அடியேனுக்கு விஷ்ணுபுரம் விருது…

2022ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது அடியேனுக்கு வழங்கப்படுகிறது.  இது குறித்த அறிவிப்பு கீழே உள்ளது. 

இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஜெயமோகனுக்கும் மற்ற விஷ்ணுபுரம் வட்டம் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

வழக்கம் போல் இது குறித்த வசைகளும் ஆரம்பித்து விட்டன.  வசைகளை ஜெயமோகனும் நானும் பகிர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  தேகம் நாவலில் நான் எழுதியதையெல்லாம் மேற்கோள் காண்பித்துத் திட்டுகிறார்கள்.  அந்த அளவுக்கு உன்னிப்பாகப் படித்திருக்கிறார்களே என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  இனிமேல் இது போன்ற வசைகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் கூறுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.  செய்வதற்கு ஏகப்பட்ட வேலை கிடக்கிறது. 

பாராட்டி வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி.  அழகு நிலா, ரமா சுரேஷ், லோகமாதேவி, சுனில் கிருஷ்ணன், யோகேஸ்வரன் ராமநாதன், செல்வேந்திரன், நேசராஜ் செல்வம், ஆர்கே ராமகிருஷ்ணன், கண்ணன், ராம்குமார், அரங்கா, சுரேஷ் (திருவான்மியூர்), ராம்ஜி, அபிலாஷ், ஷாரா சித்தாரா, நிர்மல், ஷங்கர் பிரதாப், மனோஜ் (மும்பை), பாரதி கண்ணம்மா, ந. வெங்கட சுப்ரமணியன், விஜய் சூர்யன், ராஜா, புவனேஸ்வரி, கே. ராமசாமி, காதர், பாஸ்கரன், சரண் (சிங்கப்பூர்), மகேந்திரன், ரா. செந்தில்குமார் (ஜப்பான்), ரம்யா, ஷாஹுல் ஹமீது, சாதனா, ராஜசேகர், பார்த்தசாரதி, டெய்ஸி, அழகராஜா மற்றும் பல நண்பர்கள் வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  இவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

பொதுவாக என் கைபேசி எந்நேரமும் சலனமற்றுக் கிடக்கும்.  எனக்கு யாரும் ஃபோன் செய்ய மாட்டார்கள்.  ஒன்றிரண்டு மிஸ் யூ மெஸேஜ்கள் மட்டும் வந்திருக்கும்.  கடந்த சில ஆண்டுகளாக அவற்றுக்கு பதில் அனுப்புவதில்லை.  வேலை வேலை வேலை.  ஒரு பதில் அனுப்பினால் நம் வாழ்க்கையே காலி என்பதை அனுபவத்தால் கண்டிருக்கிறேன்.  பல சமயங்களில் மாலை நேரத்தில் என்னை அழைக்கும் அவந்திகா என்ன சாரு, உன் குரல் கரகரப்பாக இருக்கிறது, தூங்கி எழுந்தாயா என்று கேட்பாள்.  ”நேற்று மாலை உன்னோடு பேசியது.  இப்போது இருபத்து நாலு மணி நேரம் கழித்துப் பேசுகிறேன்.  அதனால்தான் குரல் அப்படித் தெரிகிறது” என்பேன். அந்த அளவுக்கு பேச்சே இல்லை.  நண்பர்களும் இல்லை.  ராகவனும் ஓய்வில் இருக்கிறார்.

ஆனால் இன்று காலையிலிருந்து வாட்ஸப்புக்கும் ஃபோன் அழைப்புக்கும் பதில் சொல்லி பதில் சொல்லி தொண்டை காய்ந்து விட்டது.  இப்போதுதான் கொஞ்சம் ஷாம்பெய்ன் அருந்தி தாக சாந்தி செய்து கொண்டிருக்கிறேன்.  உலகிலேயே ஷாம்பெய்னைத் தனியாக அருந்தும் ஒரே எழுத்தாளன் நான்தான்.   விருதைக் கொண்டாடலாம் என்றால் என் ஒரே நண்பரான சீனி மொரீஷியஸ் தீவில் உல்லாசம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.  போன மாசம் பூராவும் கடும் வேலையாம். அதற்கான இளைப்பாறல் மொரீஷியஸில்.

இன்றுதான் முதல் முதலாக ஷாம்பெய்ன் அருந்துகிறேன்.  திறக்கும்போது மேலே முகடு வரை பொங்கியது.  ஆனால் நிறைய வீண் ஆகவில்லை.  காரணம், போத்தலைக் குலுக்கினால்தான் ஷாம்பெய்ன் பறக்கும்.  வைன் எல்லாம் ஷாம்பெய்னுக்கு முன்னால் சும்மா ஜுஜுபி.  ஆனால் வைனை விட ஷாம்பெய்ன் விலை இரண்டு மடங்கு.  பாடம் பண்ணின திராட்சை ரசம் என்று போட்டிருக்கிறான்.  நம்மூரில் மது உயிருக்குக் கேடு என்று போட்டிருக்கும் அல்லவா, இந்த ஷாம்பெய்ன் போத்தலில் தினமும் அளவாகக் குடித்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஸ்பானிஷில் எழுதியிருக்கிறான்.  ஸ்பானிஷ் ஷாம்பெய்ன். 

காலையிலேயே அழைத்து வாழ்த்து சொன்னவர்கள்: ஆத்மார்த்தி, கபிலன், நற்றிணை யுகன், சுமதி (வழக்கறிஞர்), அமானுல்லாஹ், விக்ரம், ஜெகன், அரங்கா.  இவர்களுக்கு என் நன்றி.  யுகன் பேசும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.  வாழ்வில் எந்த ஒரு தருணத்தில் இந்த அளவுக்கு நான் உணர்ச்சிவசப்பட்டதில்லை என்று சொல்லி ஒருக்கணம் நிறுத்தினார்.  இருவராலும் சற்று நேரம் பேச முடியவில்லை.  யுகன், ஒருபோதும் அந்தத் தருணத்தை நான் மறக்க மாட்டேன்.

இப்போது எனக்கு வாழ்த்து சொன்ன உங்கள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள் ஒன்று உண்டு. நீங்கள் அனைவரும் டிசம்பர் மூன்றாம் வாரத்தின் இறுதியில் கோயம்பத்தூரில் நடக்கும் விருது வழங்கும் விழாவுக்கு வருகை தர வேண்டும்.  இலக்கிய உலகில் எனக்கு எக்கச்சக்கமான எதிர்ப்பு இருந்தாலும் மூன்று புத்தக வெளியீட்டுக் கூட்டங்களை சென்னையின் பிரம்மாண்டமான காமராஜர் அரங்கில் நடத்திக் காட்டியவர்கள் என் வாசகர்கள்.  பொதுவாக வைரமுத்து போன்றவர்களுக்குத்தான் அந்த அரங்கத்தில் கூட்டம் நடக்கும்.  அதேபோல் எல்லோரும் கோயம்பத்தூருக்கு டிசம்பர் மூன்றாம் வார இறுதியில் வர வேண்டும். 

ஒரு படத்தில் சிரிப்பு நடிகர் செந்திலிடம் ஒரு ரகசியத்தைச் சொல்லி விட்டு இதை யாரிடமும் சொல்லி விடாதே என்று சொல்வார் கவுண்டர்.  அப்போது செந்தில் அடிக்கும் லூட்டி மாதிரிதான் ஆகியது என் கதை.  காரணம், விருது செய்தியை ஜெயமோகன் என்னிடம் இரண்டு மாதங்கள் முன்பே சொல்லி விட்டார்.  எனக்கோ ரகசியம் காக்க முடியாது.  அதே சமயம், ரகசியத்தைக் கசிய விட்டு ஜெயமோகனின் கோபத்துக்கும் ஆளாக முடியாது.  அப்படிக் கசிய விடுவது தப்பு வேறு.  விருதை அளிப்பவர்கள்தானே அதை முதலில் அறிவிக்க வேண்டும்?  அதுதானே அறம்?  எனக்கோ ரகசியம் காக்க முடியாது.  விளைவு, ரெண்டு மாதமாக ஒரே பதற்றம்.    இருந்தாலும் ஒரே ஒருவரிடம் ரகசியத்தைச் சொல்லி விட்டேன்.  அவரும் ஜெயமோகனுக்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை என்பது நான் செய்த அதிர்ஷ்டம். 

ஜெயமோகனிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.  புகைப்படக் கலைஞர்கள் என்னை photographers’ delight என்று சொல்வர்.  என்னுடைய போட்டோ ஒன்றைப் போட்டிருக்கிறீர்கள் அல்லவா? அதைவிட அசடு ஃபோட்டோ வேறு எதுவும் கிடையாது.  தேடித் தேடி இந்த ஃபோட்டோவை எடுத்தீர்களா?  முடிந்தால் கொஞ்சம் நல்ல ஃபோட்டோவைப் போடவும்.  இதோ சில:  

டெட்டியுடன்