தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்தால் விவாகரத்து… (குறுங்கதை)

வெளியூர்களிலிருந்து சென்னை நகரத்திற்கு வந்து வாழ நேர்ந்திருக்கும் எழுத்தாளர்கள் பலர் இந்த நகரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதுவதைப் பார்க்கும் போதெல்லாம் ‘இது உச்சக்கட்ட ஸ்டாக்ஹோம் சிண்ட்ரமின் வெளிப்பாடு’ என்று தோன்றும்.  ஏனென்றால், தென்னிந்தியாவிலேயே மனிதர்கள் வாழ்வதற்குக் கொஞ்சமும் லாயக்கு இல்லாத ஊர் என்றால் அது சென்னைதான்.  ஊர் என்ன செய்யும், மனிதர்களே காரணம்.  ஆனால் இந்த ஊருக்கும் இந்த ஊரின் கச்சடாத்தனத்தில் பெரும் பங்கு இருக்கிறது.  முக்கியமாக, இந்த ஊரின் தட்பவெப்பம்.  

ஆனால் இது எல்லாவற்றையும் விட கொடுமை, இங்கே வசிக்கும் பெரும்பான்மையானவர்களின் திருட்டுத்தனமும், ஏமாற்று வேலையும்.  நேர்மை என்பதே மருந்துக்கும் இல்லாத ஊர் இது.  இதை நீங்கள் இந்த ஊரில் ஏதாவது ஒரு ஆட்டோவில் ஏறிப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். 

பணம் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவுமே தெரியாத மனிதர்கள் வாழும் ஊர் இது. 

எனக்கு சமைத்துக் கொடுத்த பெண் என்னிடம் அடிக்கடி, ”நான் மீனவர் குப்பத்தில்தான் வசிக்கிறேன், உங்களுக்கு ஏதாவது மீன் வேண்டுமானால் சொல்லுங்கள், வாங்கி வருகிறேன், ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கும்” என்றார்.  600 ரூ. கொடுத்தேன்.  ஏனென்றால், வவ்வா மீன் நானூறு ஐநூறு இருக்கும்.  ஆனால் நண்டு இருந்தால் நண்டு போதும், வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். 

அந்தப் பெண் நண்டே வாங்கி வந்தார்.  ஒரு கிலோ நண்டு.  எவ்வளவு என்றேன்.  600 ரூ. என்றார்.  மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கு அதிக விலையில் விற்கும் அரசு மீன் கடையிலேயே நண்டு விலை 250 ரூ. தான்.  மீன் சந்தையில் நண்டு விலை நூறு ரூபாய்.  இப்படிப்பட்ட பல தில்லுமுல்லு வேலைகளால்தான் அவந்திகா அந்தப் பெண்ணை வேலையிலிருந்து நிறுத்தி விட்டாள். 

பாருக்குப் போனால் ரம் என்று சொல்லி கோக்கைக் கொடுக்கும் ஊர் சென்னை.

எனக்கு மீன் தலை என்றால் ஆக இஷ்டம்.  ஆனால் மீன் தலை சாப்பிட்டு இரண்டு ஆண்டுகள் இருக்கும்.  ரொம்ப காலத்துக்கு முன்பு நானும் மற்றும் இரண்டு நண்பர்களுமாகச் சேர்ந்து தி.நகரில் உள்ள நாஸி கந்தார் என்ற மலேஷியா உணவகத்துக்குச் செல்வோம்.  ஒரு மீன் தலை வாங்கினால் நான்கு பேர் தாராளமாகச் சாப்பிடலாம்.  இப்போது அங்கே போக நண்பர்கள் இல்லாமல் (இப்போது என்னைச் சுற்றிலும் ஒரே சைவாள் கூட்டம்!) மீன் தலையே சாப்பிட முடியாமல் போனது.  அவந்திகாவோ உனக்காக காண்டாமிருகத்தைக் கூட சமைத்துத் தருகிறேன், ஆனால் எந்த மிருகத்தின் தலை மட்டும் வேண்டாம் என்று இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் சொல்லி சத்தியம் வாங்கியிருக்கிறாள்.  தலையில் இருக்கும் கண்கள் அவளைப் பீதியூட்டுகிறதாம்.  ஆனாலும் விதிவிலக்காக அவ்வப்போது மீன் தலை மட்டும் சமைப்பாள்.  அவ்வப்போது என்றால், நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.  அதனால் மீன் தலை மட்டும் கடையில்தான் வைத்துக் கொள்வது.  ஆனால் கடையில் கிடைக்காது.  கிடைக்கும் கடைக்குப் போக இன்னும் ஒருத்தராவது தேவை.  துரதிர்ஷ்டவசமாக என்னோடு இருக்கும் அசைவாள்களும் மீன் சாப்பிடாத கோஷ்டி.  ஆடு மாடு கோழி எல்லாம் கண்டபடி வெட்டுவார்கள்.  கடல் உணவு என்றால் வேண்டாம். 

நேற்று அன்னபூர்ணியிடம் மீன் தலை வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  நாளை பத்து மணிக்கு லிஷியஸிலிருந்து வரும் என்று சொன்னார்.  வந்தது.  பார்த்தால் மூஞ்சூர் தலை.  மூஞ்சூர் சைஸுக்கெல்லாம் வஞ்சிரம் இருக்கும் என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது. 

அவந்திகா மும்பையிலிருந்து ஏழாம் தேதி திரும்பி வருகிறாள்.  அதற்குள் நானே அரசு மீன் கடைக்குப் போய் மீன் தலை வாங்கி வந்து சமைக்க வேண்டியதுதான்.  வேறு வழியில்லை. 

அவந்திகா மும்பை போய் 25 நாள் இருக்கும்.  அவள் கிளம்பி ஓரிரண்டு தினங்களில் கீழ்த் தளத்தில் இருக்கும் செக்யூரிட்டிகளில் ஒருவரான தாமஸ், உங்கள் பக்கத்து வீட்டு ராயர் ஒரு வாட்டர் கேன் கேட்கிறார் என்றார்.  பிஸ்லெரி கேன் ஒன்றைக் கொடுத்தேன். 

இம்மாதிரி லௌகீக காரியங்கள் எனக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை என்பதால் அதோடு அந்த விஷயத்தை மறந்தும் போனேன்.

இன்று காலை கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும்போது – எட்டரைக்கே குடித்து விடுவேன், இன்று கொஞ்சம் தாமதம், ஒன்பது மணியாகி விட்டது – அவந்திகாவிடமிருந்து ஃபோன். 

பிஸ்லெரி தண்ணீருக்குச் சொல்ல வேண்டும், எத்தனை கேன் காலியாக இருக்கிறது சாரு?

ரெண்டு கேன் சொல்லும்மா, ரெண்டு கேன் காலியாக இருக்கிறது. 

அப்படீன்னா மீதி அஞ்சு கேன் இருக்கா?

கஞ்சியை வைத்து விட்டுப் போய் கேன்களை எண்ணினேன்.  நாலு தான் இருந்தது.  சொன்னேன்.

இல்லியே சாரு, அஞ்சு கேன்ல இருக்கணும்?  மொத்தம் ஏழு கேன் ஆச்சே?

தெரியலியேம்மா.  இங்கே மொத்தம் ஆறுதான் இருக்கு. 

சமையல் தண்ணிக்கு நேத்து பாஸ்கர் கேன் கொண்டு வந்தார் போல் இருக்கே?  அவர் எத்தனை கேன் போட்டார்?  எத்தனை கேன் எடுத்துக் கொண்டு போனார்? 

(சமையல் தண்ணீர் வேறு, குடிப்பதற்காக வைத்திருக்கும் பிஸ்லெரி வேறு!)

ரெண்டு போட்டார்.  ரெண்டு எடுத்துக் கொண்டு போனார்.

சரியாப் பாத்தியா?

சரியாப் பாத்தனே?

அப்போன்னா அவர் தெரியாமல் பிஸ்லெரி கேனை எடுத்துக் கொண்டு போய் விட்டாரோ? 

அப்படிப் பார்த்தாலும் நீ சொல்லும் கணக்குப் பிரகாரம் சமையல் கேன் எக்ஸ்ட்ராவா இருக்கணுமே?

நீ யாருக்கும் ஏதாவது தண்ணி கேன் கொடுத்தியா?  யாராவது கேட்டார்களா?

எனக்கு ஏதோ முந்தின ஜென்மத்து ஞாபகம் போல் லேசாகக் கீறியது.

ரொம்ப நாளைக்கு முன்னால் தாமஸ்தான் பக்கத்து வீட்டு ராயருக்காக ஒரு கேன் வாங்கினதாக ஞாபகம்.  அதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

தாமஸ்தான் ஒரு ஃப்ராடு ஆச்சேப்பா, அவர்கிட்ட எல்லாம் எதுக்குத் தண்ணி கேன் கொடுக்கிறாய்?

அவருக்கென்றா கேட்டார்?  ராயருக்கு அல்லவா கேட்டார்?  பக்கத்து வீட்டுக்காரர் தண்ணி இல்லேன்னு கேட்கும்போது நம்மிடம் வைத்துக் கொண்டே எப்படி இல்லை என்று சொல்வது?

அப்படியானால் இப்போது பார், ஒரு கேன் போச்சு.  நமக்கே தண்ணி இல்லாதப்போ நாம எப்படி அடுத்தவருக்குக் கொடுக்கலாம்?

இல்லியே, நம்மிடம்தான் மூணு நாலு கேன் எக்ஸ்ட்ராவா இருக்கே?

சரி, உன்னிடம் பேசிப் பயனில்லை.  அந்த தாமஸைப் பிடித்து இப்போது லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கறேன் பார்.

காலையில்தான் ரத்த அழுத்தம் 120 – 80 என்ற அட்டகாசமான அளவில் நின்றது.  இப்போது எகிற ஆரம்பித்து விட்டது.

ஐந்து நிமிடத்தில் அவந்திகாவிடமிருந்து மீண்டும் அழைப்பு.  தாமஸ் கிட்ட கேட்டேன்.  ராயர் தண்ணீரை மறுநாளே கொடுத்து விட்டாராம்.  தாமஸ் அந்த கேனைக் கொண்டு வந்து கீழே ஸ்டோர் ரூமில் வைத்திருக்கிறாராம்.  ஏன்னு கேட்டா, உங்க வீடு எப்பவுமே பூட்டியே கெடக்குங்கிறார்.  நான் இல்லேன்னதும் ஜாலியா ஊர் சுத்துறியா? 

அவன் இங்கே வரட்டும், அவனை செருப்பால் அடிக்கிறேன்.  (அதற்குப் பிறகு பேசியதை இங்கே எழுத முடியாது…)  தண்ணி கேட்டான்னு குடுத்தா நம்ம ரெண்டு பேருக்கும் விவாகரத்து வாங்கிக் குடுத்துருவான் போல இருக்கே.  நான் எங்கே வெளியே போனேன்?  இருபத்து நாலு மணி நேரமும் வீட்டிலேயே அல்லவா அடஞ்சு கிடந்து பூனைங்களுக்கு பீ மூத்திரம் அள்ளிக்கிட்டு இருக்கேன்?  அவன் வாங்கிட்டுப் போயி இருபத்தஞ்சு நாள் ஆச்சு… இருபத்தஞ்சு நாளா வீடு பூட்டிக் கிடக்காமா?  நான்தான் அவனை தினமும் பார்க்கிறேனே?

இனிமேல் குடுக்காதே சாரு.  பீரியட். 

இதோ பாரும்மா.  இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஒரு தூசு.  ஆனால் இந்தத் தூசு இல்லாமல் பிரபஞ்சம் முழுமையடையாது.  சரியா.  இது பற்றித்தான் காலையிலிருந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். 

சரி, நீ பிரபஞ்சம் பற்றிச் சொல்கிறதுனால நானும் ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்கோ.  என் பக்கத்துல எப்பவுமே மஹந்த்தா இருந்து என்னைக் காபந்து கொண்டிருக்கிறார்.  இல்லையானால் இன்னிக்குன்னு பார்த்து ஏன் எனக்கு பிஸ்லெரி கேன் பற்றிக் கேட்கணும்னு தோணணும்?  எல்லாம் மஹந்த்தாதான் பார்த்துக் கொள்றார்.  சரியா?  இனிமேல் தண்ணி, கியாஸ் எது கேட்டாலும் யார் கேட்டாலும் குடுக்காதே.

சரி.

(மஹந்த்தா என்பவர் எங்கள் மார்க்கத்தின் இப்போதைய வாழும் இறைத் தூதர்.  மானுட குலத்தையும் மற்றும் பிராணிகளையும் பிறவித் துயரிலிருந்து விடுவிக்க வந்த ஒரு இறைத் தூதர் இப்படி பிஸ்லெரி வாட்டர் கேன் பிரச்சினைக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் வர வேண்டியிருக்கிறதே என்று என் மனம் மிகவும் விசனப்பட்டது. 

சீனிக்கு ஃபோன் செய்து புலம்பினேன்.  அவர் இதற்கு சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒன்றை ஆங்கிலத்தில் சொன்னார்.  அதை என்னால் இயன்ற வரை பிழையில்லாமல் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

பர்ஸ் கீழே விழுந்து விட்டால் – அது சென்னை நகரமாக இருந்தால் – அக்கம் பக்கம் முன்னே பின்னே பார்க்காமல் குனிந்து பர்ஸை எடுக்காதீர்கள்.  Assholes, வரிசையில் வந்து நின்று நம் குதத்தைப் புணர்ந்து தள்ளி விடுவான்கள், இந்த மெட்றாஸ்காரன்கள்.