பாறை

அடிக்கடி ஜெயமோகனை முன்னுதாரணமாகக் காண்பித்துக் கொண்டிருப்பார் என் ஆருயிர் நண்பர் ஒருவர்.  நிறைய மதிப்பெண் வாங்கும் பக்கத்து வீட்டுப் பையனை அடிக்கடி உதாரணம் காட்டும் ஓர் உன்னதத் தாயின் மனநிலையிலேயே இருப்பவர் அந்த நண்பர் என்பதால் அவர் சொல்வது எதையும் நான் காதில் போட்டுக் கொள்வதில்லை.  இருந்தாலும் அவரது பேரன்பின் காரணமாக அவரும் சொல்வதை நிறுத்துவதில்லை.  அப்படி அவர் சொல்லும் ஒரு விஷயம், ஜெயமோகன் ஒரு பாறை மாதிரி.  அவர் யார் கருத்தையுமே கேட்க மாட்டார்.  அவர் வைத்ததுதான் சட்டம்.  அவர் பேச்சைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும்.  

உங்களுக்கு எப்படித் தெரியும் என்று குறுக்கிட்டால், அதற்கும் நாம் நம்புகிறாற்போல் மிகச் சரியான பதிலைச் சொல்லி விடுவார்.  சரி, இதை எதற்கு என்னிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டால், நீங்களும் ஜெ. மாதிரி இருங்கள், யார் பேச்சையும் கேட்காதீர்கள், உங்களை வெகு சுலபமாக உங்கள் நண்பர்கள் மனம் மாற்றி விடுகிறார்கள் என்பார்.    

இதில் என்ன உள்குத்து என்றால், நான் சீனி பேச்சைக் கேட்கிறேன் என்பதுதான் நண்பரின் பிராது.  இங்கேயும் தாய் மனநிலைதான்.  ”நீ நல்ல பிள்ளைதான், அந்த சீனிதான் உன்னைக் கெடுக்கிறான்” மனோபாவம். 

நான் சீனி பேச்சைக் கேட்பேன்தான்.  எதில்?  சென்னையில் மீன் குழம்பு எங்கே கிடைக்கும்?  நல்ல ஐஸ் க்ரீம் எங்கே கிடைக்கும்?  இன்ஸ்டாமார்ட்டைப் பயன்படுத்துவது எப்படி?  கூலர்ஸ் என்றால் என்ன?  எங்கே கிடைக்கும்?  சீலே செல்வதற்கு மலிவான டிக்கட் எங்கே கிடைக்கும்?  (ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னெஸில் ஜீனியஸ் என்று பெயர் வாங்கியிருக்கும் என் மகன் கார்த்திக் எனக்குப் பரிந்துரை செய்த டிக்கட்டை விட முப்பதாயிரம் ரூபாய் கம்மி விலையில் டிக்கட் போட்டார் சீனி!)

-இது போன்ற விஷயங்களில் மட்டுமே சீனியின் பேச்சைக் கேட்பேனே தவிர மற்ற விஷயங்களில் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.  ஆகவே நான்தான் பாறை என்ற உதாரணத்துக்குத் தகுதியான ஆள்.  ஆனாலும் சில பல வேளைகளில் புனைகதைகளில் வண்டி ப்ரேக்டவுன் ஆகும் போது சீனியைத்தான் ஆலோசனை கேட்பேன்.

மேற்படி உரையாடல் முடிந்த பிறகு நண்பர் தியாகராஜா நாவலைப் பற்றி விசாரித்தார்.  சொன்னேன்.  ”சரி, எழுதியது வரை அனுப்பி வையுங்கள்,  என்னென்னவெல்லாம் மாற்றம் செய்யலாம் என்று ஆலோசனை சொல்கிறேன்” என்றார்.  இந்த விஷயம் பற்றி சீனியிடம் ஒருபோதும் வாய் திறக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். 

ஆனால் தியாகராஜா நாவலுக்கு நான் எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து வந்த ஒரு குறிப்பு நாவலின் போக்கையே மாற்றக் கூடிய அளவில் உதவியது.  அஜிதனுடன் நான் கொண்ட சில மின்னஞ்சல் பரிமாற்றங்களும் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம் பற்றி அஜிதன் எழுதிய குறிப்புகளுமே அவை.  அது என்ன என்பதை இப்போதே சொல்லி விட்டால் சுவாரசியம் போய் விடும்.  நாவல் வரும்போது பார்க்கலாம்.

எனக்கு சொல்லப்பட்டபடி ஜெ. ஒரு பாறை அல்ல என்பதை அவரே எழுதியிருக்கிறார்.