சார்,
உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு எந்தவித இசை அறிவும் கிடையாது.
பின்வரும் இரு பாடல்களும் எனக்கு ஒரே மாதிரி தெரிகின்றன.
நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டதற்காக மன்னியுங்கள்.
சாபம் ஏதும் தரவேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி!
லெனி
டியர் லெனி,
நான் ஏன் சாபம் தரப் போகிறேன்? ஒன்று தெரியுமா உங்களுக்கு? நான் யாருக்குமே இதுவரை சாபமே தந்ததில்லை. ஏனென்றால், எனக்குக் கிடைக்கும் தீமைகள் அனைத்தையும் நான் இறை சக்தி எனக்குத் தரும் அனுபவங்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன். மட்டுமல்லாமல் நான் என்ன வினை செய்தேனோ (இப்பிறவியிலோ முற்பிறவியிலோ) அதற்கான பலனைத்தான் (கர்மா) அறுவடை செய்து கொண்டிருக்கிறேன் என்று நம்புபவன் நான்.
ஆனால் எனக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள் என்னைத் திட்டாதீர்கள் என்றே தொடங்குகின்றன. எப்போதாவது யாரையாவது நான் திட்டியிருக்கிறேனா?
சரி, திருச்சிற்றம்பலம் பாடலைக் கேட்ட உடனேயே எனக்கு அடுத்த வீட்டுப் பெண் பாடலான கண்ணாலே பேசி பேசி ஞாபகம் வந்து விட்டது. ஆனாலும் எழுதவில்லை. ஏனென்றால், இசையில் இது மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இளையராஜாவின் பிஜிஎம்மில் ஏராளமான மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் பக்கங்களைக் காண முடியும்.
உங்களுக்கு இசை அறிவு இல்லை என்கிறீர்கள். இருந்தாலும் இரண்டு பாடல்களையும் சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுகிறேன்.
இறுதியாக, வாழ்வையும் வாழ்வு தரும் துக்கங்களையும் சாபம் என்று பார்க்காதீர்கள். எல்லாமே அனுபவம்தான். என்னுடைய சோதிடக் கட்டங்களைப் பார்க்கும் சோதிடர்கள் அதிர்ந்து போவதைப் புன்சிரிப்புடன் பார்ப்பது என் வழக்கம். இப்படியும் ஒரு கஷ்டமா மனிதனுக்கு என்று அதிர்வார்கள் அவர்கள். என் துயரங்களை, வருத்தங்களை எழுத்து என்ற ஒரே மந்திரக் கோல் கொண்டு வருடினேன். எல்லாமே பூத்துக் குலுங்கும் மலர்களாக மாறி விட்டன.
ஒவ்வொரு மனிதனின் கையிலும் அப்படி ஒரு மந்திரக் கோல் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்து விட்டால் உங்கள் வாழ்வு வரமாக மாறி விடும் அதிசயத்தைக் காண்பீர்கள்.
சாரு