து கொண்டால்தான் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் இடத்தையும், சினிமாவின் உலக நாயகனாக விரும்பும் அவரது ஆர்வத்தில் இருக்கக்கூடிய அசட்டுத்தனத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

கமல்ஹாசன் தனது முன்னோடியான சிவாஜி கணேசனின் பாதையையே பின்பற்றுவதுதான் அவரது முயற்சிகள் தோல்வியடைவதற்கான காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் கணேசனுக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம், கமலுக்கு உலக சினிமா தெரியும் என்பதுதான். இருந்தாலும், இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. காரணம், கமல் தனது உலக சினிமா அறிவைத் தமிழ் சினிமாவை செழுமைப் படுத்துவதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, நகலெடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார். உதாரணம், நாயகன் (1987) படத்தில் கமல் தலையைக் கோதும் ஸ்டைல் கூட காட்ஃபாதரில் (1972) மார்லன் ப்ராண்டோ தனது தலையைக் கோதும் மேனரிஸத்திலிருந்து அப்பட்டமாக நகல் எடுத்துக் கொண்டதுதான். நாயகனோடு முடியவில்லை இந்த நகல் சமாச்சாரம்; தேவர் மகனிலும் (1992) அது தொடர்ந்தது.

கமலின் அவ்வை சண்முகி (1996) ராபின் வில்லியம்ஸ் நடித்த Mrs. Doubtfire என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.கமலின் உலக சினிமா அறிவு இப்படி நகலெடுக்க மட்டும்தான் பயன்படுகிறது என்றால், தான் வாழும் சமூக, அரசியல், கலாச்சார சூழலை அவர் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்; எவ்வாறு தனது படங்களில் கையாளுகிறார் என்று பார்த்தால் அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. குருதிப் புனலில் (1996) வரும் நகஸல் போராளி ஒரு சிறுமியைப் பாலியல் நோக்கத்துடன் பார்க்கிறான். அவனுடைய மனைவி ஒரு விபச்சாரியைப் போல் சித்தரிக்கப் படுகிறாள்.

வன்முறையைத் தங்கள் வழியாகக் கொண்டு போராடும் தீவிரவாதிகளோடு ஒருவருக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அந்தத் தீவிரவாதிக்கும் ஒரு ஜேப்படித் திருடனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? மனித வெடிகுண்டாக மாறி மக்களைக் கொல்லும் ஒரு தீவிரவாதி நிச்சயமாக ஒரு சமூக விரோதிதான். ஆனால் அவன் தான் நம்பும் ஒரு கொள்கைக்காகத்தானே தன்னையே சாகடித்துக் கொள்ளத் தயாராகிறான்? அப்படியானால் அவன் ஒரு ஐடியலிஸ்ட்தானே? இந்தப் புரிதல் இல்லாமல் ஒரு சராசரி மனிதனின் பார்வையோடு அணுகியதால்தான் குருதிப் புனலில் வரும் போராளி கேவலமான முறையில் சித்திரிக்கப் பட்டிருகிறான்.சராசரி மனிதனின் பார்வை என்றால் என்ன என்ற சந்தேகம் எழலாம். இதோ உதாரணம்: வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியா சிறப்பாக இருந்தது; ராஜாங்கம் நன்றாக நடந்தது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும். (பாகிஸ்தானில் ஏதோ ரொம்ப அற்புதமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது போல் இவர்களுக்கு நினைப்பு!)இப்படிப்பட்ட சராசரி மனிதனின் அணுகுமுறைதான் கமலின் பல்வேறு படங்களில் வெளிப்படுகிறது. தசாவதாரத்தில் வரும் முஸ்லீம் பாத்திரம் மற்றொரு உதாரணம்.கமல் படங்களில் கையாளப்படும் சமூகப் பிரச்சினைகள் சராசரித் தன்மையோடு இருப்பதன் மற்றொரு காரணம், கமல் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள். உதாரணமாக, தசாவதாரத்தின் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் அமிதாப் பச்சன் நடித்து உலக அளவில் பேசப்பட்டு வரும் லாஸ்ட் லியர் வெளியாகியுள்ளது. இதை இயக்கியவர் ரிதுபர்னோ கோஷ். வங்காள மாற்று சினிமாவில் ( alternate cinema) ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பெயர். அமிதாப் பச்சன் என்ற இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரிதுபர்னோ கோஷ் என்ற யாருக்குமே தெரியாத ஒரு வங்காள இளைஞனை நோக்கி ஓட வேண்டிய அவசியம் என்ன? சீரியஸ் சினிமா பற்றிய அமிதாபின் அக்கறை.கமல்ஹாசனால் இப்படி ஒரு இளைஞனிடம் பணியாற்ற முடியுமா? பிரச்சினை என்னவென்றால், கமலுக்கு இளைஞர்களுடனும், சம காலத்தோடும் தொடர்பே அற்று விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (ஆனால் கமலின் நண்பராக இருந்த சுஜாதாவின் எழுத்து அவரது கடைசிக் காலம் வரை இளமைத் துடிப்புடனும், சமகாலத் தன்மையோடும் விளங்கியது என்பதை இங்கே நாம் ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்). ஏஸி காரில் செல்லும் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு டவுன் பஸ்ஸில் செல்லும் கொடுமை பற்றி ஏதாவது தெரியுமா? அந்த அளவுக்குக் கமலும் தனது சமகாலத்திலிருந்தும், சமகாலப் பிரச்சினைகளிலிருந்தும் அந்நியமாகி விட்டார் என்று அவரது படங்களிலிருந்து தெரிகிறது.

விருமாண்டி என்ற படத்தையும், இதே கதைக் களனைக் கொண்ட பருத்தி வீரனையும் எடுத்துக் கொள்வோம். உலக சினிமாவை அறிந்த கமல்ஹாசனின் ’ விருமாண்டி ’ ஒரு சராசரி கமர்ஷியல் படமாகவும், உலக சினிமா பற்றி எதுவுமே அறியாத அமீரின் ’ பருத்தி வீரன் ’ ஒரு கலைப் படைப்பாகவும் உருவானது எப்படி? சினிமாக்காரர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான அதிர்ஷ்டமா? இல்லை. கமல் மட்டும் அல்ல; எத்தனையோ ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த யாருமே அமீர் உருவாக்கியது போன்றதொரு கலைப் படைப்பை உருவாக்கியதில்லை என்பதுதான் நிஜம். அமீர் மட்டுமல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய பாரதிராஜாவும் கூட உலக சினிமா புத்திஜீவி அல்ல என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தனக்கு இலக்கியமும் தெரியாது என்று மற்றொரு அதிர்ச்சியையும் தருகிறார் அமீர். மறுபடியும் பாரதிராஜா கதைதான். அவரும் சமகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் அல்ல. ஆனால் கமலுக்கு ஞானக் கூத்தனிலிருந்து மனுஷ்ய புத்திரன் வரை நண்பர்கள்.இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஒரு கலைப் படைப்புமே வெறும் அறிவினால் மட்டுமே உருவாகக் கூடியதல்ல. ’ அப்படியானால் வேறு என்ன தேவைப் படுகிறது? வாழ்க்கை பற்றிய கூரிய அவதானமா? ’ என்றெல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. ஏனென்றால் அது ஒவ்வொரு கலைஞனுக்கும் வேறு படுகிறது.

பருத்தி வீரனைப் போல் அல்லாமல் விருமாண்டி தோற்றுப் போனதற்கு மற்றொரு காரணம், கமலின் தன்முனைப்பு. விருமாண்டியில் மட்டும் அல்ல; கமலின் எல்லாப் படங்களிலுமே அவர் தன்னையே முன்னிறுத்திக் கொள்கிறார். அவரது படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்கள் அடிபட்டுப் போய் கமல்ஹாசன் என்ற பிரம்மாண்டமான நட்சத்திரமே நம் முன் ரூபமெடுக்கிறார். இதனாலேயே அவருடைய நோக்கம் வெற்றியடையாமல் போகிறது. ஹே ராம், ஆளவந்தான், தசாவதாரம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இதைத்தான் ஆரம்பத்தில் இமேஜ் பொறி என்று குறிப்பிட்டேன். இப்போது ரிதுபர்னோ கோஷுக்கு வருவோம். யாருக்குமே தெரியாத இந்த வங்காள இளைஞனின் இருப்பிடத்தை நோக்கி மும்பையிலிருந்து கொல்கொத்தா நோக்கிச் செல்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலக கேட்டைக் கூட ரிதுபர்னோ கோஷ் போன்ற ஒரு இளம் இயக்குனரால் தொட முடியுமா என்பது சந்தேகம்.கமலும் அவரது சகாவான ரஜினியைப் போலவே நடிகர் என்ற இடத்திலிருந்து நட்சத்திரம் என்ற தந்த கோபுரத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். 1978- ஆம் ஆண்டு தீபாவளி அன்று ஐந்து படங்கள் வெளியாயின. அதில் அவள் அப்படித்தான், சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா? என்ற மூன்று படங்களில் கமல் ஹீரோ. ஆனால் அதே நாளில் வெளிவந்த பாலச்சந்தரின் தப்புத் தாளங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் கமல் சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளனாக வருகிறார். இதை கமல் அவரது குருநாதரான பாலச்சந்தருக்காக அப்போது செய்தார். இப்படி தனது ஹீரோ அந்தஸ்தைத் துறந்து விட்டு ஒரு நடிகனாக மட்டுமே கமல் இப்போது இதைச் செய்யத் துணிவாரா? அமிதாப் செய்கிறார்.மேலும் ஒரு விஷயம், கமலின் குருநாதர் பாலச்சந்தர் பற்றி. நேற்று வந்த ரிதுபர்னோ கோஷ் பற்றியும், ஷ்யாம் பெனகலின் சமீபத்திய படம் வெல்கம் டு சஜ்ஜன்பூர் பற்றியும், சந்தோஷ் சிவனின் தஹான் பற்றியும் உலக சினிமா அரங்கில் விவாதிக்கிறார்கள். காரணம், இவர்கள் சினிமாவை ஒரு கலையாக வெளிப்படுத்தியவர்கள். ஆனால் பாலச்சந்தர்? தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்காவது இந்த இயக்குனர் சிகரத்தின் பெயர் தெரியுமா? பாலச்சந்தர் பற்றி 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெங்கட் சாமிநாதன் கூறினார், “பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சுதான் பாலச்சந்தர் ” என்று. இப்படிப் பட்ட ஒருவரை குருநாதராக வரித்துக் கொண்டு எங்கிருந்து சீரியஸ் சினிமாவை உருவாக்குவது?

இப்போதும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை. கமல்ஹாசன் தன்னை ஒரு நட்சத்திரம் என்பதை மறந்து விட்டு, அமீர், சசிகுமார் போன்ற இயக்குனர்களிடம் தன்னை ஒரு அறிமுக நடிகனைப் போல் முழுமையாக ஒப்படைத்தால் உலக அளவில் கவனத்தைத் திருப்பக் கூடிய கலைப் படைப்புகளை உருவாக்க முடியும்.இறுதியாக, இவ்வளவு விமர்சனங்களையும் கமல்ஹாசன் என்பதால் மட்டுமே திறந்த மனதுடன் முன் வைத்திருக்கிறேன் ; அவரை எனது சஹ்ருதயர் என்று கருதுவதால். வேறு நடிகர் என்றால் ஒரு வார்த்தை பேசி இருக்க மாட்டேன்.
***