டால்ஸ்டாய் எழுதிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் Andrew Gide உம் எழுதிக்கொண்டிருந்தார். ஆந்த்ரே ஜீத்-இன் நாவல்கள் அதுவரை இலக்கியத்தில் இருந்த ஒழுக்க மதிப்பீடுகள் எல்லாவற்றையும் கவிழ்த்தவை.அவருடைய சில நாவல்கள் pedaresty எனப்படும் சிறுவர்களுடனான உறவை நேரடியாக விதந்தோதியவை. அது அவருடைய அரேபியக் கலாச்சரத் தொடர்பினால் ஏற்பட்ட பாதிப்பு என்கிறார்கள்.
மேலும் தன் பால் உறவை ஒரு லட்சியமாக முன் வைத்தவை அவர் நூல்கள். அது ஒரு கிரேக்கக் கலாச்சாரப் பாதிப்பு என்று சொல்லலாம். டால்ஸ்டாய் பிரஞ்சிலிருந்து வரும் இந்த ‘ஒழுக்கக் கேடின்’ அலை குறித்துக் காட்டமாய் எழுதியிருக்கிறார். மாப்பசான் ,ஷேக்ஸ்பியர் போன்றவர்களை அவர்கள் கதைகளில் காணப்படும் ஒழுக்கமின்மை அறமின்மை காரணமாக முற்றிலும் நிராகரிக்குமளவுக்கு அவர் போனார்.
சாரு நிவேதிதாவின் மீது வைக்கும் எதிர்வினைகளில் பெரும்பாலும் இருவகை.
1.அவர் கதைகளில் வரும் ஒழுக்க மதிப்பீடுகள் அல்லது அவற்றின் இன்மை நமக்குக் கொடுக்கும் அதிர்ச்சி.2.மரபான ஒரு இலக்கிய வடிவில் அவர் தனது கதைகளைச் சொல்லாதது.3.அவரது ஆளுமைக் கோளாறுகள்.விசித்திரங்கள்.முரண்பாடுகள்.குட்டிக்கரணங்கள்.தன் முனைப்பு.மெகலோ மேனியா.தனி மனிதர்களுக்கு அவர் இழைத்த துரோகங்களும் கூடதான்.
ஒரு பிரதியை நான்கு வகைகளில் நாம் அணுகலாம் என்று இலக்கிய விமர்சகர் M H Abrams தனது The mirror and the lamp நூலில் சொல்கிறார்.கண்ணாடியின் வேலை முன்னுள்ளவற்றை அப்படியே காட்டுவது.இருளையும் ஒளியையும் அப்படியே சேர்த்து.விளக்கின் வேலை இருளை ஒளியாக்கிக் காட்டுவது.
ஆந்த்ரே ஜீத்-க்கு 1947 ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.1952 இல் கத்தோலிக்கத் திருச்சபை அவர் புத்தகங்களைத் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் வரிசையில் சேர்த்தது.
நம் எல்லோருக்குள்ளும் எழுத்தாளன் ஒரு ஆசிரியன் என்று ஒரு எண்ணம் மறைவாகவோ வெளிப்படையாகவோ இருக்கிறது.ஒரு ஒழுக்க போதனை வாத்தியார்.இந்த வாத்தியார் ஒரு மரபான மதஒழுக்க வாத்தியாராகவோ மார்க்சிய வகுப்புகள் எடுக்கும் காம்ரேடாகவோ இருக்கலாம்.
இலக்கியம் – குறிப்பாக நவீன இலக்கியம் – இந்தப் பொறுப்புகளைத் துறந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டது.உண்மையில் நவீன இலக்கியத்தின் முதல் உடைப்பான மேடம் போவரியே இந்த மீறலிலிருந்து உருவாகியதுதான்.
நம்முடைய இந்த எதிர்வினைகள் ஒருவகையில் குளியலறையில் நம் நிர்வாணத்தை நாம் காணக்கூசுவது போன்றது.சாருவின் எக்ஸைல்,எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் போன்ற நூல்களை இன்று நினைவு கூரும்போது அவை எப்படி இன்றைய சமூகத்தை அதன் சிதறல் போதத்தை முன்கூட்டியே சரியாகக் கணித்துச் சொல்லிவிட்டன என்று வியப்பு ஏற்படுகிறது.
இலக்கியத்தின் பிரதான பணிகளில் மூன்று.
ஒன்று அதன் சமகாலத்தைப் பிரதிநிதித்துவப் படுவது.எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வது.ஒரு லட்சிய உலகக் காட்சியை உருவாக்குவது. நாம் நமது பள்ளிக்கூடப் பழக்கத்தினால் கடைசிப் பணியைத்தான் இலக்கியத்தின் ஒரே பணி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.இலக்கியம் எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.கு.அழகிரிசாமி எழுதும் அதே காலத்தில்தான் புதுமைப் பித்தனும் எழுதிக்கொண்டிருப்பார்.கரிச்சான் குஞ்சும் எழுதிக்கொண்டிருப்பார்.