எங்கு பார்த்தாலும் டிப்ரஷன் டிப்ரஷன் என்றே புலம்புகிறர்கள் என்று சீனி எழுதியிருந்தார். ஆமாம், உண்மைதான். ஆனால் எனக்கு டிப்ரஷன் என்றால் என்ன என்று தெரியாது. தெரிந்தவர்களைத் தெரியும். ஆனாலும் டிப்ரஷன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவே முடியவில்லை. எனக்கும் டிப்ரஷன் வந்திருக்கலாம். ஆனால் அதுதான் டிப்ரஷன் என்று கண்டு கொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லாதிருந்திருக்கலாம். டிப்ரஷனுக்குத் தமிழ் வார்த்தையும் தெரியவில்லை.
எனக்கு உணவு விஷயமாகத்தான் டிப்ரஷன் வருவதாகத் தோன்றுகிறது. அதாவது, அந்த மன உணர்வுதான் டிப்ரஷன் என்றால்.
நேற்று அன்னபூர்ணியிடம் சொல்லி கை மணம் என்ற உணவகத்திலிருந்து நண்டுக் குழம்பு வரவழைத்தேன். பார்த்ததுமே ஏற்பட்ட மன உணர்வை டிப்ரஷன் என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் களி. மீண்டும் சேறு. ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி சுட வைத்து உண்டேன். ஏதோ பரவாயில்லாமல் இருந்தது.
நான் ஒரு ரசம் அடிக்ட் என்று சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். ரசம் இல்லாமல் என் சாப்பாடு முழுமை அடையாது. ஆனால் பல உணவகங்களில் ரசம் வைக்கத் தெரிவதில்லை. ஒரு சில இடங்கள் விதிவிலக்கு. ஷேரோ ஹோம் ஃபுட் பரவாயில்லை. அதேபோல் வாணி ஷங்கர் கிச்சனும் நன்று.
நேற்று அடைந்த டிப்ரஷன் காரணமாக, இன்று சுப்ரீம் மீன் கடை என்ற கடையிலிருந்து நெய் மீன் வரவழைத்தேன். ஒன்பது மணிக்கு ஆர்டர் கொடுத்தது. இன்னும் வருகிறது. இதைத் தட்டச்சு செய்யும் போது மணி பதினொன்று. இப்படி வரும் மீன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஜார்ஜ் டவுனிலிருந்து வர வேண்டும். ஆள் கிளம்பி விட்டார் என்று தெரிந்தது. இனிமேல் அலுப்பு பார்க்காமல் நானேதான் கடைக்குச் சென்று மீன் வாங்கி வர வேண்டும் போலிருக்கிறது.
***
யாரும் அத்தனை சிரத்தையாக என் எழுத்தைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. சென்ற பதிவில் நான் ஏன் மத்தியப் புலனாய்வுத் துறையில் சேரவில்லை என்பதற்கு ஒரு முக்கியமான சம்பவமே காரணம் என்று எழுதியிருந்தேன். ஆனால் அது என்ன சம்பவம் என்று எழுத மறந்து போனேன். யாரும் கேட்கவில்லை. இப்போது எழுதலாம் என்றால் சீனி தடுத்து விட்டார். ஆவணப் படத்தின் கண்டெண்ட் எல்லாவற்றையும் இப்படிக் கசிய விட்டீர்கள் என்றால் பிறகு ஆவணப்படத்தின் சுவாரசியம் போய் விடாதா என்பது சீனியின் கேள்வி. எனவே, மத்தியப் புலனாய்வுத் துறையின் சென்னை அலுவலகம் என்னை எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தும் நான் ஏன் சேரவில்லை என்பதற்குக் காரணமாக அமைந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை ஆவணப்படத்திலேயே சொல்கிறேன்.
ஆனால் ஒரு குறிப்பை மட்டும் இப்போது தந்து விடுகிறேன். வெங்கட் சாமிநாதன் தன் வீட்டில் ஒரு அறையை எனக்கு வாடகைக்கு விட்டிருந்தார். தமிழ்நாட்டில் எல்லோரும் எனக்கு அவர் புகலிடம் தந்திருப்பதாகவே நினைத்திருந்தார்கள். அப்படி இல்லை. இன்னொரு அறையில் இன்னொரு மாணவன் வாடகைக்கு இருந்தான். ஒரு வருடம் இருந்தேன். வெ.சா. அப்போது மத்தியப் புலனாய்வுத் துறையில் டெபுடி டைரக்டராக இருந்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை ஞாபகம் கொண்டுதான் பின்னாளில் எனக்கு மத்தியப் புலனாய்வுத் துறை அளித்த வாய்ப்பை மறுத்தேன். அதற்குப் பிறகே அஞ்சல் துறை கிடைத்தது. ராஸ லீலாவும் வந்தது. புலனாய்வுத் துறையில் சேர்ந்திருந்தால் அநேகமாக சில வருடங்களில் மனநோய் விடுதியில் சேர்ந்திருப்பேன். அஞ்சல் துறை என்பதால் நாவலாக மிஞ்சியது.
***
சுப்ரீம் மீன் கடைக்கு இன்றோடு டாட்டா காண்பித்து விட்டேன். ஒன்பது மணிக்கு ஆர்டர் கொடுத்து பதினொன்றரை மணிக்கு வந்தது. மீன் நன்றாகத்தான் இருந்த்து. ஆனால்… அரசு மீன் அங்காடியில் மீன் விலை லோக்கல் மீன் மார்க்கெட்டை விட இரட்டிப்பாக இருக்கும். இந்த சுப்ரீம் மீன் கடையில் அரசு அங்காடியை விட அரை மடங்கு அதிகம். இன்று நான் வாங்கிய நெய் மீன் கிலோ என்ன விலை என்று கேட்டேன். 1900 ரூ. ஒரு கிலோ, மக்களே! சைவர்களெல்லாம் எத்தனை அதிர்ஷ்டசாலிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். விலையைக் கேட்டதும் எனக்குப் புத்தகப் பிரியர்களின் அங்கலாய்ப்பு ஞாபகம் வந்தது. ஆயிரம் பக்கப் புத்தகத்துக்கு ஆயிரம் ரூபாய் விலை வைத்தால் ஐயோ ஐயோ விலை அதிகம் என்று அழுகிறார்களே, இப்படி வஞ்சிரத்தின் விலை கிலோ 1900 ரூபாய் என்றால் யாராவது அது பற்றிக் கவலைப்படுகிறோமா?
முதலில் சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் உரித்து வைத்துக் கொண்டேன். மீனை ஏற்கனவே சுத்தம் செய்திருந்தார்கள். அதனால்தான் அந்த விலை போல. அவந்திகா தயாராக செய்து வைத்திருந்த குழம்புப் பொடியையும் உப்பையும் மீன் துண்டங்களில் கலந்து ’மேரினேட்’ பண்ணினேன். ஒரு மணி நேரமாவது குழம்புப் பொடியில் மீன் ஊறினால்தான் சுவை கூடும். வறுக்க வேண்டிய மீனையும் அதேபோல் செய்தேன். அதில் மட்டும் நீருக்குப் பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்தேன்.
தக்காளியையும் நறுக்கிக் கொண்டேன். ஏற்கனவே புளியை ஊறப் போட்டாயிற்று.
மண் சட்டியில் எண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் கொஞ்சம் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கினேன். எடுத்த எடுப்பில் தக்காளியைப் போடக் கூடாது. தக்காளிக்குப் பிறகு வெங்காயம் பூண்டு எல்லாம் போட்டால் வெங்காயம் பூண்டின் பச்சை வாசம் போகாது. பூண்டும் வெங்காயமும் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியைப் போட்டு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கினேன்.
மேரினேட் செய்து வைத்திருந்த மீனில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மீனை லேசாகக் கழுவி அந்தத் தண்ணீரை சட்டியில் இருந்த பூண்டு வெங்காயம் தக்காளிக் கலவையில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்தேன். பிறகு புளிக் கரைசல். மீண்டும் கொதி. கடைசியாக மீனை எடுத்துப் போட்டு இன்னும் ஒரு கொதி. ஐந்து நிமிடம்தான். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் விட்டு, ஏற்கனவே நறுக்கி வைத்திருந்த கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடியைப் போட்டு மூடி வைத்தேன். நெய் மீன் குழம்பு ரெடி.
மீனை குழம்புப் பொடியில் மீனை மேரினேட் செய்வதற்காகக் கலந்ததில் கை விரல்களெல்லாம் இன்னமும் எரிகிறது. அவந்திகாவிடம் உனக்கு எரியுமா என்று கேட்டேன். ”மிளகாய்த் தூளைப் போட்டுக் கலந்தால் கை எரியாதா? இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்றாள்.
”முப்பது ஆண்டுகளாக ஏன் நீ இதை என்னிடம் சொல்லவில்லை?”
முதலில் சொன்னதையே மறுபடியும் சொன்னாள்.
எல்லாம், வழி தவறி அப்ராமணன் ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்ட அய்யங்கார் அகத்துக்காரி ஒருத்தி செய்யும் மீன் குழம்பு முறை. மற்றபடி, அப்ராமணர்கள் மீன் குழம்பு எப்படிச் செய்வார்கள் என்று நீங்கள் சொன்னால் அடியேன் அடுத்த முறை அதையும் முயற்சிக்கிறேன்.