இதை நான் எழுதியதாகவும் கொள்ளலாம். இப்படி நான் பகிர்வதனால் இதற்கு இப்போதைய போர்ச் சூழலில் வேறு அர்த்தங்களும் கற்பிக்கப்படும். ஒரு தோழர் ஜெயமோகன் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்த விருதை சாருவுக்குத் தருகிறார் என்று எழுதியிருந்தார். மிகவும் ரசித்தேன். எனக்கு விருது கொடுத்துத் தன்னை பலப்படுத்திக் கொள்ளும் நிலையிலா இருக்கிறார் ஜெயமோகன்? கற்பனைக்கும் ஒரு எல்லை வேண்டாமா?
நான் எழுதியிருந்தால் இந்தக் கட்டுரையின் கடைசிப் பத்தியை மட்டும் எழுதியிருக்க மாட்டேனாயிருக்கும். அந்த இடத்தில் தனுஷ் பெயரைப் போட்டிருப்பேன். ஹாலிவுட்டில் கூட மை டாமில் ஃப்ரெண்ட் என்று சொல்ல வைத்தவர் அல்லவா தனுஷ்?
ஜெ. கட்டுரையில் சொல்லப்படும் மேட்டுக்குடி ஆட்களை நான் தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்று கூட அப்படி ஒரு மேட்டுக்குடி இளைஞன் (வயது 25) ஒரு விஷயம் கேட்டான். அம்மா, அப்பா, பிள்ளை (மேலே குறிப்பிட்டவன்) மூவரும் நானுமாக காலையில் காரில் வந்து கொண்டிருந்தோம். பெண்மணி என் வாசகி. அவர் “வாழ்த்துகள்ப்பா, விஷ்ணுபுரம் விருதுக்கு” என்றார். உடனே இளைஞன் “விஷ்ணுபுரம்ங்கிறது ஊர் பேரா?” என்றான். இல்லடா, ஜெயமோகன் எழுதின நாவலோட பேர் என்றார் அம்மா. உடனே மகன் சொன்னான், “ஓ, அங்கிளோட ரைவல்தானே, அவரா?”
பையனுக்கு இத்தாலோ கால்வினோ தெரியும். ஆனால் என்னையும் ஜெயமோகனையும் தெரியாது. ஏனென்றால், பையன் திக்கித் திக்கித்தான் தமிழ் படிப்பான். அப்படிப்பட்டவனுக்கே எனக்கு ரைவல் ஜெயமோகன் என்று தெரிந்திருக்கிறது.
என்ன இருந்தாலும் அந்த விஞ்ஞானி சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. ஞானபீடப் பரிசு ஏன் தமிழுக்குக் கிடைக்கவில்லை என்பதற்கான காரணங்களை விளக்கி மேடையில் கர்ஜித்து விட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். உடனே என் பக்கத்தில் இருந்த விஞ்ஞானி “ஜெயமோகனும் நீங்களும் சண்டை போடுவதை நிறுத்தி விட்டால் உடனே ஞானபீடம்தான் சார்” என்றார். இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி. அவருக்கே எங்கள் விஷயம் தெரிந்திருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவர் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. இருந்தால் போன் பண்ணி, விஷ்ணுபுரம் விருது கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்லலாம்.
பலரும் மம்மி ரிட்டர்ன்ஸ் பற்றிப் பேசுகிறார்கள். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் வரும் சூர்யா ஒரு இடத்தில் ஒரு இறைவியின் சிலையை அவமதிக்கிறான். எப்படி அவமதிக்கிறான் என்று கூட இப்போது என்னால் எழுதத் துணிய மாட்டேன் என்கிறது. இப்போது மைலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணி அம்மன் கோவிலில்தான் பழியாய்க் கிடக்கிறேன். அமெரிக்காவிலிருந்து என் வளர்ப்பு மகள் வித்யா சுபாஷ் வந்திருந்த போது அவளோடு கேசவ பெருமாள் கோவில், மாதவ பெருமாள் கோவில் என்று போய் பெருமாளை சேவித்தோம். ஒவ்வொரு கோவிலிலும் அரை மணி நேரம் போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
முன்பெல்லாம் என் விலாசமே டென் டௌனிங் பப் அல்லது பார்க் ஷெரட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பார் என்று இருந்தது. இப்போது கோவில்.
என்ன செய்யலாம்? நான் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருக்கிறேன். ஒன்றும் பண்ண முடியாது.
இணைப்பில் ஜெ. கட்டுரை.
தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
ஒரு பின்குறிப்பு: ஸ்ரீதர் சுப்ரமணியனின் ஓரிரு கட்டுரைகள் பிடித்திருந்தன. ஆனால் போகப் போக அப்படி இல்லை என்பதால் ஃபேஸ்புக்கில் இப்போது அவரை நான் ப்ளாக் பண்ணி விட்டேன். ஜெ.வின் கட்டுரையை இங்கே நான் பகிர்ந்ததற்குக் காரணம், சென்னையின் மேட்டுக்குடியினர் செய்யும் கலாச்சார அட்டூழியங்களே. இதில் ஒரே ஒருவர்தான் விதிவிலக்கு. ஆர்க்கே ராமகிருஷ்ணன். கர்னாடக சங்கீதத்துக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்த செயல்வீரர் தமிழின் சமகால இலக்கியத்தின் தீவிர வாசகர். (ஜெயமோகன் பள்ளி!) என்னுடைய பள்ளியில் மேட்டுக்குடி என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவரை மேட்டுக்குடியே தள்ளி வைத்து விட்டது. இன்னொருவர் ஜெ. பள்ளியில் சேர்ந்து விட்டார். ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. “நீங்கள் ஜெயமோகனைப் பார்த்தால் அவரோடு சேர்ந்து விடுவீர்கள்” என்றேன். பார்த்தார். சேர்ந்து விட்டார்.