விருதும் வாழ்த்தும்…

டியர் சாரு,

விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு இந்த ஆண்டு அளிக்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை வாட்ஸப்பில் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் உங்கள் ப்ளாகில் இதற்காக உங்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவிக்காத சில நண்பர்கள் பற்றி வருத்தப்பட்டு அதெல்லாம் நாடக நட்பு என்று வர்ணித்திருந்தீர்கள்.  நீங்கள் இப்போது இருக்கும் உயரத்தில் இது பற்றியெல்லாம் மனதில் எடுத்துக் கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  யார் வாழ்த்து அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால் என்ன என்ற மனநிலையில்தானே நீங்கள் இப்போது இருக்க வேண்டும்?  மற்ற பல விஷயங்களில் மிக ஆழ்ந்த மௌனத்தை வெளிப்படுத்தும் நீங்கள் இந்த உப்புப் பெறாத விஷயத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாவது சாருவின் குணாதிசயத்துக்கு எதிராக உள்ளது.  தவறு இருந்தால் மன்னிக்கவும்.  உங்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையைத் தங்கள் உள்வட்ட நண்பர்களுக்கு நீங்கள் தந்திருப்பதால் இதைக் கேட்கிறேன்.

ஆனந்தி, சென்னை.

டியர் ஆனந்தி,

நீங்கள் கேட்பது சரிதான்.  நூற்றுக்கு நூறு சரி.  ஒரு மூத்த எழுத்தாளன் – வாழ்வில் எழுபது ஆண்டுகளைக் கழித்திருப்பவன் – அப்படித்தான் இருக்க வேண்டும்.  ஆனால் என் மன அமைப்பு அப்படிப்பட்டதல்ல என்பதை அராத்து, வளன் போன்ற நண்பர்கள் என்னைப் பற்றி எழுதியிருப்பதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

வாழ்த்துவதும், வாழ்த்து அனுப்பாமல் இருப்பதும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம்.  ஆனால் என்னோடு ஃபோனிலோ நேரிலோ பேசும்போது உலகில் என்னை யாருமே பாராட்டாத அளவுக்குப் பாராட்டி விட்டு, இப்படி ஒரு விருது வந்ததும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்னை அவமதிப்பதாக நினைக்கிறேன்.  அப்படி வாழ்த்து அனுப்பாத ஆள் என்னோடு பேசும்போது ஆஹா ஓஹோ என அளக்கக் கூடாது.  நீங்கள் என்ன சொன்னாலும் நம்பக் கூடிய ஆள் நான்.  அது ஊருக்கே தெரியும்.  அப்படிப்பட்ட என்னை வார்த்தைகளால் ஏமாற்றக் கூடாது. 

புக்கர் பரிசே உங்கள் தகுதிக்குக் கம்மி, இத்தனை காலத்துக்குள் உங்கள் பெயர் குறைந்த பட்சம் ஆசிய கண்டத்திலாவது பிரபலம் ஆகியிருக்க வேண்டாமா, ஹாருகி முராகாமி எல்லாம் உங்கள் முன் தூசு என்றெல்லாம் தேன்மாரி பொழிந்து என்னை குளிப்பாட்டி விட்டு, இப்போது எனக்கு ஒரு விருது அளிக்கப்படும்போது வாழ்த்துகள் என்று ஒரே ஒரு வார்த்தை வாட்ஸப் பண்ண முடியாவிட்டால் என்னய்யா அர்த்தம் என்பதுதான் என் கேள்வி.  கேட்டால் எனக்கு வயிற்று வலி, என் மகனுக்கு முதுகு வலி என்று காரணம் சொல்வது.  ஆனால் ஃபேஸ்புக்கில் பார்த்தால் மணிக்கு ஒருமுறை பதிவுகளை அள்ளி விடுகிறார்.

சென்ற ஆண்டு கொரோனா தீவிரமாக இருந்த போது என் நெருங்கிய தோழிக்குக் கொரோனா.  மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டார்.  மருத்துவமனையில் இருந்த அவரிடமிருந்து ஒரு செய்தி:  போய் வருகிறேன் சாரு.  அநேகமாக இதுதான் என் கடைசிச் செய்தியாக இருக்கும்.  எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை.  எல்லாமே நிழல் போல் தெரிகிறது.  விடை பெறுகிறேன். 

நேரில் கூட சென்று பார்க்க முடியாத நிலை.  இரண்டு நாட்கள் கழித்து பிழைத்து விட்டார் என்ற செய்தி வந்தது.    

ஆனால் ஹாருகி முராகாமியே உங்கள் முன் தூசு என்று நாடக வசனம் பேசுபவருக்கு ஒரு வாழ்த்து அனுப்ப நேரமில்லை.   

அட, என் நட்பை நீங்கள் பேண வேண்டும் என்று விரும்பினால் குறைந்த பட்சம் நடிக்கவாவது தெரிய வேண்டாமா?  நேரில் பார்த்தாலோ போன் செய்தாலோ தேன்மாரி.  அதே சமயம், என் வாழ்வின் ஒரு முக்கியமான தருணத்தில் பன்றி வாயைப் போல் மூஞ்சியை சுருக்கிக் கொள்வது.  இதை எப்படி நான் புரிந்து கொள்வது? 

அதனால்தான் சொன்னேன், இந்த விருதை முன்வைத்து என் நண்பர்கள் யார், நண்பர்களைப் போல் நடிப்பவர்கள் யார் என்று புரிந்து கொண்டேன் என்று. 

ஒருத்தர் ஃபேஸ்புக்கில் பதிவு போடுகிறார்.  நான் அந்த கோஷ்டியும் இல்லை, இந்த கோஷ்டியும் இல்லை. 

சரி, வாழ்த்து அனுப்பினால் என்னய்யா குறைந்து போய் விடுவீர்?  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஒருமுறை ஏதோ ஒரு புத்தகம் கேட்டு ஃபோன் செய்த போது, உங்களுடைய பாதிப்பில்தான் சார் நான் பதிப்பகமே ஆரம்பித்தேன் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.  அதையும் நான் பூரணமாக நம்பி, என் நண்பர்கள் ஒரு அம்பது பேரிடமாவது சொல்லி அவர்கள் எல்லோருமே என்னை லூசு லூசு என்று திட்டும்படி ஆனது.  ஏனென்றால், அவர் சொல்வது பொய் என்று அவர்களுக்குத் தெரிகிறது.  ஆனால் நான் அவர் உண்மை சொல்கிறார் என்று நம்புகிறேன். இப்போது பார்த்தால் என்னுடைய பாதிப்பால் பதிப்பகம் ஆரம்பித்தவர் “நான் அந்த கோஷ்டியும் இல்லே, இந்த கோஷ்டியும் இல்லே, நடுவாந்திரம்” என்று ஃபேஸ்புக்கில் எழுதுகிறார்.  என்னால் பதிப்பகம் ஆரம்பித்தவருக்கு எனக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோன்றவில்லை.   

இதையெல்லாம் எழுதும் போது எனக்கு ஒன்று புரிகிறது.  என்னை எப்போதும் காய்ந்து கொண்டிருப்பவர்கள், வாழ்த்து அனுப்பவில்லை என்று திட்டுகிறார் என்றே இதையும் புரிந்து கொள்வார்கள்.  அந்த மரமண்டைகள் மேலே உள்ளதை மீண்டும் படிக்க வேண்டும். 

இன்னொரு நண்பர்.  அவருடைய புது அலுவலகத் திறப்பு விழாவுக்கு அழைத்தார். சரி, நம்மையும் மதித்து அழைத்திருக்கிறாரே என்று நெடுந்தொலைவு போய் வந்தேன்.  அவரும் வாழ்த்துச் செய்தி அனுப்பவில்லை.  என்னய்யா இது?  உங்கள் விசேஷத்துக்கு அரை நாள் செலவழித்து வந்திருக்கிறேன்.  என் வீட்டிலிருந்து அவர் அலுவலகம் பதினைந்து கிலோமீட்டர் இருக்கும்.  ஆனால் வாட்ஸப்பில் ”வாழ்த்துகள்” என்று ஒரே ஒரு வார்த்தை அனுப்ப வலிக்கிறதா?  சரி, அப்படியானால் உம்முடைய விசேஷத்துக்கு ஏன் என்னை அழைக்கிறீர்? 

என்னுடைய எழுத்தை குப்பை என்று சொல்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை.  ஆனால் நேரில் பார்க்கும் போது ஹாருகி முராகாமியெல்லாம் உங்கள் கால் தூசு என்று சொல்லி இளித்து விட்டு, எனக்கு ஒரு கௌரவம் கிட்டும் போது கள்ள மௌனம் சாதிப்பதை மட்டுமே விமர்சிக்கிறேன்.  இந்த ஆஷாடபூதிகளை இப்போது நான் புரிந்து கொண்டேன்.  அவ்வளவுதான்.  அதற்கு மேல் இதில் எதுவும் இல்லை. 

சாரு