சாருவுக்கு வாழ்த்துகள்
நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன்.
இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ் இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில் ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் நால்வரைப் பற்றிய செய்திகளையும் கட்டாயமாகச் சேர்க்கச் சொல்வேன். “நமக்கு ரஜினி, கமல் பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். இண்டஸ்ட்ரிக்கு அவர்கள் முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள்!” என்று சகாக்களிடம் சொல்வேன். எட்டாண்டுகளில் ஒருமுறைகூட இது தவறியது இல்லை. அடிதடிகள் தனிக்கதை.
சாருவுக்கு இணையாக அபுனைவு எழுத்துகளை சுவாரஸ்யமாக எழுதும் ஒருவர் தமிழில் இன்று இல்லை என்பது என்னுடைய உறுதியான முடிவு. தமிழில் முழு காஸ்மோபாலிடன் எழுத்தாளர் என்றும் அவரையே நான் சொல்வேன். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் விருது’ சாருவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு தாதா இன்னொரு தாதாவுக்கு கேக் அனுப்புவதான உணர்வை இன்று காலை தந்தது.சாருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!-
ஒரு சின்ன காமெண்ட்
என்னுடைய ஆதரசங்கள் இவர்கள் (ஜெயமோகன், எஸ்.ரா., சாரு, மனுஷ்யபுத்திரன்) இல்லை என்ற சமஸின் வாக்கியத்தை நான் மிகவும் ரசித்தேன்.
ஒரு எழுத்தாளன் மற்றவர்களுக்கு ஆதர்ஸம் ஆக வேண்டுமானால் அவன் உயிரோடு இருக்கக் கூடாது என்ற மரபு தமிழில் இருந்து வருகிறது. புதுமைப்பித்தன் இன்று பல எழுத்தாளர்களின் ஆதர்சம். எனக்கும்தான். ஆனால் அவர் உயிரோடு இருந்த போது ஒருத்தர் கூட சீந்தவில்லை. க.நா.சு. கூட ஏதோ போனால் போகிறது என்றுதான் ஒரு வரி பாராட்டாக எழுதிப் போகிறார். மௌனியோ பு.பி. பற்றி அந்த அளவு கூட எழுதவில்லை. பித்தனின் அடுத்த தலைமுறைக்குத்தான் பித்தன் ஆதர்சமாக இருந்தான். நிச்சயமாக நான் சமஸின் மகனுக்கோ மகளுக்கோ ஆதர்சமாக இருப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியாத தமிழ்ப் பத்திரிகையாளர் சூழலில் எழுத்தாளர்களைக் கொண்டாடியவர் சமஸ். ஆனால், ஃப்ரான்ஸிலோ மற்ற ஐரோப்பிய நாடுகளிலோ, ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ உள்ள எந்த ஒரு வாசகரும் அந்த தேசத்தில் தற்போது உயிரோடு வாழும் முக்கியமான நான்கு எழுத்தாளர்கள் எனக்கு ஆதர்சம் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். உதாரணமாக, மெக்ஸிகோவில் யாருமே கார்லோஸ் ஃபுவெந்தஸையோ ஒக்தாவையோ பாஸையோ அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் “இவர்கள் எங்களுக்கு ஆதர்சம் இல்லை” என்று சொன்னதில்லை. ஒருத்தர் கூட சொன்னதில்லை. ஒவ்வொரு தேசத்திலும் அப்படித்தான்.
இன்று கூட என் சக எழுத்தாளர் ஒருவர் சாரு எழுத்தாளரே இல்லை என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதி, என்னுடைய அ-புனைவுகள் முக்கியமானவை என்கிறார்.
என்னுடைய அபுனைவுகள்தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. சமஸும் மற்றும் பல நூறு நண்பர்களும் அதையேதான் சொல்கிறார்கள். சரி, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார், அதையாவது சொல்லுங்கள்? உங்கள் ஆதர்சங்கள் யார்? சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்.
இன்றைய தினம் சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி உலகின் விளிம்பு நிலை எழுத்தாளர் என்று கொண்டாடப்படுகிறார். அவருடைய போஸ்டாஃபீஸ் என்ற நாவலை விட என்னுடைய ராஸ லீலா சிறந்தது என்பதை இந்த இரண்டு நாவலையும் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இன்றைய தினம் உலகமே சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஹாருகி முராகாமியை விடவும் நான் சிறந்த எழுத்தாளன். முராகாமி எழுதிய நாவல்களிலேயே அவருடைய முக்கியமான நாவலாகக் கருதப்படும் நார்வேஜியன் வுட்டை விட எக்ஸைலும் காமரூப கதைகளும் ராஸ லீலாவும் நல்ல நாவல்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இங்கே நம்மைப் பற்றிப் பேச ஆளில்லை. பேசுகின்ற நண்பர்களும் “இவர்கள் எங்கள் ஆதர்சம் இல்லை, இவர்களின் புனைவுகளை விட கட்டுரைகள்தான் எனக்குப் பிடித்தமானவை” என்று சொல்கிறார்கள்.
இருந்தாலும் சமஸுக்கு நன்றி. என் நலனை விரும்பும் ஒருசில நண்பர்களில் சமஸ் முக்கியமானவர். இலக்கியத்தை நோக்கிய ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கருதியே இதையும் சொல்லி வைத்தேன். ”இதென்னடா வம்பாப் போச்சு, இவரை வாழ்த்தினாலும் திட்டுகிறார்” என்று நினைத்து விட வேண்டாம். சமஸ் என்பதால் உரிமை எடுத்துக் கொண்டேன்…