தயிர்வடை சென்ஸிபிலிட்டியும் , தயிர்வடையும் : அராத்து

முள் சிறுகதை விமர்சனம் மற்றும் சாரு நிவேதிதாவுடன் உரையடல் நிகழ்வை முன்வைத்து சாரு எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். அப்படி என்னடா சாருவை மடக்கி விட்டார்கள் என இப்போதுதான் அந்த காணொலியைப் பார்த்தேன்.

எடுத்த உடனே தெரிந்து விட்டது, சுதந்திர தினம் கொண்டாடி மிட்டாய் சாப்பிட்டு , எங்கள் தேசம் பாரத தேசம் என சிறுமிகள் உற்சாகத்துடன் பேச்சுப்போட்டியில் பேசி கொண்டாடுவதைப் போன்ற ஒரு நிகழ்வு என. சாருவுக்குத்தான் தொடர்ந்து இப்படி மாட்டும்.

சரி, அதனால் என்ன, ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. அந்த வகையில் ஒரு நல்ல நிகழ்வுதான் இது. சரி அந்தப் பெண்மணி சாருவை மடக்கிய கேள்வி என்ன என்று பார்ப்போம். அதிலும் அந்தக் கேள்வியால் விழுந்த சாரு அதன் பிறகு எழுந்துகொள்ளவேயில்லையாம்.

“உங்களை கொண்டாடும் வாசகர்கள் , உங்களை எதிர்க்கும் வாசகர்கள் – இவர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

ஆஹா என்ன அட்டகாசமான மடக் மடக் கேள்வி. சாரு சபை நாகரீகம் கருதியும் , ஒரு மரியாதைக்காகவும் , உற்சாகப்படுத்தும் பொருட்டும் – “முதல் கேள்வியே கஷ்டமா இருக்கே என” ஆரம்பிக்கிறார். சச்சினுக்கு ஒரு பள்ளி மாணவன் பௌலிங்க் போட்டால் – “டேய் என்னடா மொத பால்லயே மெரட்டர “ என சச்சின் சொல்வது போன்றது இது.

இது அவர்களுக்குப் புரியவில்லை. மேலும் இதெல்லாம் சாரு போன்ற எழுத்தாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியே அல்ல. அவ்வளவு மொக்கையான க்ளீஷேவான தேய்ந்து கந்தலாகிப்போன “ஸ்க்ராட்ச் பைட் “ கேள்வி இது. நானாக இருந்தால் , எதிர்கொள்வது என்றால் என்ன என்று கேட்டிருப்பேன்.

எனக்கு பொதுவாக இலக்கிய ஆர்வம் உள்ள என் ஆர் ஐ பெண்மணிகள் என்றால் அலர்ஜி. இவர் என் ஆர் ஐயா எனத் தெரியவில்லை. இப்படித்தான் ஒரு என் ஆர் ஐ இலக்கிய சீமாட்டி ஜெயமோகனை திட்டி – கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என முடியும்படி ஒரு வசை கட்டுரை எழுதி தனக்கு நலங்கு வைத்துக்கொண்டார். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை சீண்டவே இல்லை. அவர் வாசகர்கள் கூட ஒரு சின்ன எதிர்வினை கூட வைக்கவில்லை. நான் அதை எதிர்த்து அப்போது கட்டுரை எழுதினேன். என்ன செய்வது ? ஜெமோ குழு போல ஜெண்டிலாக இருக்க சாரு குழுவிற்கு இயலவில்லை.தன்மையை மாற்ற முடியுமா?

ஆனால் ஒன்று, இப்படி அழிச்சாட்டியம் செய்துகொண்டிருப்பது என் ஆர் ஐ இலக்கிய ஆர்வலப் பெண்கள்தான். என் ஆர் ஐ இலக்கிய ஆர்வ ஆண்கள் எவ்வளவோ ஸ்மார்ட்.

ஜெமோ என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. ஜெமோ வுடன் பாரதி பாஸ்கரும் , ஹெச் ராஜாவும் ஒரு உரையாடல் நிகழ்த்தி இருப்பார்கள். அந்த உரையாடல் முழுக்க பாரதி பாஸ்கர் கண்களிலும் , ஹெச் ராஜா கண்களிலும் காதலும் மரியாதையும் தளும்பிக்கொண்டே இருக்கும். உடலின் ஒவ்வொரு செல்லும் தளும்பிக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். ஏதேனும் பொங்கி தலையுச்சி வழியாக வழிந்துவிடுமோ என்று கூட நினைத்தேன். ஒரு எழுத்தாளரை எப்படி மரியாதையுடன் அணுகி உரையாட வேண்டும் என்பதற்கு அந்த உரையாடல் ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு எழுத்தாளர் எத்தனை ஆண்டு காலம் எழுதியும் படித்தும் ஒரு ஆளுமையாக உருவெடுக்கிறார் ? அவரிடம் உரையாடல் செய்பவருக்கும் இலக்கியப் பரிச்சயமும் , தகுதியும் வேண்டும் அல்லவா ? இனி அனைத்து எழுத்தாளர்களும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்தால் நல்லது. யார் எவர் என்று எதுவும் புரியாமல் ஒத்துக்கொள்ளக்கூடாது.

இந்த நேரத்தில் ஃபாத்திமா பாபு நினைவுக்கு வருகிறார். அனைத்து எழுத்தாளர்களிடமும் பெரும் மரியாதையுடன் உரையாடல் நிகழ்த்துவார். எதிர்க் கேள்விகள் , மாற்றுக் கருத்துகள் முன்வைப்பார். ஆனால் அந்த அணுகுமுறையில் ஒரு மரியாதையும் ,முதிர்ச்சியும் இருக்கும். நான்கு புத்தகங்கள் படித்து விட்டதாலேயே , நாம் ஒரு ஆளுமை என பலர் நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு எழுத்தாளருடன் உரையாடுவதற்கும் நம் தகுதியையும் , அதற்கான திறமையையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தப் பெண்மணி சாருவிடம் இன்னொரு கேள்வி கேட்கிறார். “ஜீரோ டிகிரியை என்னை வருத்திக்கொண்டு படித்தேன். இந்த மாதிரி விஷயங்களை , இந்த மாதிரி பட்டவர்த்தனமா எழுதித்தான் ஆகணுமா ? “

இதே போல அந்த கேள்வி முழுக்க “இந்த மாதிரி “ கள் தான். எந்த மாதிரி விஷயங்கள் ? சாரு நிவேதிதா இந்த நிகழ்வு சம்மந்தமாக எழுதியுள்ள கட்டுரையில் , “தயிர்வடை சென்சிபிலிட்டி” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார். இது தயிர்வடை சென்ஸிபிலிட்டி கூட அல்ல, நான்கு நாட்கள் ஊற வைத்த அக்மார்க் ஆவின் தயிர்வடை .